tamilnadu

img

பேச்சுவார்த்தைக்குச் சென்ற சிஐடியு நிர்வாகிகளை அவமானப்படுத்திய அதிகாரிக்கு கண்டனம்

புதுக்கோட்டை, மே 6-தொழிலாளர்கள் பிரச்சனைக்காக பேசச் சென்ற தொழிற்சங்க நிர்வாகிகளை அவமானப்படுத்திய தொழிலாளர் நலத்துறையின் புதுக்கோட்டை உதவி ஆணையரைக் கண்டித்து சிஐடியு தொழிலாளர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் நலத்துறையின் புதுக்கோட்டை உதவி ஆணையராகப் பணிபுரிபவர் ராகவன். இவர்,நலவாரிய அட்டைகளை புதுப்பிப்பதற்காக சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் திங்கள் கிழமையன்று புதுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். தொழிலாளர்கள் கொண்டு சென்ற படிவத்தை உதவி ஆணையர் திரும்பி அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 15 ஆண்டு கால நடைமுறையை தொழிற்சங்கத்தினருடன் கலந்து பேசாமல் தன்னிச்சையாக ரத்து செய் தது தொழிற்சங்கத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ், செயலாளர் கே.முகமதலிஜின்னா மற்றும் நிர்வாகிகள் எம்.ஜியாவுதீன், ஏ.ஸ்ரீதர், க.சிவக்குமார், எம்.மாரிக் கண்ணு உள்ளிட்டோர் நலவாரிய அலுவலகத்திற்குச் சென்று உதவி ஆணையர் ராகவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நீங்கள் சொல்வதுஎதையும் நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேறுங்கள் என்று ஒருமையிலும் தரக்குறைவாகவும் அதிகாரி ராகவன் பேசியதாகக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த சிஐடியு தலைவர்கள் உதவி ஆணையரைக் கண்டித்து உடனடியாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல்அறிந்ததும் ஏராளமான தொழிலாளர்கள் அலுவலகத்திற்கு வந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வி.சிங்கமுத்து, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, மாதர் சங்க மாவட்டச்செயலாளர் டி.சலோமி மற்றும் நிர்வாகிகள் பி.சுசீலா, எஸ்.பாண்டிச்செல்வி, காயத்திரி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் மற்றும் நிர்வாகிகள் பி.அருண், விஷாலி, தினேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து புதுப்பித்தல் படிவத்தை உதவி ஆணையர் ராகவன் பெற்றுக் கொண்டார். இதனை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

;