tamilnadu

img

7 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்

புதுதில்லி:
மிகவும் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக்கூறி மக்களவையில் ஏழு காங்கிரஸ் உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இந்தக் கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களில் அவைக்கு வர முடியாது.இவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள், கவுரவ் கோகோய், டி,.என.பிரதாபன், டீன் குரியாகோஷ், பென்னி பெகனான், மாணிக்கம் தாகூர், ராஜ்மோகன் உன்னிதான் மற்றும் குர்ஜித் சிங் அஸ்லா ஆகியோராவர்.

தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும் என்று கடந்த மூன்று நாட்களாக இவர்கள் கோரி வந்தார்கள். இன்றும் இவர்கள் ரகளையும் ஈடுபட்டார்கள்.எனினும் இவர்களின் கோரிக்கையை ஏற்கும் நிலையில் மக்களவை சபாநாயகர் இல்லை.இது தொடர்பாக மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி கூறுகையில், இது “பழிவாங்கும் அரசியல்” என்று கூறியதுடன், கட்சி இதனை இப்படியே விட்டுவிடாது என்றார்.“இது அரசாங்கத்தின் முடிவேயொழிய, மக்களவை சபாநாயகரின் முடிவு அல்ல. இது என்னவிதமான சர்வாதிகாரம்?” என்று சௌறத்ரி வினவினார். மேலும் அவர், “இவ்வாறு சஸ்பெண்ட் செய்வது எங்களைப் பலவீனப்படுத்துவதற்காகும். தில்லி வன்முறை வெறியாட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கம் பயப்படுகிறது,” என்றார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கவுரவ் கோகோய் தன் ட்விட்டர் பக்கத்தில். “என்னை சஸ்பெண்ட் செய்யுங்கள். ஆனால் நாளை விவாதத்தை நடத்துங்கள்.  உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உங்கள் பொறுப்பு என்ன என்று காட்டுங்கள்.”  என்று எழுதியிருக்கிறார்.தில்லி வன்முறை வெறியாட்டங்கள் குறித்து மக்களவையில் விவாதம் நடத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தபோதிலும், சபாநாயகர் அனுமதி அளித்திட தொடர்ந்து மறுத்து வருகிறார். ஹோலி பண்டிகைக்கு முன்பு நேரம் ஒதுக்க முடியாத என்று கூறிவருகிறார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிகவும் அப்செட் ஆகியுள்ளனர்.