tamilnadu

img

8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மீண்டும் போராட்டம்

திருவண்ணாமலை, ஜூன் 3-ஐந்து மாவட்ட விவசாயிகள்  ஒட்டுமொத்தமாக பாதிக் கப்படும் நிலையில் 8 வழிச் சாலை திட்டத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த தடை உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் 8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சென்னை-சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்கப்படுவதை கண்டித்து, விவசாயிகளும், விவசாய சங்கங்களும், 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் மற்றும் அரசியல் கட்சியினரும், பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தி வந்தனர்.  தாய் மண்ணை, மலையை,வனத்தை, நீராதாரத்தை பாதுகாக்க தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து இயக்கங்களை நடத்தினர். 8 வழிச் சாலை அமைப்பதை கண்டித்து, கருப்பு கொடி போராட்டம், எதிர்ப்பு பேரணி, கையெழுத்து இயக்கம், சாலை மறியல், கிராம சபைகளில் முற்றுகை போராட்டம் என பல்வேறு இயக் கங்கள் நடத்தப்பட்டது.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருவண்ணாமலை முதல் சேலம் வரையிலான  நடைபயணம் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.   கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  நடை பயணத்திற்கு தலைமை தாங்கினார். இதன் பின்னணியில், கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி   எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது  என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்நிலையில், ஆயிரக் கணக்கான விவசாயிகள் பாதிக் கப்படும் 8 வழிச் சாலையை கொண்டு வர துடிக்கும் மத்திய, மாநில அரசை கண்டித்து செவ்வாயன்று (ஜூன் 4)   திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும், தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்தும் முடிவுகள் எடுக்கப் பட்டு உள்ளதாக 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு  நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

உண்ணாநிலை போராட்டம்
சேலம் மாவட்டத்தில் 8 வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நாழிக்கல் பட்டி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளனர். கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக உத்தமசோழபுரம், ராமலிங்கபுரம், ஆச்சாங்குட்டப்பட்டி, நாழிக்கல் பட்டி உள்பட 16 கிராமங்களில் உழவர் உற்பத்தியாளர் பேரியக்கம் சார்பாக உண்ணா நிலைப் போராட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் மண்ணை கட்டியணைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.இப்போராட்டத்திற்கு நாழிக்கல்பட்டியில் சங்கத் தலைவர் கந்தசாமி, ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்வராஜ், ஆச்சாங்குட்டப்பட்டியில் ஒருங்கிணைப்பாளர்கள் வி.செல்வராஜ், அய்யந்துரை, ராமலிங்கபுரத்தில் பொருளாளர் சிவகாமி, ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோரும், உத்தம சோழபுரத்தில் நிர்வாகிகள் ரமேஷ், மணிகண்டன், அயோத்தியாப் பட்டணத்தில் செயலாளர் நாராயணன் ஆகியோரும் தலைமை தாங்கினர்.

;