tamilnadu

பாதிரியார் சைமனின் கதை

பிரான்சில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பசி பட்டினியில் வாடி, தொழிலாளிகள் பிரபுக்களின் வீடுகளில், நிலங்களில் உழைத்துக்கொண்டிருந்தனர். செயின்ட் சைமன் என்கிற பாதிரியார் மக்களிடம், “கவலைப்படாதீர்கள்; மன்னர் நல்லவர், ராணி நல்லவர்” என்று கூறியதோடு மக்களின் குறைகள் குறித்து மன்னனுக்கு மனுக்கள் அனுப்பினார். அவற்றின் மீது  எந்த நடவடிக்கையும் இல்லாததால் மன்னனை நேரில் சந்திக்க மக்களை அழைத்துச் சென்றார். மன்னன் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டான். மிகுந்த வேதனையுடனும் விரக்தியுடனும் திரும்பியவர் ஒரு சிறு கதை எழுதினார்: “பிரபுக்கள் எல்லாம் சேர்ந்து இறைவனை வேண்டினர். இறைவன் இறங்கி வந்து என்ன வேண்டும் என்று கேட்டார். இந்த அழுக்கு மனிதர்களைஅழைத்துச் செல்லுங்கள் இவர்களிடம் சுத்தமில்லை என்றனர். சரி என அந்த ஏழை மக்கள் அனைவரையும் இறைவன் அழைத்துச் சென்றான். மறுநாள் பொழுது விடிந்தபோது பிரபுக்களுக்கு எடுபிடி வேலை பார்க்க ஆள் இல்லாமல் போனது. அப்போது வேலைக்காரர்களின் தேவையை உணர்ந்து மீண்டும் இறைவனிடம் வேண்டினர்.இறைவன் வந்தார். என்ன வேண்டும் என்று கேட்டார். அய்யய்யோ அவர்கள் அழுக்காக இருந்தாலும் பரவாயில்லை,உடனே கொண்டு வந்து விட்டு விடுங்கள் என்று கேட்டனர். சரி என ஏழைகள் அனைவரையும் கீழே இறக்கினார் இறைவன். இப்போது அந்த ஏழைகள் கூறினார்கள். இறைவா எங்களை கூட்டிச் சென்றதுபோல் இப்போது இந்த சோம்பேறி பிரபுக்களை அழைத்துச் செல்லுங்கள் என்றனர். இறைவனும் அவ்வாறே பிரபுக்களை அழைத்துக் கொண்டார். அன்றிலிருந்து அந்த சமூகத்தில் எல்லோரும் உழைத்தார்கள். எல்லோரும் சாப்பிட்டார்கள். பொய் இல்லை, களவு இல்லை, துன்ப துயரம் இல்லை. எல்லோரும் உழைத்து எல்லோரும் நிம்மதியாய் வாழ்ந்தார்கள்” என்று கதையை முடித்திருப்பார். கதையின் அர்த்தம் என்ன? தொழிலாளி இல்லாமல் முதலாளியால் ஒரு வினாடிகூட இருக்க முடியாது. ஆனால் முதலாளி இல்லாமல் யுகம் யுகமாக இந்த உலகம் இயங்கும்.
இதைத்தான் மார்க்ஸ் சொன்னார்... நீதான் சகலமும் எழு, விழி என்று தொழிலாளி வர்க்கத்தை அழைத்தார். 

திருநெல்வேலி மின் ஊழியர் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் அ.சவுந்தரராசன் பேசியதிலிருந்து...

;