tamilnadu

img

சென்னை ஐ.ஐ.டி மாணவி தற்கொலை - பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.எஃப்.ஐ வலியுறுத்தல்

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எஃப்.ஐ) தலைவர் வி.பி.சானு மற்றும் பொது செயலாளர் மயூக் பிஸ்வாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அண்மையில் சென்னை ஐ.ஐ.டி-யில் நடந்த சம்பவம் குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு தனது வருத்தத்தையும், அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், பேராசிரியர் ஒருவர் தான் அவரது தற்கொலைக்கு காரணம் என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஐ.ஐ.டி-யில், மாணவர்கள் தற்கொலை தொடர்பான செய்தி தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து இதுவரை 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உறவினர்கள் மூலமாக இந்த விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தது. இந்த வழக்கில் காவல்துறையினர் மேற்கொள்ளும் விசாரணை திருப்திகரமாக இல்லை. இந்த வழக்கை காவல்துறை மற்றும் ஐ.ஐ.டி நிர்வாகம் அலட்சியமான முறையில் கையாளுவதை, இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பாத்திமா லத்தீப்பின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் மீது சென்னை ஐ.ஐ.டி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு கோருகிறது. ஐ.ஐ.டி போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை தொடர்ச்சியாக நடைபெறுவது கவலையை அளிக்கிறது. இது போன்ற தொடர் தற்கொலைகளை ஆய்வு செய்ய, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் விரைவாக நிபுணர்களின் குழுவை அமைக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

;