tamilnadu

பயிர்க் கடன் வழங்காததைக் கண்டித்துப் போராட்டம்

தஞ்சாவூர், செப்.27- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  விவசாயிகள் பேசியதாவது: திருவோணம் ஒன்றியத்தில் மூன்று ஆண்டுகளாக விவசாயிகள் பயிர் கடன் கேட்டு வருகின்றனர். ஆனால் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விவசாயிகளை அலட்சியப்படுத்திப் பயிர் கடன் வழங்கவில்லை. பயிர் கடன் பெறத் தகுதி இருந்தும் இதுநாள் வரை கடன் வழங்கவில்லை. இதனைக் கண்டிக்கும் விதமாக விவசாயிகள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளோம். புனல்வாசல் சவரிமுத்து: கஜா புயலில் சேதமடைந்த தென்னை மரங்களுக்குப் பல விவசாயிகளுக்கு இழப்பாடு தொகை கிடைக்கவில்லை. எனவே உடனடியாகத் தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார்: தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை நடைபெற்று வரும் நிலையில் மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். குடிமராமத்துப் பணியை மேற்கொண்ட பாசனதாரர்கள் சங்கத்தினர் ஜிஎஸ்டி வரி தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே குடிமராமத்துப் பணிக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.  நசுவினி ஆறு படுகை அணை விவசாயிகள் சங்கத் தலைவர் வா.வீரசேனன்: கல்லணைக் கால்வாய் ஆற்றைப் பராமரித்திட ரூ.2,158 கோடிக்குத் திட்ட மதிப்பீடு கடந்த காலங்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றால், மாநில அரசு தன்னுடைய நிதியைக் கொண்டு வரும் கோடைக் காலத்தில் புனரமைத்திட வேண்டும். கால்நடைகள் தற்போது பெருகி வருவதைக் கருத்தில் கொண்டு இனி வருங்காலங்களில் மேய்ச்சல் புறம்போக்கு, களம் ஆகியவற்றை இனி வீட்டு மனைகளாக யாருக்கும் பட்டா வழங்கக் கூடாது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன்: செங்கிப்பட்டி, பூதலூர் பகுதிகளில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் உடனடியாகத் தண்ணீர் திறக்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர்: அம்மையகரம், கள்ளபெரம்பூர், சூரக்கோட்டை ஆகிய பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் குறுவை நெற்கதிர்கள் மழைநீர் மூழ்கி வீணாகியது. இதற்குக் காரணம் வடிகால்கள் தூர்வாரப்படாதது தான், எனவே 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு வடிகால்களையும் தூர்வார வேண்டும்.  இவ்வாறு விவசாயிகள் தங்களது குறைகளைக் கூட்டத்திலும், மனுவாகவும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.