tamilnadu

img

ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி பழம், காய்கறிகள் வீணாகின்றன

தஞ்சாவூர், மே 5- இந்தியாவில் ரூ.2.40 லட்சம் கோடி மதிப்புள்ள பழங்கள், காய்கறிகள் வீணாகின்றன என்றார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார்.தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பக் கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது, "இந்தியாவில் 1960 ஆம் ஆண்டுகளில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உணவு தானியங்கள் மற்றும் பழங்களின் உற்பத்தி அதிகரித்தது. இதன் மூலம் 2017-18 ஆம் ஆண்டுகளில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 283 மில்லியன் டன்களையும், இதை விட பழங்கள், காய்கறிகளின் உற்பத்தி 300 மில்லியன் டன்னையும் எட்டியது.என்றாலும், அறுவடை பின் சார்ந்த தொழில்நுட்பங்களில் ஏற்படக் கூடிய இழப்புகள் காரணமாக தனி நபர் இருப்பு விகிதத்தில் 20 முதல் 25 சதவீதம் குறைவாக இருக்கிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.2.40 லட்சம் கோடி மதிப்புள்ள பழங்கள், காய்கறிகள் வீணாகின்றன. எனவே இந்த இழப்பைக் குறைக்கவும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும் சிறந்த பதப்படுத்துதல் முறை தேவைப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி சந்தையில் பதப்படுத்தப்பட்ட உணவு வளர்ச்சி விகிதம் 12 சதவீதத்தை எட்டியுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் 75 சதவீத வேளாண் பொருட்களில் 28 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவாக இருக்கிறது என்றார். விழாவுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவன தொழில்நுட்பக் கழக இயக்குநர் சி.அனந்த ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஜெயின் இர்ரிகேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத் தலைவர் திலீப் என்.குல்கர்னி சிறப்புரையாற்றினார். விழாவில் 53 பேருக்குப் பட்டம் வழங்கப்பட்டது.

;