tamilnadu

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 29

1953 - அமெரிக்காவில் முதல் முப்பரிமாண தொலைக்காட்சி ஒளிபரப்பு பரிசோதிக்கப்பட்டது. முப்பதாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையான விண்வெளி ரோந்து(ஸ்பேஸ் பட்ரோல்) என்னும், 1950இலிருந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தொலைக்காயட்சித் தொடரின் 30 நிமிட அத்தியாயம் மட்டும் சோதனை முறையில் முப்பரிமாணத்தில் ஒளிபரப்பப்பட்டது. இரண்டு தனித்தனிப் படங்களை இணைத்து, முப்பரிமாணமாக மூளையை உணரச் செய்யும் ஸ்டீரியோஸ்கோப் கருவி, 1838இல் சார்லஸ் வீட்ஸ்டோன் என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. முப்பரிமாணத் திரைப்படத்தை உருவாக்கும் முறைக்கு, இங்கிலாந்து திரைப்படத்துறை முன்னோடியான வில்லியம் ஃப்ரீஸ்-கிரீன், 1890இல் காப்புரிமை பெற்றார். இரண்டு தனித்தனியாக ஓடும் படங்களை ஸ்டீரியோஸ்கோப் கருவிமூலம் பார்க்கும் இம்முறை நடைமுறையில் வெற்றிபெறவில்லை. ஒன்றேமுக்கால் அங்குல இடைவெளியில் இரண்டு லென்ஸ்கள் பொருத்தப்பட்ட, முப்பரிமாண கேமராவை, ஃப்ரடரிக் யூஜின் ஐவ்ஸ் என்ற அமெரிக்கர் 1900இல் கண்டுபிடித்தார். எட்வின் போர்ட்டர், வில்லியம் வேடல் ஆகியோர், அனாக்ளைஃப் என்னும் சிவப்பு-பச்சை முறையிலான திரைப்படத்தை 1915இல் நியூயார்க்கின் ஆஸ்டர் திரையரங்கில் திரையிட்டு சோதித்தனர். முதல் முப்பரிமாணத் திரைப்படம் 1922இல் உருவானது. 1928இல் முதல் முப்பரிமாணத் தொலைக்காட்சியை, பேயர்ட் தன் அலுவலகத்தில் செயல்படுத்திக்காட்டினார். 1935இல் முப்பரிமாணத் தொலைக்காட்சி உற்பத்திசெய்யப்பட்டது. முப்பரிமாணத் திரைப்படங்களின் உருவாக்கமும், 1950களில் தொலைக்காட்சி பரவலானதும், முப்பரிமாண ஒளிபரப்புக்கான தேவையை உருவாக்கின. ஆனாலும், உலகின் முதல் முப்பரிமாணத் தொலைக்காட்சிச் சேனலாக, கல்வி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறை நிகழ்ச்சிகளையும் 24 மணிநேரமும், முப்பரிமாணத்தில் ஒளிபரப்பும் ஸ்கை 3டி, தென்கொரியாவில் 2010இல்தான் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் சுமார் 40 முப்பரிமாணச் சேனல்கள் தொடங்கப்பட்டாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன. பொதுவான தொழில்நுட்பம் வரையறுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களால், முப்பரிமாணத் தொலைக்காட்சி பெரிய வளர்ச்சியை எட்டவில்லை. அனாக்ளைஃப், போலரைஸ்ட், ஆக்டிவ் ஷட்டர் ஆகிய முறைகளுடன், கண்ணாடி போன்ற கூடுதல் கருவிகள் இன்றியே முப்பரிமாணத்தைக் காட்டும் ஆட்டோ ஸ்டீரியோஸ்கோபிக் முறையிலும் முப்பரிமாணத் தொலைக்காட்சிகள் உருவாக்கப்படுகின்றன.

;