tamilnadu

பாபநாசம் அணை நீர்மட்டம் 19 அடியாக குறைவு: நெல்லையில் குடிநீர் தட்டுப்பாடு

திருநெல்வேலி, ஏப்.20- பாபநாசம் அணையின் நீர்மட்டம் 19 அடியாக குறைந்துள்ளது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக 102 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. கோடைக் காலத்தில்வெப்ப சலனம் காரணமாகப் பெய்யும் மழையும் நிகழாண்டில் இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் 1221 கால்வரத்துக் குளங்களும், 1297 மானாவாரி குளங்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 518 குளங்கள் உள்ளன. வேளாண் துறையினரின் கணக்கெடுப்பின்படி 2400 குளங்கள் வறட்சியின் பிடிக்கு சென்றது தெரிய வந்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின்போது உயர்ந்த பிரதான அணைகளின் நீர்மட்டம், மிகவும் வேகமாக சரிந்து வருகிறது. ஏற்கெனவே வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் வறண்டு விட்ட நிலையில் இப்போது அடவிநயினார் அணை, நம்பியாறு அணை,குண்டாறு அணை மட்டுமன்றி மாவட்டத்தின் பிரதானஅணையான பாபநாசம் அணையும் வறண்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 19 அடியாகஇருந்தது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 47.60அடியாகவும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 77.45 அடியாகவும் இருந்தது. கடனாநதி- 28.60அடி, ராமநதி-25, கருப்பாநதி- 31.84, குண்டாறு-11.62, வடக்குப் பச்சையாறு-2.75, நம்பியாறு-11.10, கொடுமுடியாறு-2, அடவிநயினார்-10.75 அடி நீர்மட்டம் உள்ளது.அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் உறைகிணறுகளில் இருந்து நீரேற்றம் செய்ய முடியாததால் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர்த்தட்டுப்பாடு தொடங்கிவிட்டது.

;