tamilnadu

சிபிஎம் கிளைச் செயலாளர், கட்சி அலுவலகம் மீது தாக்குதல் குற்றவாளிகளை கைது கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சிராப்பள்ளி, செப்.22- திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட ஆண்டியப்பட்டியில் சனிக்கிழமை அன்று ஒரு துக்க நிகழ்ச்சியில் ஆண்டியபட்டி மற்றும் செவலுர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கிப்பட்டி கிளை செயலாளர் அழகர் இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் ஞாயிறு காலை அழகர் தனது வீட்டில் இருந்தார். அப்போது செவலூரிலிருந்து சுமார் 70 பேர் கம்பு, அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களோடு அழகரின் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கி தரதரவென்று வெளியே இழுத்து வந்துள்ளனர். மேலும் அங்குள்ள சிபிஎம் கிளை அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனை பார்த்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து சிபிஎம் கிளைச் செயலாளர் அழகர் மீதும், கட்சி அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்யக் கோரி கிளைச் செயலாளர் அழகர் தலைமையில் பொதுமக்கள் விராலிமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மணப்பாறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புறநகர் மாவட்ட தலைவர் பாலு, சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சுரேஷ், தங்கராஜ், வாலிபர் சங்க வட்டப் பொருளாளர் இளையராஜா மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;