tamilnadu

வாக்காளர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

புதுகை, ஏப்.16- 17வது மக்களவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் வாக்காளர் பெருமக்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்அன்பான வேண்டுகோள் விடுக்கிறது. இந்தியா ஜாதி, மதம், பிராந்திய, கலாச்சார வேறுபாடுகளை உட்படுத்தி இருந்தாலும் ஜனநாயகம் காத்து நிற்கிறோம். தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி அன்று பொதுத் தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம். இவ்வேளையில் இளம்வாக்காளர்களும், வாக்களிக்கும் அனைவருக்கும் கீழ்க்கண்ட அம்சங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்திய அரசியல் சாசனத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடித்து பாலின பேதம், சாதி, மதம் கடந்து வாக்களிக்க வேண்டுகிறோம். என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்னும் தாரக மந்திரத்தை மனதில் நிறுத்துவோம். அனைவரும் வாக்களித்து நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய வேண்டுகிறோம். 17வது மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுஅரசை அமைப்புக்கும் கட்சி அல்லது கூட்டணி வரவிருக்கும் ஐந்தாண்டுகளில் இந்திய மக்களின் நலன்களுக்காக பாடுபட வேண்டும். இந்திய மக்களின் கல்வி, சுகாதாரம்,வேலைவாய்ப்பு விவசாயம் தொழில் என எல்லாவற்றையும் தீர்மானிக்க வல்லது என்பதை அறிந்து வாக்களிப்போம்.மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றை பாதுகாக்கும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம். வேலைவாய்ப்பிலும், சுற்றுச்சூழலிலும் அறிவியல் பூர்வமாகவும், மக்கள் நலன்சார்ந்தும் செயல்படும் அரசை தேர்ந்தெடுக்க வாக்களிப்போம். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு , வளர்ச்சி ஆகியவற்றில் உண்மையான அக்கறையும் திட்டமும் கொண்டவர்களை தேர்ந்தெடுப்போம். தவறானவர்களை புறக்கணிப்போம். சரியான அவர்களுக்கு வாய்ப்பு அளிப்போம் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. மேலும் செவ்வாயன்று பிற்பகல் புதுக்கோட்டை பேருந்துநிலையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ் .டி. பாலகிருஷ்ணன் , மாவட்ட துணைத் தலைவர் எம். குமரேசன், தமுஎகச நகர பொருளாளர் கவிஞர்புதுவை புதல்வன் ஆகியோர் விழிப்புணர்வு கைப்பிரதிகளை பயணிகளுக்கு வழங்கினார்.

;