புதுதில்லி:
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக கேரள அரசு நடவடிக்கைகள் எடுத்ததைப்போல் நாடு முழுதும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்மீது பரிந்துரைகளை அளிக்கும்போது உறுப்பினர்கள் பேசியதாவது:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பினாய் விஸ்வம் பேசியதாவது: “இது தொடர்பாக, கேரள அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கேரள அரசாங்கம், கேரள மக்கள், ஒட்டுமொத்த கேரள சமூகம் கொரோனா வைரஸை முறியடித்ததில் நாட்டிற்கு முன் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசு, கேரள அரசிடமிருந்து இது தொடர்பாக அறிக்கை பெற்று, கேரளாவில் எப்படி சாத்தியமானது என்று அறிந்து அதனை நாடு முழுவதற்கும் விரிவாக்கிட வேண்டும்” என்றார்.
டி.கே.ரங்கராஜன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசியதாவது: “இந்த அரசாங்கம் முதலில் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கற்பித்திட வேண்டும். இரண்டாவதாக, சமூக ஊடகங்களில் இதற்கு ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவங்களில் மருந்துகள் இருப்பதாக விளம்பரங்கள்வந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசாங்கம் அவற்றைப் பரிசீலித்து, அவை பொருத்தமாக இருந்தால் மாநிலங்கள் மூலமாக அவற்றைப் பரிந்துரைத்திட வேண்டும்”என்றார்.
திருச்சி சிவா
திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது: “இது மிகவும் ஆழமான பிரச்சனை. இதனை முறியடித்திட ஒவ்வொருவரும் ஒத்துழைத்திட வேண்டும். மூன்று பரிந்துரைகளை இது தொடர்பாகக் கூற விரும்புகிறேன். முதலாவதாக, விமானப் பயணிகள் அனைவருக்கும் முகத்தை மூடிக்கொள்ள முகமூடி அணிவிக்க சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் முன்வர வேண்டும். ஏனெனில் உள்நாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டு விமானங்களும் தரையிறங்குகின்றன. எனவே பல பயணிகள் உலக நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இது அவசியமாகும். மேலும் விமான நிலையங்கள் மிகவும் துப்புரவாக வைத்துக்கொள்ளப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் இதுதொடர்பாக மக்களைப் பீதிக்கு உள்ளாக்கும் விதத்தில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே மத்திய அரசாங்கம் தொலைக்காட்சி மூலம் மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்திடும் விதத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்திட வேண்டும். டாக்சி ஓட்டுநர்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். மாநில அரசாங்கங்களும் உரிய முறையில் அறிவுறுத்தப்பட வேண்டும்” என்றார்.