திருச்சிராப்பள்ளி, ஜூன் 5- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள மரக்காவலசை ராஜா முகமது காலனியில் உள்ள திடலில் ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருப்பூர் ஹசன் இமாமாக இருந்து, சிறப்பு தொழுகையை நடத்தி, குத்பா உரை நிகழ்த்தினார். இதில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிளைத் தலைவர் பஷீர் அலி, செயலாளர் முகமது இலியாஸ், பொருளாளர் அயூப்கான் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி உழவர்சந்தையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகையும், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் பாலக்கரை சையது முர்துசா பள்ளி மைதானத்திலும், ஹிலூர் மஸ்ஜித் மத்ரசா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் ராஜீவ்காந்தி நகரில் உள்ள ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கண்டோன்மெண்ட் ஈத்கா மைதானத்தில் ஹாஜி முகம்மது நாசித் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மன்னார்குடி
மன்னார்குடி ஈத்கா மைதானத்தில் 2000-த்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் ரமலான் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். மன்னார்குடி பெரிய பள்ளிவாசல் கீழராஜவீதி பள்ளிவாசல், அசேஷம், நெடுவாக்கோட்டை பள்ளிவாசல், மேலராஜவீதி பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து ஈத்கா மைதானத்திலிருந்து வெளியே வந்த முஸ்லீம் மக்களை பிற மதங்களைச் சார்ந்த நண்பர்கள் அன்புடன் வாழ்த்தினர்.