வீட்டுமனைப் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்
திருச்சிராப்பள்ளி, அக்,1- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனை, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி தலைமையில் திங்களன்று அப்பகுதி பொதுமக்கள் எடமலைப்பட்டிபுதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை அக்.1- புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பி ன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர், இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் கலந்துகொள்ளலாம். இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்