tamilnadu

img

குடியுரிமை திருத்த மசோதா எரிப்பு திருப்பூரில் மாணவர்கள் ஆவேசம்

புதுதில்லி, டிச. 12-

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவுக்கு எதிராகவும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் நாடு முழுதும் வரும் டிசம்பர் 19 அன்று அகில இந்திய எதிர்ப்புதினம் அனுசரித்து, கண்டனம் முழங்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரத பிஸ்வாஸ் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவை நிறைவேற்றி இருக்கின்றன. இந்தச் சட்டமுன்வடிவு, இந்திய அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் மீறியிருக்கிறது என்றும், இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக  அடித்தளங்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதைக் குறியாகக் கொண்டிருக்கிறது என்றும் கருதுகிறோம்.

இடதுசாரிக் கட்சிகள், மதச்சார்பின்மைக்கு நேர் மாறான முறையில் தனிநபரின் மத நம்பிக்கையுடன் குடியுரிமையை இணைத்திடும் இந்தச் சட்டமுன்வடிவினை கடுமையாக எதிர்க்கின்றன.

நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் ஆபத்தான முறையில் கேடு பயக்கும் இந்தச் சட்டமுன்வடிவானது, நாட்டில் மத வெறி அடிப்படையில் மக்களை மேலும் பிளவுபடுத்திடுவதைக் குறியாகக் கொண்டதாகும்.

நாடு முழுவதற்கும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டு நடைமுறை விரிவாக்கப்படும் என்று மோடி-ஷா பாஜக அரசாங்கம் பிரகடனம் செய்திருப்பதுடன், இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டிருப்பது என்பது, தற்போதைய இந்தியக் குடியரசின் அடித்தளமாக இருக்கக்கூடிய, மதச்சார்பற்ற ஜனநாயகத்தை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் சித்தாந்தமான “இந்துத்துவா ராஷ்ட்ரம்”-ஆக, மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும்.

2019 டிசம்பர் 19 அன்று குடியுரிமை திருத்தச் சட்டமுன்வடிவு – தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடுமாறு நாடுமுழுதும் உள்ள அனைத்துக் கிளைகளுக்கும் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுக்கின்றன.   

இதே நாளன்றுதான், 1927 டிசம்பர் 19 அன்று, விடுதலைப் போராட்டத்திற்காக இந்திய மக்களைத் தட்டி எழுப்பி அறைகூவல் விடுத்த சர்பியோசி கி தமன்னா (Sarfiaoshi Ki Tamanna) என்னும் போராட்டத்தை நடத்திய ராம் பிரசாத் பிஸ்மில், கோரக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவருடன் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அஷ்ஃபாகுல்லா கான், ஃபைசாபாத் சிறையிலும், ரோஷன் சிங், நைனி சிறையிலும் தூக்கிலிடப்பட்டார்கள். தங்களின் மத வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று போராடிய இந்த ஒற்றுமைதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற வழி வகுத்தது. இன்று, இத்தகைய ஒற்றுமையை, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

(ந.நி.) 

ReplyReply allForward

;