குடவாசல், ஜூலை 14- திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சேங்காலிபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க முன்னாள் செயலாளர் எஸ்.கருணாநிதி. இவர் கடந்த 31 ஆண்டு காலமாக நன்னிலம் வீட்டு வசதி சங்க செயலாளராக பணிபுரிந்தவர். கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர், இதுவரை அவருக்கான பணிக்கொடை, வைப்பு நிதி, சம்பள பாக்கி கூட வழங்கப்படவில்லை. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை கருணாநிதி(63) தனது பொருளாதார நெருக்கடி, மகள்களின் திருமணம் என வாழ்க்கையை எண்ணி மனம் அழுத்தம் தாங்காமல் மன உளைச்சலில் காலமானார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், பிரபாவதி, பிரதிபா, பிரகதீஷ்வரி, பிரியதர்ஷினி, பிரியங்கா என்ற 5 மகள்களும் உள்ளனர். இதில் இரண்டு மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மற்ற மூன்று மகள்கள் வீட்டில் உள்ளனர். அன்னாரின் மறைவு செய்தி அறிந்த மாவட்ட சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.முருகையன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறும்போது, கடந்த 7 வருடமாக மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் இருக்கு, ஆனால் இல்லை என்ற நிலை தான். வாங்கிய கடனை அடைத்து விட்டு புதிதாக கடன் வாங்க முடியாத சூழல். இதனால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் தினந்தோறும் சச்சரவும் சண்டை தான் நடக்கிறது. இந்த நிலையில் தான் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை அரசாங்கமே கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் அவலநிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 31 வருடங்களுக்கு மேலாக இந்த சங்கத்தில் பணிபுரிந்த கருணாநிதி, பணிக்கொடை, வைப்பு நிதி, சம்பள பாக்கி முதற் கொண்டு ஓய்வு பெற்ற பின்பும் நம்மால் பெற முடியவில்லையே, இனி நமக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்காது என்ற மன உளைச்சல் அடைந்து வேதனையில் மரணம் அடைந்துள்ளார் என்ற வேதனை செய்தியை அறியும் போது மனம் பதறுகிறது. எனவே அவரின் குடும்பத்தை பாதுகாக்க அவருக்கு வர வேண்டிய பணிக்கொடை சுமார் ரூ.25 லட்சத்தை அவருடைய குடும்பத்திற்கு உடனே வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தையும், ஊழியர்களையும் காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.