tamilnadu

img

இந்நாள் ஜுன் 30 இதற்கு முன்னால்

1934 - ‘நீள்கத்திகளின் இரவு’ என்று குறிப்பிடப்படும் படுகொலைகள் ஜெர்மனியில் ஹிட்லரால் நடத்தப்பட்டன. ஜூன் 30இலிருந்து ஜூலை 2வரை நடைபெற்ற இந்நிகழ்வில் கொல்லப்பட்டோர் 85 பேர் என்று அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், சுமார் 700இலிருந்து 1000 பேர்வரை கொல்லப்பட்டனர். ஸ்டுர்மாப்டெய்லங் (எஸ்ஏ) என்ற தனியார் படையை(அதுவும் நாஜிகளுடையதுதான்!) ஒடுக்குவதற்காக, அதன் தலைவர்களும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் இலக்குவைத்துக் கொல்லப்பட்டனர். நாஜிக்கட்சியின் கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பளிப்பது, எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் இடையூறு ஏற்படுத்துவது முதலான பணிகளை முதன்மையாகக் கொண்டிருந்த இந்த அமைப்பு, ஹிட்லர் அதிகாரத்துக்கு வருவதில் முக்கியப் பங்காற்றியது. 1759இல் ஏழாண்டுப் போரின்போது உருவாக்கப்பட்ட ஃப்ரெய்கார்ப்ஸ்(அணிதிரட்டப்படாத வீரர்கள்) என்ற படையினர், முதல் உலகப்போரில் ஜெர்மனி வெல்லும் நிலையிலிருந்து ஏமாற்றப்பட்டதாக நம்பியதுடன், வெய்மார் குடியரசை உருவாக்கிய நவம்பர் புரட்சிக்குக் காரணமானவர்களை ‘நவம்பர் குற்றவாளிகள்’ என்றே அழைத்தனர். ரஷ்யாவைப் போன்று பொதுவுடைமைப் புரட்சி உருவாகிவிடாமல் தடுப்பதற்காக, ஃப்ரெய்கார்ப்ஸ் படையின் முன்னாள் வீரர்களைக்கொண்டு எஸ்ஏ உருவாக்கப்பட்டது. பொதுவுடைமையாளர்கள், சமூக ஜனநாயகவாதிகள் ஆகியோரின்மீது இவர்கள் நடத்திய கொடுந்தாக்குதல்களால் மூர்க்க வீரர்கள் என்றும், அவர்களது உடையால் பழுப்புச்சட்டைகள் என்றும் அழைக்கப்பட்டனர். ஜெர்மனி ஒரு லட்சம் படைவீரர்களை மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என்று வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் கட்டுப்பாடு விதித்திருந்ததால் அதிகாரப்பூர்வ ராணுவமான ரீச்ஸ்வெர்-இல் ஒரு லட்சம் வீரர்கள் மட்டுமே இருந்த நிலையில், எஸ்ஏ 30 லட்சம் வீரர்களைக் கொண்டிருந்தது. இதனால் தங்களை அதிகா ரப்பூர்வ ராணுவமாக அறிவிக்கவேண்டும் என்று எஸ்ஏ தலைவர் ரோம் வலியுறுத்தினார். இவர் ஹிட்லர் நடத்திய முதல் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியான பீர் ஹால்புரட்சியிலி ருந்தே அவருக்குத் துணைநின்றவர் என்றாலும், நாஜிக்கட்சி பெயரில் மட்டும் கொண்டிருந்த தேசிய சோசலிசத்தை இன்னும் பேசிக்கொண்டிருந்தார். முப்படைகளும் இன்னும் குடியரசுத் தலைவர் ஹிண்டன்பர்க் கட்டுப்பாட்டிலேயே இருக்க, அவற்றின் நம்பிக்கையை ஹிட்லர் பெற்றால்தான் முழு அதிகாரம் கிடைக்கும் என்ற நிலையில், அதற்கு எஸ்ஏவின் நடவடிக்கை கள் இடையூறாக இருந்ததால் ரோம் உள்ளிட்ட முக்கிய தலை வர்கள், ஹிட்லரின் உத்தரவின்படி, மற்றொரு (அடியாள்)படை யான சுட்ஸ்டாஃபல் படையால் படுகொலை செய்யப்பட்டனர். (கூட்டங்களுக்கு, விவாதங்களுக்கு இடையூறு என்பதையெல்லாம் இப்போது நாம் இந்தியாவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஃபாசிசப் பாதையில், ஏறும்வரைதான் ஏணி முக்கியம் என்பதை இன்றுள்ள அடியாள் படைகள் புரிந்து கொள்ளா விட்டால் எஸ்ஏவின் நிலைதான் ஏற்படும்!)

;