tamilnadu

img

நாம் எல்லோரும் சந்திரனுக்கு சென்று, ஒளிந்து கொள்ள முடியாது! - பேரா. டாக்டர் ஜெயப்பிரகாஷ் முளியில்

இந்தியாவின் நன்கறியப்பட்ட தொற்றுநோய் இயல் வல்லுநரும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான டாக்டர் ஜெயப்பிரகாஷ் முளியில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு (13.4.2020) அளித்த பேட்டியின் சுருக்கம்

முழுமுடக்கம் என்பது தொற்று பரவலைக் குறைப்பதற்குப் பயன்பட்டுள்ளது. இத்தகைய செயலில் மக்களைப் பங்கேற்கச் செய்வது சிரமம். ஏனெனில் இந்தியர்களில் பெரும்பாலானவர்களுக்கு வைரஸ் பற்றி தெரியவே தெரியாது. ஒருவகையில் இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில், மக்கள் சமூக இடைவெளியைப் பழகிக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். உண்மையில் எல்லோரும் புரிந்து கொண்டு விட மாட்டார்கள். ஆனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நோய்த்தொற்றினை எவ்வாறு குறைக்க முடியும் என்பதை அறிந்திருப்பார்கள். அதற்கு முழுமுடக்கம் தேவைப்படுகிறது. இதில் இரண்டு விஷயங்கள் எய்தப்படவேண்டும். ஒன்று, பரவலைக் குறைப்பது; மற்றொன்று விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

நோக்கம், பரவலைக் குறைப்பது தான்

முழுமுடக்க காலத்தில் இந்த வைரஸை முழுமையாக ஒழித்துவிடலாம் என்று யாராவது நினைத்தால் அது வேடிக்கையானது. இதன் நோக்கம் பரவலைக் குறைப்பதுதான். இது வெற்றியா இல்லையா என்பதை தொடர்ச்சியான ஆய்வுகள்தான் காட்டும். பரவலை ஓரளவு தடுக்க வாய்ப்புள்ளது. மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மருத்துவமனைகளை நாடிவரும் மோசமான நிலைமையைக் கையாள நம்மை நாமே தயார்படுத்திக் கொள்வதற்கான தருணமாகும் இது இருக்கும். உண்மையில் தொடர்ச்சியான போருக்கு நாம் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும். 

இது ஒரு புது வகையான நோய். இதுபற்றிய எல்லாத் தகவல்களும் கடந்த நான்கு மாதங்களாகத்தான் கிடைக்கின்றன. இந்தியா போன்ற நாட்டில் இந்த வைரஸை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும் என்பது இயலாத காரியம். நியூசிலாந்து போன்ற சிறிய நாடுகள் இதனைக் கட்டுப்படுத்திவிட்டன. அதற்குக் காரணம், அவை அதிக அளவு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்கள்; மக்கள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுபவர்கள். மறுபக்கத்தில் நமது நாடு மிகப் பெரியது. பன்முகத்தன்மை கொண்டது. கல்வியிலும் வருவாயிலும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது. ஒரே நாளில் நம்மால் பயணங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனால் அரசுகளுக்கும் கையறுநிலைதான். இது குறை சொல்வதற்கான நேரமல்ல. நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவரை வெளியே கொண்டு வர வேண்டும். லேசான அறிகுறிகள் உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கவேண்டும்.

சமூகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி

புதிதாக ஒரு வைரஸ் உருவானால் அது எளிதாகப் பரவும். ஏனென்றால் அனைவரும் நோய்க்கு உள்ளாகக்கூடியவர்கள். மேலும் இந்த வைரஸ் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்குத் தொற்றக் கூடியது. உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்யலாம். ஆனால் எவ்வளவு காலம்? ஏதாவது ஒரு கட்டத்தில் அது உங்களைக் கவ்வும். தட்டம்மை, இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ்கள் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்றன. அவை வைரஸ்களை முற்றிலுமாகக் கொன்றுவிடும். அது நமக்கு கிடைத்துள்ள வரம். ஒருவரது உடல் வைரஸைக் கொன்றுவிட்டால், அதன் பிறகு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி அதற்குக் கிடைத்துவிடுகிறது. மற்ற வைரஸ்களைப் போலத்தான் சார்ஸ் கோவ் 2-ம் செயல்பட்டது. அது தனிநபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டிவிட்டது.

அதனுடன் போரிட்டுக் குணமடைந்தவர்கள் அதிலிருந்தே பாதுகாக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள். மக்கள் தொகையில் கணிசமான விகிதாச்சாரத்தினர் ஒரு வைரஸை எதிர்க்கும் சக்தியைப் பெற்றுவிட்டால் அது பெருந்திரள் (சமூக) நோய் எதிர்ப்பு சக்தியாக மாறுகிறது. பிறகு அந்த வைரஸ் வாழ்வது சிரமம். ஏனென்றால், அதற்கு நலிவடைந்த புகலிடம் இல்லாமல் போகிறது. இன்ஃபுளுயன்சா பரவல் தடுப்பிற்கு மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி தேவைப்பட்டது. இது உள்ளூர் நிலைக்கும், தேசநிலைக்கும் பொருந்தும்.

பலர் உயிரிழக்கக் கூடும்

ஆனால் கோவிட் - 19க்கான அளவு என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. புள்ளிவிவர ஆய்வுகளிலிருந்துதான் அதனை அறிய முடியும். இது ஒரு சிறந்த உபாயம் அல்ல என்று சிலர் கூறக்கூடும். ஆனால் இது உபாயம் அல்ல. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொற்று நோயின் இயற்கைப் பயணம் இதுவாகத்தான் இருக்கிறது. ஒரு விஷயம் என்னவென்றால் இந்த நடைமுறை காலத்தில் பலர் உயிரிழக்கக் கூடும். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இதில் அதிகம் பாதிக்கக் கூடியவர்கள். இளைஞர்களிடையே இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருக்கும். இந்த நோய் காரணமாக 1000 இறப்பில் ஒருவர் இளைஞராக இருந்தாலும் கூட, துல்லியமாகக் கணக்கிடும்போது அது முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் இருக்கும். ஏனெனில் நமது மக்கள் தொகை அதிகம். இதனால் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஒளிந்து கொண்டே இருக்க முடியாது

அதேசமயம் நீங்கள் ஒளிந்து கொண்டே இருந்தால் பாதிப்பும் இருந்து கொண்டே இருக்கும். சிறார்களிடமும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களிடமும் வைரஸ் தொற்று அறிகுறிகள் லேசாக இருக்கும். ஆனால் இறப்பு அதிகமாக இருக்கும். இந்தியாவைப் பொருத்தவரை 55 வயதுக்கும் அதிகம் உள்ளோர் மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம்தான். எனவே மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கை இறப்பு வீதத்தால் பாதிக்கப்படாது. முதியவர்கள் பாதுகாக்கப்பட்டு, பரவல் மெதுவாக இளையோரிடம் அனுமதிக்கப்பட்டால் இது பயன்தரும்.

உதாரணமாகப் பெருந்திரளாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும். அதே சமயம் சமூகமும் தொழில் நிறுவனங்களும் மெல்ல மெல்ல செயல்பட அனுமதிக்க வேண்டும். நோய்த்தொற்றால் இளைஞர்களில் பெரும்பாலோர் குணமடைந்து விடுவார்கள். ஆனால் இது மீண்டும் வராது என்று கூற முடியாது. அது ஓராண்டிலோ அல்லது அதற்குப் பிறகோ வரலாம். அதற்குள் அவர்கள் அனைவரையும் பாதுகாக்க நாம் தடுப்பூசியைப் பெற்றிருக்கக் கூடும்.

நேர்காணல்: 
சுமி சுகன்யா தத்தா

தமிழாக்கம்: 
மயிலை பாலு

 


 


 

;