tamilnadu

img

கட்டாய ஓய்வில் வெளியேற்ற திட்டமா? பிஎஸ்என்எல் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப். 12 -விஆர்எஸ் என்ற பெயரில் கட்டாய ஓய்வூதியத் திட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகளை வெளியேற்றிவிட்டு, இந்த பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய பாஜக அரசு முயல்வதாகக் கூறி, பிஎஸ்என்எல் சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் பிரதான தொலைபேசி நிலைய வளாகத்தில் வெள்ளியன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை ஏற்றார். என்எப்டிஇ சங்கச் செயலாளர் ஜான் சாமுவேல், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது ஜாபர், மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி பா.சௌந்தரபாண்டியன், பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க நிர்வாகி சம்பத்குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும். விஆர்எஸ் என்ற கட்டாய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

;