tamilnadu

ஆன்லைன் உணவு விநியோக இளைஞருக்கு சரமாரி அடி

திருப்பூர், ஏப்.14 –திருப்பூரில் ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் இளைஞர் குடிபோதையில் வாகன விபத்தை ஏற்படுத்தியதுடன் தாக்குதல் நடத்தியதால் அவரை பலர் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். திருப்பூர் பின்னி காம்பௌன்ட் வீதியில் இருந்து உணவு டெலிவரிக்காக ஸொமெட்டோ நிறுவன டெலிவரி இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் விரைந்து வந்தார். குமரன் சாலை வளைவில் திரும்பியபோது அவ்வழியாக வந்த காரில் மோதிவிட்டார். இதையடுத்து இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஸொமெட்டோ நிறுவன இளைஞர் மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டியது தெரியவந்தது. பரஸ்பரம் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதைக் கவனித்து பொதுமக்கள் தடுக்க முற்பட்டனர். அவர்களையும் அந்த இளைஞர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அனைவரும் சேர்ந்து கொண்டு ஆன்லைன் உணவு விநியோக இளைஞரை சரமாரியாகத் தாக்கினர். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அங்கிருந்த தனியார்நிறுவன காவலாளிகள் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.இதுபோல் ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் கமிஷன் அடிப்படையில் இளைஞர்களை வேலை வாங்குவதால், கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகின்றனர். அதேசமயம் இந்த பணியாளர்களுக்கு கடுமையான வேலைப்பளு உள்ளது. எனவே மிக வேகமாக வாகனம் ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதுடன், கடும் மனஅழுத்தத்துக்கும் உள்ளாகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில்தான் மேற்படி தகராறில் சிக்கும் நிலை ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. 

;