tamilnadu

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளுக்கு ஊதியம் வழங்கிடுக! அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல், மே 9-நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு  ஊதியம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ஏப்ரல் 18 ஆம் தேதி 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் இது தொடர்பாக விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பொருந்தாது; தேர்தல் நாளுக்கு முந்தைய நாளும், தேர்தல்நாளுக்கு பிறகும் தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த ஊதியம் வழங்கப்படும் என கூறுகிறார்கள். ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தேர்தல் ஆணையம்சில நிபந்தனையுடன் இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் கிராமப்புறதொழிலாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு பலனளிக்காமல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆளுங்கட்சி – ஒப்பந்தகாரர்கள் சதி

மத்திய ,மாநில அரசுகள் இந்த திட்டத்தைஆளுங்கட்சிக்காரர்களுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும் பந்தி வைக்கும் வகையில் போடப்பட்டுள்ள திருத்தங்கள் மூலமாக கடந்தசில ஆண்டுகளாக வேலைகள் மாற்றி அமைக்கப்பட்டும் சுழற்சி முறைப்படி வேலைதுவங்க வேண்டியிருக்கும் என்பதால் தொடர்ச்சியான வேலை நிலை, பெரும்பாலான ஊராட்சிகளில் தமிழ்நாட்டில் இல்லை. இத்திட்டத்தில் அட்டை பெற்றுள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் சுமார் ஒரு கோடி பேர் பயனடையவில்லை. வேலையும் வழங்காமல் ஊதியமும் வழங்காமல் அரசே இப்படி மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. 

மோசடி செய்த அரசு

2016 ஆம் ஆண்டு போடப்பட்ட இதே போன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. இதனால் கிராமப் புற மக்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டனர். எனவே வேலைத்திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தேர்தல் நாளில் விடுப்புடன் வழங்க வேண்டிய ஊதியத்தை தொழிலாளர்களின் வங்கி இருப்பில் வரவு வைக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே வேலை வழங்கப்பட்டுள்ளது என்பதை கணக்கில் கொண்டு இந்த ஆண்டில் அனைத்து ஊராட்சிகளிலும் வேலை வழங்க வேண்டும். சுழற்சி முறையில் வேலை வழங்குவது. பண்ணைக்குட்டை என்ற பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்வது ஆகியவற்றை தடுத்திட அரசு முன்வர வேண்டும். 

பாதுகாக்கப்பட்ட குடிநீர் 

போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சியில் அனைத்து மாவட்டங்களும் சிக்கியுள்ளன. மழையளவு சாதனங்களின்படி பார்க்காமல் மாவட்டங்களில் குடிக்கவும், பயன்பாட்டிற்கும் திண்டாடும் மக்களின் சூழ்நிலையை ஆராய்ந்து அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும். 

மனைப்பட்டா வழங்கிடுக 

நீர்நிலை புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்கிட மாநில அரசு அரசாணை வெளியிட்டது. அது வரும் ஜுன் மாதத்துடன் முடியவுள்ள நிலையில் அதற்கான எவ்வித முன் முயற்சியும் வருவாய்த்துறையால் எடுக்கப்படவில்லை. எனவே மாற்று இடம், மனைப்பட்டா வழங்கிட அரசு முன்வர வேண்டும். 

பொன்பரப்பி சம்பவத்திற்கு கண்டனம்

தேர்தல் நாளன்று பொன்பரப்பியில் தலித் மக்கள் மீதான தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்களது வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் சங்கர் மற்றும் வசந்தாமணி, மொக்கராஜ், அண்ணாமலை, பழனிச்சாமி, அருள்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

(நநி)


;