ரூ.60 லட்சம் மோசடி: ஒருவர் கைது
தஞ்சாவூர், ஜூன் 30- தஞ்சாவூர் மாவட்டம் திருப்பூந்துருத்தி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(55), வழக்கறிஞர். இவரிடம் திருவையாறு சார்பதிவாளர் அலுவலகப் பத்திர எழுத்தர் கண்டியூரை சேர்ந்த மோகன்(45) என்பவர் 40 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றாராம். இதன்பின் கிருஷ்ணசாமி, கடன் தொகையை மோகனிடம் திருப்பிக் கேட்டதற்கு ஒரு வீடு உள்ளிட்டவை கிருஷ்ணசாமிக்கு வாங்கித் தருவதாகக் கூறி மேலும் 20 லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்டு வாங்கித் தரவில்லை. இதைத்தொடர்ந்து ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் கிருஷ்ணசாமி புகார் செய்தார். இதன் பேரில் மோகனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
போக்சோ சட்டத்தில் மாணவர் கைது
தஞ்சாவூர், ஜூன் 30- தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். அவர், தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது அந்த மாணவி 7 மாதக் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுபற்றி வல்லம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் விசாரணையில் பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த 17 வயது ஐடிஐ மாணவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை ஏமாற்றியது தெரிந்தது. இதையடுத்துப் போக்சோ சட்டத்தின் கீழ் மாணவனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சுற்றுச்சூழல் மன்றக் கூட்டம்
தஞ்சாவூர், ஜூன் 30- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் பொன்னாங்கன்னிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றக் கூட்டம் நடைபெற்றது. 'மரங்கள் பூமியின் கடவுள்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தலைமை ஆசிரியர் பா.நிர்மலா தலைமை வகித்தார். பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ப.மகேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார். ஆசிரியர்கள், 'மரங்கள் மனிதர்களின் வாழ்வில் அளிக்கக் கூடிய பங்களிப்பு' குறித்துப் பேசினர். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டினைச் சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்கள் செய்தனர்.