tamilnadu

5 பேர் தற்கொலைக்கு காரணமான சுந்தரம் நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் மனு

திருவண்ணாமலை, ஜூன் 12- திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லூர் ஒன்றியம், இமாபுரம் கிராமத்தில் வசிப்பவர் கண்ணன். இவரது மகன் சீனு. இவர், ஆரணி சுந்தரம் நிதிநிறுவனத்தில் லாரி வாங்க கடன் பெற்றுள்ளார். அதில் 16 தவனைகள் பணம் கட்டியுள்ளார். ஆனால்,  3 தவணைத் தொகை கட்டாததால் சுந்தரம் நிதிநிறுவனம் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்து சீனு  அவரது மனைவி விஜய லட்சுமி, மகன் ரித்திக் ரோஷன், மகள்கள் தீவதர்ஷினி, பிரிதிஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சீனுவையே குற்றவாளியாக்கி, முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுந்தரம்  நிதிநிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், கடன் தொகையை உடனே வழங்கக் கோரி சீனுவை கேவலமாகவும், அவரது மனைவியை ஆபாசமாகவும்  திட்டியதால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக  சீனுவின் சகோதரர் மஞ்சுநாதன், தங்கை கிருஷ்ணவேனி ஆகியோர் கூறுகின்றனர். இது பற்றி அறிந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் தகவல் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து  தற்கொலைக்கு தூண்டியதாக பிரிவு மாற்றம் செய்யப்பட்டு, சுந்தரம் நிதி நிறுவன நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த சீனு தனக்கும் கடன் தர வேண்டும் எனக் கூறி  துரைராஜி என்பவர் அவரின் லாரியை எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சுந்தரம் நிதி நிறுவன நிர்வாகிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சீனுவின் சகோதரி கிருஷ்ணவேணி மாவட்ட கண்காணிப்பாளரிடம் செவ்வாயன்று (ஜூன் 11) புகார் மனு அளித்துள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி, சிபிஎம் நிர்வாகிகள் பாலமுருகன், ராமதாஸ், வழக்கறிஞர் எஸ்.அபிராமன் ஆகியோர் இருந்தனர்.  

;