tamilnadu

img

எல்லா துறைகளிலும் மோடி அரசு தோல்வி! ராணுவத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு வெற்றி பெற இழிமுயற்சி இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி தாக்கு

திருப்பூர், ஏப். 8–

ஐந்தாண்டு கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்த மோடி அரசு, இந்திய ராணுவத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற இழிவான முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டிகூறினார்.திருப்பூரில் திங்களன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுதாகர் ரெட்டி மேலும் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தங்கள்தோல்வியை மூடி மறைப்பதற்காக, புல்வாமாவில் பாதுகாப்புப் படையினரின் மகத்தான உயிர் தியாகத்தின் பின்னால் ஒளிந்து கொள்கின்றனர். பால்கோட்டில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் செயலை பாஜக இழிவான முறையில் அரசியல்படுத்துகிறது.இத்துடன் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது இவரது ஆட்சிக் காலத்தில் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தும் இந்துத்துவ மத வெறியர்களுக்கு பாஜகவினர் நேரடியாக ஆதரவு தருகின்றனர். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கொலைபாதக செயலில்ஈடுபட்டவர்களுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆதரவாக கருத்துத் தெரிவிக்கிறார். உச்சநீதிமன்றம் பசுப் பாதுகாப்புகொலைகார குண்டர்கள் மீதுநடவடிக்கை எடுக்கச் சொன்னபோதும் மோடி ஆட்சி நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்தது. தபோல்கர், கல்புர்கி, கோவிந்த்பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற அறிவுஜீவிகள் படுகொலை செய்யப்பட்ட விசயத்திலும் மோடி வாய் திறக்கவில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லை.

புல்வாமா தாக்குதலுக்கு மோடி அரசும் காரணம்

புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் 1400 பேர் முகாம்களுக்குத் திரும்ப விமான வசதி வேண்டும் எனக் கேட்டபோது மத்திய அரசு மறுத்துவிட்டது. எனவே சாலை வழியாக போகும்போது பயங்கரவாத தாக்குதல்நடத்தி 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு மோடி அரசும் மறைமுகக் காரணமாகும். பிரதமர் மோடியும், பாஜக அரசும் இந்திய ராணுவத்துக்கும், வீரர்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டு தங்கள் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துகின்றனர்.தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக தன்சுயேட்சைதன்மையை இழந்துவிட்டது. அமைச்சர்கள் ஊழல் செய்ததை பயன்படுத்தி வருமானவரித் துறை சோதனை என்று மிரட்டி பாஜக அவர்களை அடிபணிய வைத்துவிட்டது. பாஜகவின் கைப்பாவையாக அதிமுக செயல்படுகிறது.

கம்யூனிஸ்ட்டுகளின் தேவை

எனவே இந்த தேர்தலில்மோடியையும், பாஜகவையும், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசைப் போலவே எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியப் பங்குண்டு. அரசின் குறைபாடுகளை, தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு, மக்கள் பிரச்சனைகளை எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் பங்கு அவசியம். இந்நிலையில் நாட்டில் உழைப்பாளிகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், நலிவடைந்த பிரிவினரின் நலன்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்க கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பூபேஷ்குப்தா, இந்திரஜித் குப்தா போன்றோர் மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளாக ஜனநாயகத்தை செழுமைப்படுத்தி உள்ளனர்.தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக ஆளும் கட்சியின் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று பேசிய யோகி ஆதித்யநாத் போன்றோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் பாராமுகமாக உள்ளது.

தேர்தல் விதி மீறல்

தமிழகத்தில் காவல் துறையினர் தபால் வாக்குகள் செலுத்தும் படிவத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்து கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும். ஆனால் அந்த துறையின் உயர் அதிகாரிகள் காவலர்களிடம் வேட்பாளரைத் தேர்வு செய்யாமல் கையெழுத்து மட்டும் போட்டுத் தரும்படி வாக்குப் படிவங்களை வாங்கி வைத்துக் கொள்வதாக தகவல் வருகிறது. இது அப்பட்டமான தேர்தல்விதிமீறல் ஆகும். இதில் தேர்தல்ஆணையம் தலையிட்டு கையெழுத்திட்ட படிவங்களை கைப்பற்றுவதுடன், காவலர்களின் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றார்.இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்த அணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சுதாகர்ரெட்டி கேட்டுக் கொண்டார்.இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், மூர்த்தி,ரவி, பாலசுப்பிரமணியம், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


;