tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி பெயரில் வியாபாரிகளை அப்புறப்படுத்துவதா? : சிஐடியு ஆவேச ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், செப்.14- ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் வியாபாரிகளை அப்புறப்படுத்துவதைக் கண்டித்து, தஞ்சை மாவட்ட சிஐடியு சுமைப் பணித் தொழிலாளர் சங்கம் சார்பில் பனகல் கட்டிடம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் த.முருகேசன் தலைமை வகி த்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் சிறப்புரையாற்றினார்.  வி.தொ.ச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, பி.என்.பேர்நீதி ஆழ்வார், எஸ்.செங்குட்டுவன், மில்லர்பிரபு, மின் ஊழியர் மத்திய அமைப்பு அதிதூத மைக்கேல் ராஜ், இஞ்சினியரிங் சங்கம் ராமலிங்கம் ஆகியோர் பேசினர். சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்டப் பொருளாளர் ஜெகன், மாநிலக் குழு உறுப்பினர் ஹாஜாமைதீன், மாவட்டக் குழு உறுப்பினர் நமச்சிவாயம், லூக்காஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.  தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில், கடைகளில் இருந்து அப்புறப்படுத்துவதைக் கண்டித்தும், தொழில் செய்ய மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும், புதிய கட்டிடம் அமைந்த பிறகு ஏற்கனவே வியாபாரம் செய்தவர்களுக்கு, உரிய இடத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை வழங்க வேண்டும். இக்கடைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம் வழங்க வேண்டும்.   சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக 18 ஆயிரம் வழங்கவேண்டும். கழிவறை, ஓய்வறை வசதி செய்து தர வேண்டும். மேரிஸ் கார்னர் சுமைப்பணி தொழிலாளர்கள் மீதான, பொய் வழக்குகளை காவல்துறையினர் கைவிடவேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

;