கி.மு.411 - கிரேக்கத்தின் ஒரு நகர நாடான ஏதென்சில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில், மக்களாட்சி அகற்றப்பட்டு, ‘நானூறு(தி ஃபோர் ஹண்ட்ரட்)’ என்றழைக்கப்பட்ட, சிலவராட்சி(ஆலிகார்ச்சி) உருவானது. கிரேக்கத்தின் நகர ஆட்சிகள் போலிஸ் என்றழைக்கப்பட்டன. ஏதென்ஸ், அருகாமையிலிருந்த ஆட்டிகா பகுதி ஆகியவை இணைந்த போலிசில் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே மக்களாட்சி ஏற்பட்டுவிட்டது. உலகின் முதல் மக்களாட்சி இதுதான். இதைத் தொடர்ந்து பின்னாளில் மற்ற போலிஸ்களிலும் மக்களாட்சி ஏற்பட்டாலும், ஏதென்சின் மக்களாட்சி அளவுக்கு அவைபற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. மக்களாட்சிக்கு முன்பு ஏதென்ஸ், ஆர்ச்சான்கள்(ஆட்சியாளர்) அல்லது மாஜிஸ்ட்ரேட்டுகளால் ஆளப்பட்டது. தொழிலாளர்களை அடிமையாக வைத்திருந்த உயர்குடியினரிடையே கடுமையான அதிகாரச் சண்டையும் தொடர்ந்தது. பிளேட்டோவின் முன்னோரான சோலோன் தலைமை ஆர்ச்சானாக இருந்தபோது, உயர்குடியினரிடையேயான சண்டைகளை முடிவுக்குக்கொண்டுவர அடிமையாக இருந்த தொழிலாளர்களை விடுவிக்கவேண்டுமென்ற தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றார். ஒவ்வொரு சுதந்திர மனிதனுக்கும் அரசில் பங்கிருக்குமாறு குடிமகனுக்கான வரையறையை அவர் உருவாக்கியதுடன், குடிமக்கள் பங்கேற்கும் எக்லசியா அல்லது அசெம்ப்ளி என்னும் அவையையும் உருவாக்கினார். நான்கு பிரிவுகளாக(கவுன்சில்கள்) பிரிக்கப்பட்ட ஏதென்சின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 100 பிரதிநிதிகள்வீதம் அரசின் அன்றாடப் பணிகளில் ஈடுபடும் நடைமுறையையும் உருவாக்கி, ஏதென்சின் மக்களாட்சியைத் தொடங்கிவைத்தார் சோலோன். பின்னர் கி.மு.508இல் கிளைஸ்தினீஸ், கி.மு.462இல் எஃபியால்ட்டஸ் ஆகியோரும் ஏதென்சின் மக்களாட்சி அமைப்பினை மேம்படுத்துவதில் பங்களிப்புச் செய்தனர். கிரேக்க மொழியில் டெமோஸ் என்றால் மக்கள் என்றும், க்ரேட்டோஸ் என்றால் சக்தி என்றும் பொருள். மக்கள்சக்தி என்று பொருள்படும் டெமாக்ரசி என்ற சொல் கி.மு.440-430 காலத்தில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஹிரோடோட்டஸ்தான் தன் கவிதையில் முதன்முதலாக இச்சொல்லைப் பயன்படுத்தினார். மக்களாட்சிக்கு விசுவாசமானவர்கள் டெமாக்ரட் என்றழைக்கப்பட்டனர். கி.மு.431இலிருந்து ஸ்பார்ட்டாவுடன் ஏதென்ஸ் ஈடுபட்ட பெலப்பொனீஷியப் போரில், கி.மு.413இல் சிசிலியில் ஏற்பட்ட தோல்வி, போரினால் ஏற்பட்ட கடுமையான நிதிநெருக்கடி ஆகியவற்றால் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்ந்தாலும், கி.மு.404இல் மீண்டும் மக்களாட்சி ஏற்பட்டுவிட்டது.