tamilnadu

img

சாலையோர வியாபாரிகளை கந்துவட்டியில் இருந்து மீட்கவேண்டும் கூட்டுறவு கடன் வழங்க சிஐடியு மாநாடு கோரிக்கை

திருப்பூர், மே 30 -சாலையோர வியாபாரிகள் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி தவித்து வரும் நிலையில், அவர்களின் பிடியில் இருந்து மீட்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 7ஆவது மாநாடு கோரியுள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே பி.ஆர்.நிலையத்தில் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மாநாடு வியாழனன்று சங்கத் துணைத் தலைவர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டை சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் சி.மூர்த்தி தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பி.பாலன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார், பொருளாளர் கே.ராமர் வரவு செலவு அறிக்கை முன்வைத்தார். இம்மாநாட்டில் சாலையோர வியாபாரிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.திருப்பூரில் சாலையோர வியாபாரிகளை காவல் துறை, மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர்களுக்கு உரிய மாற்று இடம் வழங்கப்படவேண்டும். மாநிலத் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு சட்டத்தில் வழிகாட்டியபடி அடையாள அட்டை வழங்க வேண்டும். நகரை அழகுபடுத்துவதாக வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது. நகர்ப்புற உள்ளாட்சி, பேரூராட்சிகளுக்கு தனி சட்டமியற்றி மத்திய சட்டத்துடன் இணைக்க வேண்டும். பண்டிகை காலத்தில் சாலையோர வியாபாரிகளை இடையூறு செய்யக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இம்மாநாட்டில் புதிய தலைவராக பி.முருகேசன், துணைத் தலைவர்களாக அயித்தம்மாள், நாசர், சிட்கோ கே.மணி, மாவட்டச் செயலாளர் பி.பாலன், துணைச் செயலாளர் ஏ.நடராஜ், கோபால், எஸ்.தனலட்சுமி, பொருளாளர் கே.ராமர் ஆகியோரும், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 12 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். 

;