india

img

பாஜக எம்எல்ஏ-வுக்கு சரமாரி அடி; சட்டை கிழிப்பு.... பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆவேசம்....

சண்டிகர்:
விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக தலைவர்களின் வீடுகள் முன்பான போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்ததாக பஞ்சாப் மாநில பாஜக பிரமுகர்களைப் புறக்கணிப்பு செய்யும் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, பஞ்சாப் மாநிலம், முக்த்சர் மாவட்டம் ‘மாலவுட்’ பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அருண் நரங் என்பவர், சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது விவசாயிகளுக்கு தெரியவந்தது.இதையடுத்து, செய்தியாளர் சந்திப்பு நடக்கும் இடத்தில் குவிந்த விவசாயிகள், எம்எல்ஏ அருண் நரங் வந்தவுடனேயே அவரை சூழ்ந்துகொண்டு, அவர் மீதும் அவரது கார் மீதும் கறுப்பு மையை ஊற்றித் தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்பாராத அருண் நரங், அருகிலுள்ள தேநீர் கடைக்குள் ஓடி தப்பித்தார். எனினும் அவர் மீண்டும் வெளியே வரும்வரை காத்திருந்த விவசாயிகள், போலீசார் அவரை வெளியே அழைத்து வந்ததும், மீண்டும் சரமாரியாக அடித்துத் தாக்கினர். ஆடைகளையும் கிழித்தெறிந்தனர். இந்தச் சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாகவே பாஜக தலைவர்கள் வெளியில் சகஜமாக நடமாட முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.