tamilnadu

நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி முக்கிய செய்திகள்

படகிலிருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் 2 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை

நாகர்கோவில், மே 15-கன்னியாகுமரி அஞ்சுக்கூட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சகாய வில்சன் (43). இவர் திங்களன்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் 14 பேருடன் மீன்பிடிக்க சென்றார். குளச்சல் மணக்குடி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, சகாய வில்சன் படகில் இருந்து தவறி கீழே விழுந்தார். சக மீனவர்கள் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மீனவர்கள் குளச்சல் கடலோர பாதுகாப்பு காவல் துறையினருக்கும், சகாய வில்சனின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். கடலோர பாதுகாப்பு காவல் துறையினர் செவ்வாய் முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இரண்டாவது நாளாக புதனன்றும் தேடுதலில் ஈடுபட்டனர். இதுவரை சகாய வில்சன் குறித்து எந்த தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  


இருசக்கர வாகனம் மீது சிற்றுந்து மோதி விபத்து

மனைவி, மகளை பறிகொடுத்த  அரசு பேருந்து ஓட்டுநர்

நாகர்கோவில், மே15-கன்னியாகுமரி மாவட்டம், மேல சங்கரன்குழி பகுதியை சேர்ந்தவர் நாககிருஷ்ணமணி (46). இவர், ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர், புதனன்று மனைவி சுதா (42), மகள் ஸ்ரீபத்மபிரியா (16) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் வந்தார். அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் மகள் ஸ்ரீபத்மபிரியாவுக்கு அட்மிஷன் முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் நின்ற காரின் கதவு திடீரென திறந்தது. இதில் மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை நாககிருஷ்ணமணி நிறுத்தினார். அப்போது பின்னால் வேகமாக வந்த சிற்றுந்து மோதியது. இதில் கீழே விழுந்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த பொது மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனைவி சுதா, மகள் ஸ்ரீபத்ம பிரியா ஆகிய இருவரும் இறந்தனர். படுகாயமடைந்த நாககிருஷ்ணமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோட்டாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் பணப் பயன்களை வழங்கிட வேண்டுகோள்

திருநெல்வேலி, மே 15-எநெல்லை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவைக்கூட்டம் சங்கத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் வீரமாணிக்கபுரம் நவஜீவன்டிரஸ்டில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாவட்டச்செயலாளர் ஆர்.மோகன், சங்க பொதுச்செயலாளர் எம்.மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர். கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன துணைப்பொதுச் செயலாளர் கே.பி.பெருமாள் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தலைவராக சுரேஷ், பொதுச்செயலாளராக ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில்பொருளாளர் பேரின்பராஜ், நிர்வாகிகள் கசமுத்து, அருணாச்சலம், ஜெயபால், முருகேசன் மற்றும் நிர்வாகிகள்,தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பென்சன் பணத்தை அரியர்ஸுடன் வழங்கிட வேண்டும், முறைசாராவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பணபயன்களை வழங்கிட வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை அம்மா உணவு திட்டத்திற்கு வழங்கக் கூடாது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 


மாம்பழ விலை சரிவு: செங்கோட்டை விவசாயிகள் வேதனை

திருநெல்வேலி, மே 15-தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மா சாகுபடி மும்முரமாக நடைபெறும். திருநெல்வேலிமாவட்டத்தில் செங்கோட்டை, வல்லம், பூலாங்குடியிருப்பு, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் மா சாகுபடி அதிகளவு நடைபெற்று வருகிறது. சப்போட்டா, அல்போன்சா, இமாம்பசந்த், கருநீலம், செந்தூரம், ஆலம்பாடி உள்ளிட்ட 11 வகையான மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் பருவமழை சரியாக இல்லாததால் விவசாயிகள் கலக்கம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து சில நாட்கள் பெய்த மழையால் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இருப்பினும் கடுமையான விலை சரிவால் விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர்.ஒரு கிலோ மல்கோவா மாம்பழம் ரூ.40 - ரூ.45 வரையிலும், சப்போட்டா ரூ.30-ரூ.35, செந்தூரம் ரூ.15, இமாம்பசந்த் ரூ.23, தோத்தப்பேரிரூ.13, ஆக்குஸ் ரூ.30, கருநீலம் ரூ.40, பஞ்சவர்ணம் ரூ.23-க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டைவிட இது மிகவும் குறைவான விலையாகும்.


தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த தென்காசி ஆணையர் வேண்டுகோள்

திருநெல்வேலி, மே 15-தென்காசி நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தென்காசி நகராட்சி பகுதி மக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் குற்றாலம்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குற்றாலம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் குடிநீர் நீர்தேக்கத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பராமரிப்பு பணிகள் கடந்த 13ஆம் தேதிதுவங்கியது.எனவே பொதுமக்கள் இந்த சிரமத்தை பொறுத்து கொள்வதோடு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு தென்காசி நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.