தமிழகத்தின் தொழிலாளி வர்க்க அமைப்புகளின் முன்னணி தலைவர்களாக கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட எத்தனையோ தலைவர்கள் செயலாற்றியிருக்கிறார்கள். சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த மலபாரிலிருந்து தமிழகத்து மக்களை அணி திரட்டுவதற்காக வந்த கே.அனந்தன் நம்பியார், வி.பி.சிந்தன், கே.ரமணி, பி.ராமச்சந்திரன், ஆர்.உமாநாத் ஆகியோரைத் தொடர்ந்து ஆலுவாவிலிருந்து வந்தவர் பி.ஆர்.பரமேஸ்வரன். இவர்களுக்கு பின் சி.ஐ.டி.யு வின் அகில இந்தியத் தலைவராகச் செயலாற்றிய ஏ.கே.பத்மநாபன். இவர்கள் பட்டியலில் கேரளத்தவர்களுக்கும் அதிகம் தெரியாத ஒருவர் உண்டு, அவர் பி.வி ராம்தாஸ். இந்தியா முழுவதும் பயணம் செய்து ரயில்வே தொழிலாளர்களின் போராட்டங்களை வழிநடத்திய பி.வி.ராம்தாஸ்க்கு 90 வயது நிரம்பியுள்ளது. ராமதாஸின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை நாம் கட்டாயம் அறிய வேண்டும்.
ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்தபின் அந்த கண்ணூர் காரர் எதிர்பாராதவிதமாகத் தான் திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே தொழிலாளர் சங்க அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு பொதுச் செயலாளர் பரமசிவம் அவர்களின் ஒரு பிரம்மாண்ட புகைப்படம் இருந்தது. 1941ல் சிறையில் வீரமரணமடைந்தவர் அவர். போராட்டம் நடத்தியதால் பிரிட்டிஷ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். அவர் சிறையில் இறந்ததற்கான காரணத்தை அன்றைய ஆங்கிலேய அரசு வெளியிடவில்லை, தோழர்களிடம் உடலையும் ஒப்படைக்கவில்லை.இருபத்து ஒன்று வயதுக்காரரின் மனது அசைந்தது. வீரமரணங்கள் அவரோடு முடியவில்லை. 1946 செப்டம்பர் ஐந்து அன்று நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின்போது. கொல்லப்பட்ட வீரத்தியாகிகளின் நினைவு சின்னம் அலுவலகத்தின் முன் உள்ளது. பொன்மலை சங்கத்திடலில் கூட்டம் நடைபெற்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் எம்.ராஜூ, ஆர்.ராமச்சந்திரன், தங்கவேலு, கிருஷ்ணமூர்த்தி, தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரமசிவத்திற்குப் பின்னர் பொதுச்செயலாளராக பணியாற்றிய அனந்த நம்பியாரின் உடலில் 18 இடங்களில் துப்பாக்கியின் முனைகளால் குத்தி காயப்படுத்தியிருந்தனர். ஏராளமான செயல்வீரர்கள் கடும் சித்திரவதைக்கு இரையாயினர்.
இந்த வரலாற்று நிகழ்வுகள் அந்த இளைஞனின் ரத்தத்தைச் சூடேற்றியது. இனிவரும்காலம் தனது வாழ்க்கை தொழிற் சங்கத்திற்காக என்று முடிவு செய்தார். ஓசையிட்டு ஓடும் ரயில் போல இந்தியா முழுவதும் போராட்ட தீ பரவியது போன்ற அவரது பயணம் தொடர்ந்தது. ரயில்வே தொழிலாளர் சங் கத்தில் 55 வருடங்கள் ஓய்வறியா பயணம். ஜூலை ஒன்றில் 90வயது நிரம்பும்போதும் வி.பி.ராம்தாஸ் என்ற அந்த போராட்ட வீரர் மனதில் இன்றளவும் போராட்டத்தின் நாதம் நின்றுவிடவில்லை.
சாதி வாலை வெட்டிய துவக்க காலம்-செறுகுன்னில் மேற்கு திசை வீட்டில் கருணாகரன் நாயர், மாதவி அம்மாவுக்குப் பிறந்த மகனுக்கு துவக்கக் காலம் முதலே தந்து பெயரின் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த சாதிவால் பிடிக்கவில்லை. தனது எல்லா ஆவணங்களிலும் சாதிப்பெயரை மாற்றினார். பத்தாம் வகுப்பு வரை செறுகுன்னு உயர்நிலைப்பள்ளியில் படிப்பு. வகுப்புகள் புறக் கணித்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை உட்படுத்திக்கொண்டார். சுதந்திரத்திற்குப் பின் சோசலிச கொள்கையின் பாலும் ஈர்க்கப் பட்டார்.11ம் வகுப்பு கல்வி பெற்ற பின் வருவாய்த் துறையில் வேலை. ரயில்வேவில் பயணச்சீட்டு பரிசோதகராக 21வது வயதில் பணி நியமனமும் கிடைத்தது. அதனால் பாலக்காட்டில் குடியேறினார். திருச்சிராப்பள்ளியில் பயிற்சிக்குப் பின் பொன்மலை சங்க அலுவலகம் சென்று சேர்ந்தது தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. முதலில் தென்னக ரயில்வே ஊழியர் சங்கத்திலும் (சதர்ன் ரயில்வே லேபர் யூனியன்) பின்னர் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு) அமைப்பில் போராட்ட பயணம் தொடர்ந்தது.
பற்றி எரிந்த போராட்ட காலம்
ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கை அடிமைத்தனத்திற்கு சமமாக இருந்தது. போனஸ் கிடையாது, நல உதவிகள் இல்லை, ஓய்வு ஊதியம் இல்லை. இதற்கு எதிராகக் குரல் உயர்த்தக் கூடாது என்ற நிலை. லொக்கோ பைலட்களுக்கும், (ரயில் ஓட்டுநர்கள்) பயர்மான்களுக்கும் வேலைநேரத்தில் எந்த கணக்குமில்லை. 1968ல் இதற்கு எதிராகப் போராட்டம் ஆரம்பித்தாலும் 1974 மே மாதத்தில் ரயில்வே தொழிலாளர்கள் ஒன்றாக அணிதிரண்டனர்.பொதுத்துறையில் வழங்குவது போல் ஊதியம் வழங்க வேண்டும், வேலையின் தன்மைக்கேற்றவாறு பணி உயர்வு வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துத் தான் இப்போராட் டம் நடைபெற்றது.ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தலைவராகக் கொண்ட தேசிய ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. கேரளாவின் 25 சங்கங்களின் போராட்டக் கூட்டுக்குழு கன்வீனராக பி.வி.ராம்தாஸ் தேர்வு செய்யபட்டார். போராட்டத்தின் முன் ஏற்பாடாக ஜார்ஜ் பெர்ணாண்டஸ் சென்னையில் ஒரு சிறப்புக் கருத்தரங்கிற்கு அழைப்பு விடுத்தார்.போராட்டத்தை நசுக்கும் நோக்கில் ஒரு சில சங்கங்கள் வேறு நாளில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஐ.என்.டி.யு.சி இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளாமல் விலகியது. 140 சங்கத்தினர் கலந்து கொண்டனர். சிஐடியு சார்பில் தோழர் உமாநாத் பேசினார். பின்னர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட் டத்திற்கு அழைப்பு விடுத்தனர். ரயில்வே வரலாற்றில் தொழிலாளர்கள் ஒற்றுமையாக நடத்திய முதல் அகில இந்தியப் போராட்டம் இதுவே.
போராட்டத்தை விளக்கி ஜார்ஜ் பெர்ணாண்டஸ் கேரளா பயணம் மேற்கொண்டபோது ராம்தாசும் உடன் சென்றார். பாலக்காடு டிவிஷனில் 90 சதவிகித தொழிலாளர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திராகாந்தி அரசு போராட்டக் காரர்களை ‘மிசா' சட்டத்தைப் பயன்படுத்தி வேட்டையாடியது. கட்சி முடிவுப் படி தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். இருந்தும் தலைமறைவாக இருந்து கொண்டே கேரளா முழுவதும் பயணம் செய்து ரகசிய கூட்டங்கள் நடத்தி தொழிலாளர்களை வேலை நிறுத்த போராட்டத்தில் உறுதியுடன் ஈடுபட வைத்தனர். தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் போராட்டம் கைவிடும் சூழல் ஏற்பட்டாலும், மீண்டும் தொடர் போராட்டங்கள் மூலம் அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க முடிந்தது.
வேலை நீக்கம்
ரயில்வே போராட்டத்தைத் தொடர்ந்து தான் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. தலைமறைவாகத் துண்டுப் பிரசுரங்கள் மக்களிடையே விநியோகம் செய்ததால் பலமுறை போலீஸ் வீட்டை சுற்றி வளைத்ததுண்டு. எர்ணாகுளம் எஸ்.ஆர்.வி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது போலீஸ் சுற்றி வளைத்தது. ஆனால் அவர்கள் வருவதற்கு சற்று முன் தான் இவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். ஆனால் மேடையிலிருந்த பிறரைக் கைது செய்தனர்.பலமுறை வேலை நீக்கம், இதற்கிடையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து திரும்ப வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வேலை வழங்கவில்லை. புதிதாக வேலை தருவதற்குத் தான் முன்வந்தார்கள். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபின் தான் எந்த நிபந்தனையும் இல்லாமல் மீண்டும் வேலை கிடைத்தது.லோகோ ரண்ணிங் ஸ்டாப் ஊழியர் சங்கம் உள்ளிட்ட பிற சங்கங்களுக்காகவும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பல தண்டனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார்.
சுர்ஜித்துடன் வியட்நாமில்
சுர்ஜித் சிபிஐ(எம்) பொதுச்செயலாளராக பணியாற்றும் போது அவருடன் வியட்நாம் சென்றிருக்கிறார். கியூபா நாட்டிற்கு ஆதரவாக நடைபெற்ற ஆசிய மாநாடு வியட்நாமில் நடைபெற்ற போது தான் அவர் தோழர்.சுர்ஜித்துடன் கலந்துகொண்டார்.2012 கட்சி தமிழ் மாநில மாநாட்டின் போது அவரின் 50 ஆண்டுக்கால மக்கள் பணியைப் பாராட்டி கவுரவிக்கப்பட்டார். கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பொன்னாடை அணிவித்தார், ஏ.கே.பத்மநாபன் 50 ஆண்டுக் காலம் பொது வாழ்வில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் நீண்ட தொழிற்சங்க செயல்பாட்டில் ராம்தாஸ்க்கு பெரும் திருப்தியே. தமிழகத்தில் செயல்பட்ட பெரும் தலைவர்களோடு சேர்ந்து பயணிக்க கிடைத்த வாய்ப்பும் ரயில்வேயில் வேலை கிடைத்தபின் பாலக்காடு மாவட்டடக்குழு உறுப்பினராகவும் சிபிஎம் பகுதிக்குழு செயலாளராகவும் செயல்பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் அவரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு செயல்பட வைப்பது என இரு மாநிலக் குழுக்களும் சேர்ந்து முடிவு செய்தது
18 ஆண்டுகள் டிஆர்இயு பொதுச்செயலாளராக, தலைவராக, துணைப் பொதுச்செயலாளராக, துணைத் தலைவராகவும் செயல்பட்டார். Cpim தலைமைக்குழு உறுப்பினர் உமாநாத், யூனியன் பொதுச்செயலாளர் அனந்தன் நம்பியார் போன்றோருடன் யூனியன் நிர்வாகியாகவும் செய்ல்பட்டார்.டிஆர்இயு மாத இதழான தொழிலரசு இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். பாப்பா உமாநாத் அவர்களும் அந்த மாத இதழில் முழுமையாக பணியாற்றினார். சிபிஎம் தமிழ் மாநிலக் குழு உறுப்பினராக 12 வருடகாலம் பணியாற்றினார். சிஐடியு தமிழ் மாநில துணைத் தலைவராகவும், அகில இந்திய செயற்குழு உறுப்பினராகவும் 35 ஆண்டு காலம் சேவை செய்தார்
முழுநேர ஊழியர்
அவர் பணியில் இருக்கும் போதே பி.வி.ராம்தாஸ் முழு நேர ஊழியர் ஆக வேண்டும் என கட்சி கட்டளையிட்டது. அப்போதைய தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளர் ஏ.பாலசுப்ரமணியம் தகவலைத் தெரிவித்த போது 56ம் வயதில் ரயில்வே தலைமை பயண சீட்டு பரிசோதகர் பதவியை ராஜினாமா செய்தார். சங்கத்தின் மாநாட்டில் பி.வி.ராம்தாஸ் இதை வெளிப்படுத்தினார். பொன்மலையிலிருந்து சென்னை சிபிஎம் மாநிலக் குழு அலுவலகம் அவரது பணியிடமாக மாறியது.
மீண்டும் சொந்த ஊரில்
மனைவி தங்கத்தின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து 2015ல் சொந்த ஊருக்கு திரும்பினார். சென்னையில் மனைவியுடன் வசிக்க ஆலோசனைகள் வந்தும் அதற்கான சூழல் இல்லாமல் இருந்தது. 4 ஆண்டுக்காலம் சிகிச்சைக்குப் பின் மனைவி கடந்த வருடம் காலமானார். தற்போது குருவாயூரில் மகள் உஷா, மருமகன் முரளி ஆகியோருடன் வசித்து வருகிறார். சிவராம், பேபி, அசோகன் ஆகியோர் அவரது வாரிசுகளாவர்.
நேரு முதலில் செய்தது...
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் வங்கதேசத்தில் கடும் உணவு பற்றாக்குறை நிலவியது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபின்னர் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் வந்தவுடன் கருப்பு சந்தைக்காரர்களையும், பதுக்கல் காரர்களையும் தூக்கிலேற்றுவோம் என்று நேரு அறிவித்தார். ஆனால் 1946ல் நேரு இடைக்கால பிரதமரானார். அதுபோல் மதராஸ் முதல்வரும் தேர்வுசெய்யப்பட்டார். இந்த இரு அரசுகளும் முதலில் கொலை செய்தது பதுக்கல்காரர்களை அல்ல, மாறாக ரயில்வே தொழிலாளர்களைத்தான்.
தாலி அறுத்த அத்தயம்மாள்
ரயில்வே தொழிலாளர் போராட்டம் பற்றி எரியும் காலம். பொன்மலை பணிமலையின் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர். அத்தையம்மாள் தடுத்தபின்னும் அவரது கணவர் கருங் காலியாக வேலைக்குச் சென்றார். தொழிலாளர் களையும் சங்கத்தையும் வஞ்சித்தவரோடு இனி வாழ்க்கை நடத்த முடியாது எனக் கூறி அத்தயம் மாள் தனது தாலியை அறுத்து கணவரின் முகத் தில் வீசினாள். அந்த வீரப்பெண் பின்னர் அனைவரது அத்தையம்மாவாக மாறினார். பின் அவரை சங்கம் பாதுகாத்தது, வாழ்நாள் முழுதும் சங்க அலுவலகத்திலேயே வாழ்ந்தார். அங்கேயே மரணமும் அடைந்தார்.
பிரிவினை காலம்
மதக்கலவரங்கள் தொடர்கதையாக மாறிய 1947, பிரிவினை காலம். ரயிலில் மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்கின்றனர். இந்துக்கள், இஸ்லாமியர்கள் சீக்கியர்கள் கொலைவாள்களுக்கு இரையாயினர். ரயில் ஓட்டுநர்களும் தாக்குதலுக்கு உள்ளாயினர். எல்லைப்பகுதியில் ரயில்களை ஓட்ட ஆட்கள் இல்லை என்ற நிலை. நேரு எல்லா சங்கங்களுக்கும் ரயில்களை இயக்க வருமாறு வேண்டுகோள்விடுத்தார். இன்றைய டி.ஆர்.ஈ.யு வின் பழைய பெயர் கொண்ட எஸ்.ஆர்.எஸ் சங்கத்தின் செயல் வீரர்கள் தங்களது உயிரை அடகு வைத்து ரயில்களை ஓட்ட முன் வந்தனர்.