tamilnadu

காசோலை மோசடி வழக்கு: தம்பதிக்கு 6 மாத சிறை தண்டனை

திருப்பூர், ஏப். 12 - திருப்பூரில் காசோலை மோசடி வழக்கில் தொடர்புடைய தம்பதியருக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கொங்குநகர் பிரதான சாலையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர். அவிநாசி சாலையை சேர்ந்தவர் கேசவ ராமனுஜம், அவரது மனைவி அருமைச்செல்வி. இவர்கள் அப்பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வந்தனர். அப்போது இவர்கள் ரூ.18 லட்சத்து 76 ஆயிரத்து 780-க்கு ஆயத்த ஆடைகளை பாலகிருஷ்ணனிடம் வாங்கினர். இதற்கான பணத்தை வழங்காமல் இழுத்தடித்து வந்ததாகத் தெரிகிறது. இதன் பின்னர் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்து நூற்றுக்கும், ரூ. 2 லட்சத்து 25 ஆயிரத்து 780க்கும் என இரு காசோலைகளை பாலகிருஷ்ணனுக்கு தம்பதியர் வழங்கி உள்ளனர். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என காசோலையை வங்கி நிர்வாகம் திரும்பி அனுப்பியது.இதனால் ஏமாற்றம் அடைந்த பாலகிருஷ்ணன், இது தொடர்பாக மேற்படி தம்பதியர் மீது குற்றவியல் நீதிமன்றம் எண் 2இல் இரு காசோலை மோசடி வழக்குகள் தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், குற்றவியல் நீதித்துறை நடுவர் பழனி வெள்ளியன்று வழங்கிய தீர்ப்பில், காசோலை மோசடி செய்த தம்பதிக்கு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தார்.இந்த தம்பதி மீது தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதை அடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

;