tamilnadu

img

ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு சிபிஎம் அஞ்சலி

திருச்சிராப்பள்ளி, மே 24-தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். ஜனநாயக முறையில் போராடி உயிர் நீத்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி திருச்சி பெல் சிஐடியு அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சிபிஎம் புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜ், நடராஜன், மல்லிகா, பெல் இடைக்கமிட்டி செயலாளர் அருள்மொழி, சிஐடியு மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, விசா ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விதொச ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், பெல் சிஐடியு சங்க நிர்வாகிகள் பரமசிவம், திவ்யஸ்ரீ, மருதவேல் குமரவேல், இசக்கி, முத்து மற்றும் சிஐடியு பொறுப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.திருவாரூர் இதே போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு வீரவணக்கம் மற்றும் இரங்கல் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து இரங்கல் உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறைந்த தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு பின்னர் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் கே.தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலமாக பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி குறுவை சாகுபடி நடைபெற்ற இடங்களில் ஜேசிபி எந்திரங்கள் மூலமாக குழாய்களை பதிக்க கொண்டு சென்றதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமாக டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்தும் அரசின் வன்முறைப் போக்கை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும் வரும் ஜூன் 5-ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதி வரை பல்வேறு குழுக்களாக பிரிந்து இருசக்கர வாகனம் மூலமாக மக்களைச் சந்தித்து இப்பிரச்சார பயணம் வெற்றி பெறவும், இத்திட்டத்திற்கு எதிராக அனைத்து பகுதி மக்களையும் ஒருங்கிணைக்கவும் நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

;