மத்திய அரசு கடந்த மே மாதம் 20 லட்சம்கோடி ரூபாய்க்கான ஊக்க சலுகைதிட்டத்தை அறிவித்தது. இதில் ஊரடங்கால் வேலையிழந்த ஏழை மக்களுக்கு இலவச ரேசன் மற்றும் நிவாரண உதவித்தொகைகள் அறிவிக்கப்படும் என ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் மத்திய அரசு பெரும் முதலாளிகளுக்கு மட்டும் கடன், சலுகைகள் கொடுத்து விட்டு,பெரும் பகுதி மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல்ஒதுங்கிக் கொண்டது.
ஊரடங்கால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நகர்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில்வேலைகளை வழங்க வேண்டுமென அறிவித்தாலும் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 61 ஆயிரத்து500 கோடியிலிருந்து 1 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்புகள் வந்தாலும் கடந்த 2020 ஜுன், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வேலை செய்தோர்களுக்கே இன்னும் கூலி வழங்கப்படாமல் உள்ளது. கடந்த ஜூலை 12 நிலவரப்படி கிராமப்புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் 10.34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மார்ச் மாதத்திற்கு முன்பு 7.78 சதவீதமாக இருந்தது.
விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கலாலும், உற்பத்தி செலவு அதிகரிப்பதாலும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளாலும், விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாய கூலி வேலைகளை நம்பியிருக்கின்ற விவசாய தொழிலாளர்களுக்கும், வேலை இல்லாமல், கூலி கிடைக்காமல் மொத்த பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள்.வேலை அட்டை வைத்துள்ளவர்களுக்கு ஒருகுடும்பத்திற்கு 100 நாட்கள் வேலையோ, சட்டக்கூலிரூ.256, முழுமையாக கிடைப்பதில்லை. முழுக்க முழுக்க மனித உழைப்பை பயன்படுத்தி செய்யவேண்டிய வேலைகளில் இயந்திரத்தை பயன்படுத்தும் கொடுமை நிகழ்கிறது. கடந்த வாரம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், திம்மூர் ஊராட்சியில் நூறுநாள் வேலைத்திட்ட பணியின் போது, அந்த ஊராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக ஜே.சி.பி மற்றும் டிராக்டர் எந்திரங்களை பயன்படுத்தும் போது வேலை செய்து கொண்டிருந்த ஜெயலெட்சுமி (35) என்பவர் மீது டிராக்டர் மோதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை சிதைக்கும் நோக்கத்தில் மாநில அரசின் செயல்பாடு உள்ளது.
தமிழக அரசு வேலை அட்டை வைத்துள்ளவர்களுக்கு 100 நாட்கள் வேலையும், சட்டக்கூலி ரூ.256ம் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் சட்டவிரோதமாக எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை தடுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் 528 பேரூராட்சிகளில் சுமார் 25லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்திலுள்ள பேரூர் பகுதிகள் என்பது முழுக்க கிராமப்புற பகுதிகள் தான் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. பேரூராட்சி பகுதிகளில் பெரும்பகுதி விவசாயம் நடக்கிறது. ஆனாலும்கிராமங்களில் நிலவும் வறுமை வேலையில்லா திண்டாட்டம் இப்பகுதியில் வாழும் மக்களையும் விட்டுவைப்பதில்லை. பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி சட்டம்,2005ன்படி வேலைகள் கொடுக்க வேண்டுமென கடந்த பல ஆண்டுகாலமாக அகில இந்திய விவசாயதொழிலாளர்கள் சங்கம் மற்றும் தமிழக இடதுசாரி இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பரிந்துரைக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது அந்த குழு உரிய பொருளாதார ஆய்வை செய்து, அதன் அறிக்கையை தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளது. அதில் கிராமப்புற வேலை உறுதித் திட்டம் போல நகர்ப்புறத்திலும் ஏற்படுத்தலாம். பெரும் பகுதி மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம் என அக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வரவேற்கிறது.
அதே நேரத்தில் கிராம ஊராட்சிக்கும் நகராட்சிக்கும் இடையிலுள்ள பேரூராட்சி பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் வேலை கேட்டு அக்டோபர் 6ல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சி அலுவலகங்களில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் பல்லாயிரக்கணக்கான ஏழை உழைப்பாளி மக்களின் ஆவேச கோரிக்கை முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது.
கட்டுரையாளர் : எஸ்.சங்கர், மாநிலப் பொருளாளர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்