tamilnadu

img

திரிபுராவில் மறு வாக்குப்பதிவு

அகர்தலா:

மக்களவைக்கான ஆறாவது கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் நாடு முழுதும் ஞாயிறு அன்று நடைபெற்றபோது, திரிபுரா மாநிலத்தில் மேற்குத் திரிபுரா தொகுதியின் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பாஜக ரவுடிகளிடமிருந்து வந்த அச்சுறுத்தல்களையும் மீறி துணிவுடன் மக்கள் வாக்களித்துள்ளார்கள். எனினும் இதுகுறித்து நாட்டில் இயங்கும் பிரதான ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.


இந்திய சுதந்திர வரலாற்றில் தேர்தல் நடைபெற்று சுமார் ஒரு மாதம் கழித்து மறுவாக்குப்பதிவு நடைபெறுவது என்பது இதுவே முதன்முறையாகும். மேலும் ஒரே தொகுதியில் அதிக அளவிலான வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு க்குத் தேர்தல் ஆணையம் உத்தர விட்டிருப்பதும் இதுவே முதன்முறையாகும்.


இத்தொகுதியில் ஏப்ரல் 11 அன்று தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தேர்தல் மோசடி, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி முகவர்கள் மீதும், வாக்களிக்க வந்தவர்கள் மீதும் தாக்குதல் தொடுத்தல் போன்றவை தேர்தல்பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த மத்திய துணை ராணுவப் படையினர் முன்பாகவே அரங்கேறின. எனவே இத்தொகுதியில் நடைபெற்ற தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரியும், இத்தொகுதி முழுமைக்கும் மறுவாக்குப் பதிவு நடத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரியது. தேர்தல் ஆணையம் இதற்கு செவிமடுக்காமல் 168 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டது.

எனினும் ஏப்ரல் 11 தேர்தலைச்செல்லாது என அறிவிக்கக்கோரியும், முழுமையாக இத்தொகுதிக்கு மறுவாக்குப்பதிவு நடத்திட வேண்டும் என்றும் உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் திரிபுரா இடதுமுன்னணி சார்பிலும், சிபிஎம் வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தா சார்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அது தற்போது நிலுவை யிலிருந்து வருகிறது. இதேபோன்ற கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சியும் முன் வைத்துள்ளது.


இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க ஞாயிறு அன்று 168 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவின்போதும் பாஜக ரவுடிகளின் அட்டகாசம் குறைந்திடவில்லை. தேர்தல் நாளுக்கு முதல், வாக்காளர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று மிரட்டியுள்ளனர். மேலும் வாக்களிக்க வரும் பாதையில் நின்றுகொண்டு வாக்களிக்க வருபவர்களை அச்சுறுத்தியுள்ளனர். இதனால் சுமார் 10, 15 சதவீதத்தினர் வாக்களிக்க முன்வரவில்லை. ஆனாலும் அவை அத்தனையையும் மீறி 73.53 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்.


இந்தத்தடவை வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவதோ அல்லது தாங்களே வாக்காளர்களின் வாக்குகளைப் பதிவுசெய்வதோ ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற அளவிற்கு நடைபெறவில்லை. சில வாக்குச் சாவடிகளில் சிபிஎம் வாக்குச்சாவடி முகவர்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.இவ்வளவு அடக்குமுறை, அச்சுறுத்தல்களையும் மீறி துணிவுடன் வந்து வாக்களித்த மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கௌதம் தாஸ் பாராட்டுக் களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். “நாங்கள் மறுவாக்குப்பதிவில் பங்கேற்றுள் ளோம். எனினும் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் தொடருவோம்,” என்று அப்போது கௌதம் தாஸ் செய்தியாளர் களிடையே கூறினார்.  


பாஜக வன்முறை வெறியாட்டம்

திங்கள் அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினர் மாநிலத் தேர்தல் அதிகாரியையும் காவல்துறைத் தலைவரையும் சந்தித்தனர். தேர்தலுக்குப் பின்னர் வாக்களித்துவிட்டு வந்துள்ள மக்கள்மீதும், சிபிஎம் வாக்குச்சாவடி முகவர்கள் மீதும் பாஜக ரவுடிகள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். இதேபோல் ஞாயிறு இரவிலிருந்து திங்கள் இரவு வரை 19 இடங்களில் இவ்வாறு வெறி யாட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள். இவ்வாறு ஏவப்பட்டுள்ள வன்முறை வெறி யாட்டங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சிபிஎம் தூதுக்குழுவினர் வலியுறுத்தினார்கள். வாக்காளர் களுக்கும், சிபிஎம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் போதிய அளவிற்குப் பாது காப்பு அளித்திட வேண்டும் என்றும், ரவுடித் தனத்தில் ஈடுபடும் பாஜக குண்டர்கள்மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். 

அகர்தலாவிலிருந்து ராகுல் சின்கா

;