tamilnadu

கூடா நட்பு கேடில் முடிந்தது

திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் அவர்களின் வாக்கு சேகரிப்பு நிகழ்வு கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று அந்தியூர் பகுதியில் நடைபெற்றது.இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் எதிர்பார்த்த அளவு கூட்டமோ உற்சாகமோ காணப்படவில்லை.இதற்கு காரணம் “பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தது தான்”. “கூடாநட்பு” அதிமுகவிற்கு தற்போது “கேடாய்” முடிந்துள்ளது.நாடு முழுதும் மோடி எதிர்ப்பு புயல் தாறுமாறாக வீசிவரும் நிலையில் தமிழகத்தில் அதன் தாக்கம் மிகவும் தீவிரமாக உள்ளதை காணமுடிகிறது. இந்த நேரத்தில் “வயிறு ஜீரணம் ஆகாமல் புளித்த ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் போது பிரியாணி சாப்பிட்டால் என்னவாகும்” என்பது போல பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதானது தமிழக மக்களுக்கும் பிடிக்கவில்லை, அதிமுகவின் உண்மை விசுவாசிகளுக்கும் பிடிக்கவில்லை.செய்த சாதனைகளைச்சொல்லி ஓட்டுக்கேட்க முடியாமல் வேட்பாளர் வாகனத்தில் இருந்த ஒலிபெருக்கி பிரச்சாரகர்கள் திரும்பத்திரும்ப மீண்டும் மீண்டும் “எலக்சன் முடிந்தவுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இரண்டாயிரம் வழங்கப்படும், மறந்துவிடாதீர்கள் மக்களே” என்று கூறி மக்களிடம் பரிதாபமாக ஓட்டுக்கேட்டதை பார்க்கமுடிந்தது.அனேகமாக இவர்களின் பிரச்சார நோக்கம் என்பது ஏதோ தமிழக மக்கள் பணத்திற்காக ஏங்குவது போலவும், பணத்தாசை காட்டினால் மக்கள் ஓட்டுப்போட்டுவிடுவார்கள் என்ற கற்பனைக் கனவில் மிதப்பதைத்தான் காட்டியது. ஆக மக்களை நம்பி இருக்காமல் பணத்தை நம்பியே இவர்கள் இருக்கிறார்கள் என்பதை இவர்களின் பிரச்சாரம் தெளிவுபடுத்தியது.ஆனால் இங்கு களநிலவரம் வேறுமாதிரி இருக்கிறது.


கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட அந்தியூர் திங்கள் வாரச்சந்தை வியாபாரிகளிடம் திமுக கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு “கதிர் அரிவாள்” சின்னத்தில் வாக்களிக்கக்கோரி கொளுத்தும் வெயிலில் கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் நாமும் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டோம்.இந்நிலையில் துண்டறிக்கைகளை பொதுமக்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் மத்தியில் நேரில் கொடுத்து ஆதரவு கேட்டோம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒருவர்கூட திமுக கூட்டணிக்கு எதிராக மாற்றுக்கருத்தோ, எதிர்ப்பு குரலோ தெரிவிக்கவில்லை என்பதுதான். பெரும்பான்மையோர் ஒரே கருத்தாக “ இந்த மோடி ஆகாதுங்க, மோடியை வீட்டுக்கு அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம், நீங்க எங்களை கேட்கவே தேவையில்லை நாங்க உங்களுக்குத்தான் ஓட்டுப்போடுவோம்” என்று கூறியது எங்களை வியப்பில் ஆழ்த்தியது.நாட்டு மக்கள் மீதான ஈவு இரக்கமற்ற மோடியின் கொடூரத்தாக்குதலான பணமதிப்பிழப்பு நடவடிக்கை அந்தியூர் சந்தை வியாபாரிகள் மட்டுமல்ல பொதுமக்களையும் மிகக் கடுமையாக தாக்கியுள்ளதையே இந்த நிகழ்வு காட்டியது.


ஒரு வயதான பெண்வியாபாரி “இது அதிமுக கூட்டணி நோட்டீசா? திமுக கூட்டணி நோட்டீசா?” என்று கேட்டார். நாம் இது திமுக கூட்டணி நோட்டீசும்மா என்றவுடன் “ஆமா! அதிமுக கூட்டணி நோட்டீசுன்னா நான் வாங்கவே மாட்டேன், எங்க வியாபாரத்தையே தொலைச்சவங்க அந்த மோடி கூட்டம், அவங்களுக்கு நான் ஓட்டுப்போடவும் மாட்டேன், அவங்க நோட்டீசையும் வாங்க மாட்டேன், இந்தமுறை உங்களுக்குத்தான் என்ஓட்டு போங்க” என்றார்.விசைத்தறி கைத்தறி தொழில் மையமான அந்தியூர் தவுட்டுப்பாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் மத்தியில் மோடி அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கடுமையான பாதிப்பானது மோடி எதிர்ப்பு அலையின் விஸ்வரூபமாக மாறி நிற்கிறது. தவுட்டுப்பாளையத்தில் உள்ள முக்கிய விசைத்தறி உரிமையாளர் ஒருவர் நம்மிடம் பேசும்போது “தயவுசெய்து எப்படியாவது இந்த மோடியை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புங்கள், அப்பத்தான் நாங்க தப்பித்து கொஞ்சம் நிம்மதியாக மூச்சாவது வாங்கமுடியும், சிறு உற்பத்தியாளர்களை ஒன்னுமில்லாம பன்னிட்டாரு இந்த மனுசன்” என்றார் வேதனையுடன்.கடை வியாபாரம் மற்றும் மோட்டார் தொழில் செய்யும் இன்னொரு நண்பர் “ஐநூறு ஆயிரம் நோட்டு செல்லாதுன்னு எப்ப மோடி அறிவிச்சாரோ, அப்ப படுத்த என் மோட்டார் தொழில் இன்னும் மீளவில்லை, இந்தமுறை மோடிக்கு ஓட்டுப்போட்டா ஓட்டாண்டி ஆவதைத்தவிர வேறுவழியில்லை” என்றவர் “கோபத்துடன் வியாபாரிகளும் இதையேதான் வழிமொழிகிறார்கள்” என்றார்.அந்தியூர் ஒன்றியத்தின் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு, சாக்கடை என அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.


குறிப்பாக பெண்கள் வேலை இல்லாமல் வாழ்க்கையில் வேதனைப்படுவதை வெளிப்படுத்தியதுடன், நூறுநாள் வேலையை முழுமையாக கொடுக்காமல், அதற்கான போதிய நிதி ஒதுக்காமல், வேலை செய்த நாட்களுக்குக்கூட சரியாக ஊதியம் வழங்காமல் முடக்கிப் போட்டுள்ள மோடி எடப்பாடி அரசுகளின் மீது கோபத்தில் உள்ளனர். “மோடியோடு சேந்துட்டு வர்ர அதிமுகவுக்கு நாங்க ஓட்டுப்போடவே மாட்டோம்” என்று கிராமப்புறத்து பெண்கள் கூறுகின்றனர்.அந்தியூர் பேரூராட்சி வார்டுகளில் மக்களை சந்தித்தபோது அதிமுக அரசால் பலமடங்கு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதும், வீட்டுவரி, குப்பைவரி, தொழில்வரி என அனைத்து வரிகளும் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளதும், கேபிள் கட்டணம் மாதம் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு மேல் செலுத்தும் சூழ்நிலை உள்ளதுமான கடுமையான பாதிப்பானது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வியாபாரிகள், பொதுமக்கள் மனதில் கடும் அதிருப்தியடைய வைத்துள்ளது. அவர்கள் அதிமுகவை ஆதரிப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.அந்தியூர்-அம்மாபேட்டை ஒன்றியங்கள் கடும் வறட்சியை சுமந்து வானம்பார்த்த பூமியாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. குடிநீருக்கே திண்டாட்டமான சூழ்நிலைதான் இங்கு நிலவுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்களின் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வுகாண மேட்டூர் - பவானிசாகர் அணைகளின் உபரிநீரை இப்பகுதிக்கு கொண்டுவரும் திட்டம், மணியாச்சித்திட்டம், வழுக்குப்பாறைத்திட்டம், வேதப்பாறைத்திட்டம், தோணிமடுத்திட்டம், கரும்பாறை தடுப்பணைத்திட்டம் என பல நீராதார திட்டங்கள் ஏட்டளவில் எழுதப்பட்டு பல ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் உள்ளது.


மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக - அதிமுக அரசுகள் அந்தியூர் பகுதிக்கான மேற்கண்ட திட்டங்களைப்பற்றி எவ்வித கவலையும் கொள்ளாமல் மாற்றாந்தாய் பார்வையோடு இருப்பதானது விவசாயிகள் மத்தியில் ஒரு பெரும் அதிருப்தி மனக்குமுறலை ஏற்படுத்தி உள்ளது. மணியாச்சித்திட்ட ஆய்வுக்கு பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக சார்பில் தட்டி விளம்பரம் மட்டும் செய்யப்பட்டது.அதனால் இப்பகுதி விவசாயிகளின் ஓட்டுகள் அதிமுக அணிக்கு எட்டாக்கனியாகவே ஆகிவிட்டது. கடந்த காலங்களில் இப்போதுள்ள திமுக கூட்டணி கட்சிகள் இத்திட்டங்கள் குறித்து தொடர்ந்து பேசியும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் என்று இயக்கங்கள் நடத்தியும் வந்துள்ளன. அதனால் இந்த அணி வேட்பாளர் வெற்றி பெற்றால் இந்த நீராதார திட்டங்கள் உயிர்பெற நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் கொடுப்பார் என்று விவசாயிகளும் பொதுமக்களும் நம்பிக்கையுடன் திமுக கூட்டணியை பார்க்கின்றனர்.எதார்த்த நிலை இப்படி இருக்கும் போது, மோடி எதிர்ப்பு புயல் பலத்த வேகத்துடன் மக்கள் மத்தியில் வீசியடிக்கும் போது, அடிப்படையில் மக்களை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு, கொழுந்து விட்டு எரியும் நெருப்பை ஒருகுடம் தண்ணீரைக் கொண்டு அணைக்க முற்படுவதைப்போல் “தேர்தல் முடிந்தவுடன், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்படும்” என அழும் குழந்தைக்கு ஐஸ் வாங்கி கொடுத்து சமாதானம் செய்வது போல் மக்களை சமாதானம் செய்ய அதிமுக பாஜக கூட்டணி முயற்சிக்கிறது.எதேச்சையாக நாம் சந்தித்த ஆசிரியர் ஒருவர் “இந்த தொகுதியில் கதிர் அரிவாள் தான் முன்னணியில் உள்ளது போல் தெரிகிறது சார்” என்றார் பூடகமாக...எனவே நிச்சயம் “இரண்டாயிரம் ரூபாய் அறிவிப்பானது இரட்டை இலையை கரைசேர்க்காது” என்பது நிதர்சனமான உண்மை. திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றியை அந்தியூர் பகுதி மக்கள் உறுதி செய்து விட்டதாகவே கள நிலவரம் நமக்கு காட்டுகிறது.      


   -அந்தியூர் சி.முருகேசன்

;