tamilnadu

img

‘முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ்’ எனும் பகுதியை 10ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மறைக்க திடீர் உத்தரவு

திருப்பூர்:
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “ஆர்எஸ்எஸ் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தது” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை தாளிட்டு மறைத்து ஒட்டும்படி கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக தமிழக அரசு அவ்வப்போது தன்னை வெளிப்படுத்திவருகிறது.  அதன் ஒரு பகுதியாக இப்போது,பாடப்புத்தகத்தில் பதிவாகி இருக்கும் உண்மை வரலாற்றை மறைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளது.

திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.இதில், பி.சந்திரசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் பாடம் தொகுதி-2 பக்கம் 50-ல், “அதேபோன்று இந்து மகாசபை மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் (RSS) ஆகியன முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன” என்றும், இதுபோன்று ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது என வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேசமயம் இந்த வழக்கின் மீது நீதிமன்ற விசாரணையோ, இடைக்காலத் தடையோ, தீர்ப்போ வழங்கியதாக எந்த விபரமும்குறிப்பிடப்படவில்லை. யாரோ ஒருவர் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார் என்ற ஒரேயொரு காரணத்தை ஆதாரமாகக் கொண்டு, மாநில கல்வித்துறை அவசர, அவசரமாக 10ஆம் வகுப்புப் புத்தகத்தில் மேற்கண்ட பகுதியை தாளிட்டு மறைத்து ஒட்டப்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.அந்த உத்தரவையும் யாரேனும் அமல்படுத்தாமல் போனால் என்னாவது என்று கருதி, மாவட்ட கல்வி அலுவலர் தமது கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் இந்த பகுதி தாளிட்டு மறைத்து ஒட்டப்பட்டுள்ளது என்று கையொப்பம் இட்டு சான்றளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள் ளது. அத்துடன் ஒவ்வொரு பள்ளியும் தமது பள்ளியில் அனைத்து புத்தகங்களிலும் இந்த பகுதி தாளிட்டு மறைத்து ஒட்டப்பட்டுவிட்டது என பள்ளி முத்திரை, தலைமை ஆசிரியர் கையெழுத்திட்டு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.அதுவும் இந்தப் பணி எக்காரணம் கொண்டும் தாமதமாகிவிடக்கூடாது என ஜனவரி 28ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலருக்கு சான்றினை அனுப்பி வைக்க வேண்டும், எவ்வித காலதாமதமுமின்றி உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடப்புத்தகத்தில் அச்சில் ஏறியுள்ள பகுதியை தாளிட்டு மறைத்து ஒட்டுவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் மீதிருக்கும் ரத்தம் தோய்ந்த வரலாற்றுக் கறையை நீக்கிவிட முடியாது. ஆனால் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அந்த ரத்தக் கறையை பசையை ஒட்டி மறைக்கப் பார்க்கிறது. வரலாற்றை திரித்துப் புரட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் துணை போய் இருக்கிறது.உண்மை வரலாற்றைத் திரிக்கும் இந்த இழிவான முயற்சியை தமிழக கல்வித்துறை உடனடியாக கைவிட வேண்டும் என்று கல்விஆர்வலர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

;