tamilnadu

img

4 லட்சம் நெல் மூட்டைகள் வீணாகின்றன

சீர்காழி, ஏப்.9-கொள்ளிடம் பகுதியில் திறந்த வெளியில் கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் மற் றும் சீர்காழி பகுதியில் சம்பா அறுவடை நெல்லை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 55 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விவசாயிகளிடமிருந்து நெல் கொள் முதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் இரண்டு ஊழியர்களும், 10-க்குக் குறையாத சுமை தூக்கும் தொழிலாளர்களும் வேலை பார்த்து வந்தனர்.கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதியில் மட்டும் 550 சுமை தூக்கும் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு நெல் கொள் முதல் செய்து நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான எருக்கூரில் உள்ள நவீன அரிசி ஆலைக் கிடங்கிற்கு லாரிகள் மூலம் அனுப்பி வைத்து வந்தனர்.இந்நிலையில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது. ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு கொள் முதல் நிலையத்திலும் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு மூட்டைகளிலிருந்து நெல் வெளியேறி சேதமாகிவருகிறது. எலிகளுக்கும் கரையான் களுக்கும் நெல் இரையாகி வருகிறது. கடந்த 2 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் சுமை தூக்கும் தொழிலாளர் களும் அவைதிப்பட்டு வருகின்றனர். இரவும் பகலும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை பாதுகாத்து வருகின்றனர். நெல் மூட்டைகள் திருடு போய் விடுமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகின்றனர்.ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வீதம் என மொத்தம் 4.5 லட்சம் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டு சேதமாகி கொண்டிருக்கிறது. எனவே நெல் மூட்டைகளை உடனடியாக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்குக்கு எடுத்துச் சென்று பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;