tamilnadu

img

106 டிகிரியை தாண்டியது வெப்பநிலை பேராவூரணியில் வெள்ளரிப்பழம் அமோக விற்பனை

தஞ்சாவூர், மே 22-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயிலடியில் ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்து பயணிப்பது வழக்கம். இங்கு சாலையோரத்தில் பழக்கடைகள், பூக்கடைகள், காய்கறிக்கடைகள் உள்ளது. தற்போது கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அக்னி நட்சத்திர காலமாக இருப்பதால், கடும் வெயில் காரணமாக, பொதுமக்கள் வெளியே தலை காட்டாமல் முடங்கிக் கிடக்கின்றனர். பேராவூரணி பகுதியில் கஜா புயலால் ஆயிரக்கணக்கான நிழல் தரும் மரங்கள், பலன் தரும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனா‌ல் இந்த ஆண்டு இப்பகுதியில் கடும் வெப்பக்காற்று வீசுகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் 106 டிகிரியைத் தாண்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் வெப்பநிலை உள்ளது. ஆறு, ஏரிகளும் வறட்சியால் காய்ந்து கிடக்கின்றன. இதனா‌ல் கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி பழங்கள், வெள்ளரி பழங்கள், பனை நுங்கு, இளநீர் ஜூஸ், சர்பத் போன்றவற்றை அருந்தி பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்கின்றனர். வாத்தலைக்காடு பகுதியைச் சேர்ந்த நீலா என்பவர் வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழங்களை விற்பனை செய்து வருகிறார். வெள்ளரிக்காய் கூறு ஒன்று ரூ.10, ரூ.20 என விற்கிறார். வெள்ளரிப்பழம் அளவிற்கு தகுந்தாற்போல ரூ.30 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியும், குடலுக்கு நல்ல ஜீரண சக்தியையும் தரும் வெள்ளரிப்பழம் விற்பனை கோடைகாலத்தில் களைகட்டி உள்ளது.