tamilnadu

img

இடதுசாரிகள் இல்லாத இந்தியாவில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு யார் குரல் கொடுப்பர்?


  • விஜய் பிரசாத், சுதன்வா தேஷ்பாண்டே
  • தி ஹிந்து, 2019 ஏப்ரல் 16

 

இரண்டில் ஒரு இந்தியர் என்ற அளவில், அதாவது 70 கோடி இந்தியர்கள் தினந்தோறும் இரவு படுக்கைக்கு வயிற்றுப் பசியுடன் செல்வதாக மெக்கின்ஸி அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இந்தியாவில் நிலவுகின்ற இந்த அவலத்தை வெளிக்கொணருவதற்கு எந்தவொரு நிறுவனத்தின் ஆவணமும் தேவைப்படுவதாக இருக்கவில்லை. இந்த நிலைமை இந்திய வீதிகளிலும், விவசாய் நிலங்களிலும் மிகத் தெளிவாக அனைவராலும் காணப்படும் வகையிலேயே இருந்து வருகிறது. இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகளின் மூலமாக விவசாய நெருக்கடிகள், அதிகரித்து வருகின்ற சேரிகளின் எண்னிக்கையின் மூலம் நகர்ப்புற அவலங்கள் அன்றாட நடைமுறையாக நிலவி வருகின்றன. இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேர் எதிர் கொண்டு வருகின்ற பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்ற விதத்தில் இந்த அரசின் கொள்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை. கையறு நிலையும், பாழ் நிலையும் அனைவரின் உணர்வுகளுக்குள் ஊருவி நிற்கின்றன. உணர்வுப்பூர்வமான கோபங்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் என்று அனைவரின் குரலும் இப்போது நசுக்கப்பட்டுள்ளது. தங்களுடைய அரசியல் முடிவுகளுக்கான அடிப்படையாக மத்தியதர வர்க்கத்தினரே திகழ்வதாகக் கருதுகின்ற பெரும்பாலான அரசியல் கட்சிகள், இவர்கள் அனைவரையும் புறந்தள்ளி விட்டு மத்தியதர வர்க்க மக்களை நோக்கியே தங்களுடைய உரையாடலைக் கட்டமைக்க விரும்புகின்றன. ஆனாலும் 1991ஆம் ஆண்டில் இருந்து அரசின் கொள்கைகளால் பலனடைபவர்களாக இந்த நடுத்தர வர்க்கத்தினர் இருக்கவில்லை என்பதே உண்மை. மாறாக அரசின் கொள்கைகளால் 70 சதவிகித இந்திய சமூக வளங்களை தங்களிடம் கொண்டிருக்கின்ற 10 சதவிகித மேல்தட்டு இந்தியர்களே பெரும்பாலான பலன்களை அடைந்திருக்கின்றனர். பிரபலமான வர்த்தக நிறுவனங்களே முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. தற்கொலை செய்து கொண்ட ஆந்திரப் பிரதேச பரிகி மண்டலைச் சேர்ந்த சின்ன பாலய்யா என்ற விவசாயி, ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பீகாரில் கயாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி அல்லது இவர்களைப் போன்ற லட்சோபலட்ச மக்களின் அவலக் குரல்கள் காது கொடுத்து கேட்கப்படாதவையாகவே இருக்கின்றன.

ஏதோவொரு இடதுசாரி இயக்கமே விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், தலித்துகள் என்று நசுக்கப்பட்டவர்களின் குரலை மிகைப்படுத்தி அனைவருக்கும் கேட்கும் வண்ணம் மாற்றுவதாக இருக்கின்றது. காலமுரண்பாடானவர்களாக, மையத்தில் இல்லாமல் விளிம்பு நிலையில் செயல்படுபவர்களாக இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்று சிலர் வாயடிப்பது அடிக்கடி கேட்கப்படுகிறது. இருந்த போதிலும் இந்த இடதுசாரிகளே, 2018ஆம் ஆண்டில் தங்களுடைய அசாதாரண தைரியத்தின் மூலம் நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்த மிகச் சாதாரண மக்களால் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இயக்கங்களில் முன்னின்று முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். 2018ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற விவசாயிகளின் மிகப் பெரிய பேரணி நகர்ப்புற நடுத்தர வர்க்க மனிதர்களை தன் பக்கம் ஈர்த்தது. கிராமப்புறத்து விவசாயிகளின் இன்னல்களை உணர்ந்து கொண்ட அந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் ஒரு ஞாயிறன்று இரவில் மும்பையை வந்தடைந்த அந்த விவசாயிகளை நேரில் சென்று வரவேற்றது. அடுத்த நாள் காலையில் மும்பை மாணவர்கள் தங்களுடைய தேர்வுகளை எழுத வேண்டியிருப்பதை அறிந்து கொண்ட விவசாயிகள் ஓய்வெடுக்காமல் தங்களுடைய நடைப்பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு அன்றிரவே ஆசாத் மைதானத்தைச் சென்றடைந்தனர். விவசாயிகளின் இந்த நடவடிக்கை மும்பை மக்களின் பேராதரவைப் பெற்றது. இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பான அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பின் கீழ் இந்த விவசாயிகள் அந்த மாபெரும் பேரணியை நடத்தியிருந்தனர். பெரும்பாலும் விவசாய நெருக்கடிகளை தன்னந்தனியாக இந்த விவசாயிகள் தாங்களே எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். அவ்வாறு தங்களுக்கு நேர்ந்த துயரங்களைத் தாங்களாகவே எதிர்கொள்வதின் விளைவாகவே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். விவசாயிகளை அவர்களுடைய தனிமையில் இருந்து காப்பாற்றி அவர்களை அரசியல்படுத்தும் வகையில் இந்த அனைத்திந்திய விவசாயிகள் சங்கமே செயல்பட்டு வருகின்றது.

கேடு விளைவிக்கின்ற முதலாளித்துவத்திற்கெதிராகவும், தங்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாத நரேந்திர மோடி அரசாங்கத்திற்கெதிராகவும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆஷா மற்றும் அங்கன்வாடித் தொழிலாளர்களின் போராட்டங்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் டெல்லி நோக்கிய பேரணி, 2019 ஜனவரியில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தம் என்பது போன்ற மிகப் பெரிய போராட்டங்களுடன், மிகச் சிறிய அளவில் பொதுமக்கள் கலந்து கொண்ட போராட்டங்களும் இந்த காலகட்டத்தில் நடைபெற்றிருக்கின்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் தொழிற்சங்கங்களால் ஒருங்கிணைக்கப்பட்டவையாகவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சார்ந்த இடதுசாரிகளின் மேடைகள் மூலமாகவும், பாதிக்கப்பட்ட பொதுமக்களாலும் அபாயமிக்க பசுப் பாதுகாவலர்களுக்கு எதிராகவும், ஆணவப் படுகொலை செய்த கொலைகாரர்களுக்கெதிராகவும் நடத்தப்பட்டிருக்கின்றன. இடதுசாரி வெகுஜன அமைப்புகளால் விவசாயிகளை ஒருங்கிணைத்து ராஜஸ்தானில் நடத்தப்பட்ட இயக்கங்கள் குறிப்பிடத் தகுந்தவையாக இருக்கின்றன. மகராஷ்ட்ராவில் நடைபெற்ற மாபெரும் பேரணி, டெல்லியை நோக்கிய பேரணி என்று இத்தகைய போராட்டங்கள் விவசாயிகள் எதிர்கொண்ட நெருக்கடிகளை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கின்றன. கடந்த ஆண்டு ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கார் என்று மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடித்து தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பவையாக இந்தப் போராட்டங்கள் இருந்திருக்கின்றன. இந்த தேர்தல் வெற்றியை விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் என்று அனைவரையும் ஒருங்கிணைத்த இடதுசாரிகள் பகிர்ந்து கொள்ள முடியாத நிலைமையானது, சாதி மற்றும் பிற குறுங்குழு அமைப்புகள், பணம் போன்றவை வெற்றியைத் தீர்மானிக்கின்ற வகையில் நம்மிடையே இருக்கின்ற தேர்தல் அமைப்பின் பலவீனங்களைக் காட்டுவதாகவே இருக்கின்றது.

பணமதிப்பு நீக்க அறிவிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிவிப்புகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் பேரிழப்புகள், படுகொலைகள் மற்றும் வகுப்புவாத அணிதிரட்டல்கள் பற்றி தினசரி வருகின்ற செய்திகள், அறிவியலுக்கு முரணாகச் செயல்படுகின்ற அறிவுசார் நிறுவங்களின் செயல்பாடுகள், மிக மோசமான மொழியில் பொதுமேடைகளில் பேசப்படுகின்ற பேச்சுக்கள் என்று இந்த நாடே துயரில் மூழ்கியிருக்கிறது. அதே வேளையில் கேரளாவில் இருக்கின்ற இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமோ மாற்று நடைமுறைகளையும், செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. சிறுசிறு நடவடிக்கைகளால் கலாச்சாரத்தின் விறைப்புத் தன்மையை முறியடிக்கும் வகையில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தி வருகிறது. மாதவிடாய் தருகின்ற சமூக அழுத்தங்களிலிருந்து பெண்கள் விடுதலை பெறும் வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிடரி நாப்கின்களை அளித்து வருகின்றது. கொச்சி மெட்ரோவில் பயணச்சீட்டு பரிசோதகர்களாக திருநங்கைகள் பணிநியமனம் செய்யப்பட்டிருப்பதன் மூலம், திருநங்கைகளின் உரிமைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஈடு இணையற்ற முதவராகத் திகழுகின்ற பினராயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரிவினைப் போக்கை தொடர்ந்து எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

அடுத்து இந்த சிறிய மாநிலத்தைப் பேரழிவிற்கு உள்ளாக்கிய அந்த மாபெரும் வெள்ளம். மிகக் குறைந்த அளவில் மத்திய அரசு வழங்கிய உதவிகள் மிகவும் தாமதமாகவே வந்து சேர்ந்தன. பாஜக போன்ற கட்சிகள் மாநிலத்தின் பெருந்துயரை எதிர்கொள்ளும் விதத்தை பிரதிபலிப்பதாக அது இருந்தது. ஏழைகளுக்கான நிவாரணங்கள், மறுசீரமைப்பு உதவிகள் வந்து சேர மிக நீண்ட காலம் ஆனது. அண்மையில் மாநிலம் முழுவதும் நாங்கள் மேற்கொண்ட பயணத்தின் போது, உண்மையிலேயே அந்த வெள்ளத்தால் நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனவா என்பதைக் கண்டறிவது எங்களுக்குச் சிரமமாகவே இருந்தது. கேரள மக்களும், மாநில அரசின் பொதுச் செயல் திட்டங்களுமே அதற்கான காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர்கள் தங்களுக்குள் குழுக்களை அமைத்துக் கொண்டு தன்னிச்சையாக ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டார்கள். தங்களுடைய பாதுகாப்பைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் செயல்பட்ட மீனவர்களின் செயல்பாடுகள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இதுபோன்று எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை நாம் கூறிக் கொண்டே செல்லலாம்.

கேரள மக்களின் இத்தகைய போக்குடன் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் வலிமையையும் இங்கே குறிப்பிட்டுக் கூற வேண்டும். எவ்விதப் பாகுபாடும் காட்டாமல், உடனடியாக நிவாரணம் மற்றும் பாதுகாப்பு வேலைகளில் கேரள அரசாங்கம் இறங்கியது. கேரள மக்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசாங்கத்தைத் தண்டிக்கும் வகையில் இருந்த மத்தியில் ஆளுகின்ற மோடி அரசாங்கத்தின் போக்கிற்கு முற்றிலும் மாறானதாக கேரள அரசின் நடவடிக்கைகள் இருந்தன. இந்த மாபெரும் துயரத்தின் போதும் வகுப்புவாதம் மற்றும் குறுங்குழுவாதம் கொண்டு செயல்பட்ட ஹிந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறானதாகவே கேரள அரசின் நடவடிக்கைகள் இருந்தன.

இந்தியாவில் இடதுசாரிகளே இல்லை என்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த நிலை ஏற்பட்டால், தொழிலாளிகள், விவசாயிகளின் குரலை, உடைமை இழந்தவர்கள் மற்றும் விரக்தி அடைந்தவர்களின் குரலை கவனித்துக் கேட்பதற்கு யாராவது இருப்பார்களா? நல்லதொரு வாழ்க்கை வாழ வேண்டுமென்ற அவர்களுடைய கனவுகளை, ஆவலை, நம்பிக்கைகளை இடதுசாரிகளைத் தவிர வேறு யாராவது எடுத்துச் சொல்வார்களா? பெண்கள் சபரிமலைக்குச் செல்லும் வகையில் உச்சநீதிமன்றத்தின் ஆணையை யார் நிறைவேற்றுவார்கள்? லட்சக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி ஒரு நீண்ட பெண் சுவரை வேறு யாரால் உருவாக்க முடியும்? பிரிவினைக்கு மாற்றாக பகுத்தறிவையும், தனிமனித சொத்துகளுக்கு மாற்றாக சமூக அக்கறையையும் கொண்டவர்களாக யார் நிற்பார்கள்? “மக்களாகிய நீங்கள் மிகுந்த கஷ்டங்களுக்குப் பிறகு மனிதர்களாக மாறினீர்கள்” என்று பல்லாண்டுகளுக்கு முன்னராக அக்பர் அலகாபாதி என்பவர் பாடினார். அந்த கஷ்டங்கள் இருக்கின்ற இடங்களில்தான் இடதுசாரிகள் வாழ்கிறார்கள். அவர்களின் முயற்சிகள் இல்லாவிடில், மனிதகுலத்தால் செழித்து உயிர் வாழ முடியுமா?


;