tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-6 : கோட்சே யார்? காந்தியை கொன்றது ஏன்?

நூரானியின் நூலில் “ஆர்எஸ்எஸ்சும் காந்தி படுகொலையும்”, “ஆர்எஸ்எஸ் மீது தடை” என்று அடுத்தடுத்து இரு அத்தியாயங்கள் உள்ளன. நாடு சுதந்திரம் பெற்ற ஐந்தே மாதங்களில் தேசப்பிதா காந்தியைப் பறிகொடுத்தோம். “எங்களது ஆட்சியில் உயிர் வாழ்ந்த காந்தி உங்களது ஆட்சி வந்ததுமே மாண்டு போனாரே” என்று ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளின் கேலிக்கு ஆளானோம். அன்றைய சூழல் பற்றியும், கொலைகாரன் கோட்சே பற்றியும்  அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மத அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் எனப் பிரித்து சுதந்திரம் கொடுத்தார்கள் ஏகாதிபத்தியவாதிகள். இதனால் இரு பக்கமும் மதவெறித் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. வகுப்புவாதிகளின் ருத்ர தாண்டவத்திற்கு இந்து, முஸ்லிம் இரு தரப்பும் பாதிக்கப்பட்டது. இரு மதங்களைச் சேர்ந்த அப்பாவி உயிர்கள் பலியாயின, லட்சக்கணக்கான மக்கள் அங்கும் இங்குமாய் இடம் பெயர்ந்தார்கள்.கிடைத்தது நல்வாய்ப்பு என ஆர்எஸ்எஸ் மதப் பகைமையையும், வன்மத்தையும் தூண்டி விட்டது. 1947-48 காலத்தில் அதன் செயல்பாடுகள் பற்றி மிகுந்த பதற்றத்தோடு பிரதமர் நேரு உள்துறை அமைச்சர் படேலுக்கு எழுதிய கடிதங்களை மேற்கோள் காட்டியிருக்கிறார் நூரானி. அவற்றைப் படித்தால் நமது நெஞ்சம் பதறுகிறது. 1947 செப். 30ல் எழுதிய கடிதம் கூறியது: “தில்லியில் மட்டுமல்லாது இதர இடங்களிலும் இப்போது நடக்கும் விவகாரங்களில் ஆர்எஸ்எஸ்சின் கைவரிசை உள்ளது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. அமிர்தசரஸில் அவர்களது நடவடிக்கைகள் மிக வெளிப்படையானவை.

ஆனாலும் ஆர்எஸ்எஸ்சின் பிரபலமான உறுப்பினர்கள் சிறப்பு மேஜிஸ்டிரேட்டுகளாகவும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்”. கொடுமையைப் பார்த்தீர்களா? சங் எப்படி சிவில் வாழ்வில் அன்றே ஊடுருவியிருந்தது என்பது புரிகிறதா?அதே ஆண்டு டிசம்பர் 30ல் படேலுக்கு நேரு எழுதிய இரு கடிதங்களில் இந்த திடுக்கிடும் தகவல்கள் உள்ளன: “அவர்களுக்கு  (ராஜா ஹரிசிங்கின் ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு) நாம் அனுப்பிய ஆயுதங்களை அவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு விநியோகித்திருக்கிறார்கள். ஜம்முவில் முஸ்லிம்களை திட்டமிட்டுக் கொலைசெய்தது ஆர்எஸ்எஸ் எனும் நியாயமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது”. காஷ்மீர் பற்றி கொந்தளித்து பேசும் சங் பரிவாரத்தினர் இது பற்றி வாய் திறப்பதில்லை.
1948 ஜனவரி 5ல் மாகாண முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் நேரு இப்படி எச்சரித்தார்: “சமீபத்திய விவகாரங்களில் ஆர்எஸ்எஸ் ஒரு முக்கிய பங்காற்றியிருக்கிறது. சில பயங்கர மான சம்பவங்களில் அதற்குள்ள தொடர்பு பற்றிய ஆதாரம் கிடைத்துள் ளது. அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்களது மேன்மையான போதனைகள் கண்டு நாம் ஏமாந்து விடக் கூடாது. அவர்களது கொள்கையானது இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது”.

இத்தகைய பின்புலத்தில்தான் நாதுராம் கோட்சே புறப்பட்டான். மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்தவனின் தந்தையார் ஒரு தபால்காரர், சாதாரண குடும்பம். படிப்பு ஏறாமல் பாதியில் விலகியவன் பிழைப்புக்காகத் தையல் வேலை கற்றுக் கொண்டான் அமெரிக்க பாதிரியார்களிடம். அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு 1937ல் சாவர்க்கரின் சீடனானான். அதேநேரத்தில் ஆர்எஸ்எஸ் மீதும் பிரியம் கொண்டான்.1938ல் சாவர்க்கருக்கு அவன் எழுதிய கடிதங்களை “இந்து” ஏடு (21-9-2004) வெளியிட்டது. ஒன்றில் கூறினான்: “ஐயா, தங்களது லட்சியம் இந்துராஷ்டிரம் அமைப்பது. இதே ஆசையை நெஞ்சில் ஏந்திய ஆர்எஸ்எஸ்சின் ஐம்பதாயிரம் கட்டுப்பாடான தொண்டர்கள் இருக்கிறார்கள். பஞ்சாபிலிருந்து கர்நாடகம் வரை பரவியிருக்கும் அவர்களுக்கு இன்னும் கிடைக்காதிருப்பது உங்களது தலைமையும் வழிகாட்டுதலுமே. அவர்கள் அதற்காகக் காத்திருக்கிறார்கள்”. சாவர்க்கரும் ஆர்எஸ்எஸ்சும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே கோட்சேயின் ஆவலாதியாக இருந்தது. “இந்துக்களைத் திரட்டும் சக்தி படைத்த ஒரே அமைப்பு மகாராஷ்டிராவிலும் இந்துஸ்தானத்திலும் ஆர்எஸ்எஸ்சே. உங்களுக்கு சமதையான தலைவர் டாக்டர்  ஹெட்கேவாரே” என்று இன்னொரு கடிதத்தில் குறிப்பிட்டான்.

இந்தக் கடிதங்கள் சாவர்க்கரைத் தலைவராக வரித்துக் கொண்டே ஆர்எஸ்எஸ்சை நோக்கி அவன் சென்றதைத் தெளிவாகக் காட்டுகின்றன. நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே. இவனும் அந்தக் கொலை பாதகத்தில் சம்பந்தப்பட்டு தண்டனை பெற்றவன். சிறையிலிருந்து வெளியே வந்தவன் “நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ்சில் இருந்தோம். நாதுராம், தத்தாத்ரேயா, நான், கோவிந்த் ஆகிய நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதைவிட ஆர்எஸ்எஸ்சில் வளர்ந்தோம் என்றே சொல்ல வேண்டும். அது எங்களுக்கு ஒரு குடும்பம் போல” எனத் தெரிவித்தான் “ஃபிரெண்ட்லைன்” ஏட்டிற்கு (1994 ஜனவரி 15-30) தந்த பேட்டியில்.நாதுராம் கோட்சேக்கும் ஆர்எஸ்எஸ்சிற்கும் சம்பந்தமில்லை என்று பாஜகவின் எல்.கே. அத்வானி கூறியது பற்றி கேட்டதற்கு அவன் கூறினான்: “அப்படிச்சொல்வது கோழைத் தனம் என்று நான் பதிலடி தந்தேன். ‘காந்தியை கொல்லுங்கள்’ என்று ஆர்எஸ்எஸ் தீர்மானம் போடவில்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நாதுராமை எங்களவர் அல்ல என்று சொல்லக் கூடாது. இந்து மகாசபை அப்படிச் சொல்லவில்லை. ஆர்எஸ்எஸ்சில் பவுதிக் கார்யவா (அறிவார்ந்த பணியாள்) ஆக இருந்தபோது நாதுராம் 1944ல் இந்து மகாசபைக்கு வேலை செய்ய ஆரம்பித் தார்”. இதற்கு மேலே நாம் என்ன சொல்வது?ஆனாலும் ஒரு கேள்வி இருக்கிறது. 1948 நவம்பரில் நாதுராம் கோட்சே தனது எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தந்தான். அதில் “ஆர்எஸ்எஸ்சில் ஒரு தொண்டனாகச் சேர்ந்தேன். அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அவசியம் என்று பட்டதால் சங்கத்தை விடுத்து இந்து மகாசபையில் சேர்ந்தேன்” என்று சொல்லியிருந்தான். இது பற்றி கோபால் கோட்சேயிடம் கேட்டபோது அவன் கூறினான்: “காந்தி கொலைக்குப் பிறகு கோல்வால்கரும் ஆர்எஸ்எஸ்சும் பெரும் சிரமத்தில் இருந்த காரணத்தால் அப்படிக் கூறியிருந்தார். ஆனால் ஆர்எஸ்எஸ்சை விட்டு அவர் விலகவில்லை”. கொலைகாரன் பொய்யனாகவும் இரு ந்ததில் ஆச்சரியம் என்ன? உண்மை அவன் உடன்பிறப்பின் வாயிலாகவே வெளிப்பட்டது.

கோபால் கோட்சே மட்டுமல்ல, அவரது பேரன் சத்யகியும்கூட இதை உறுதிப்படுத்தினார் இப்படியாக: “1932ல் சங்லியில் நாதுராம் இருந்த போது ஆர்எஸ்எஸ்சில் சேர்ந்தார். தனது மரணம் வரை அவர் ஒரு பவுதிக் கார்யவா ஆக இருந்தார். அந்த அமைப்பிலிருந்து அவர் வெளியேற்றப்படவும் இல்லை அல்லது அவர் வெளியேறவும் இல்லை”. (எக்னாமிக் டைம்ஸ் 8-9-2016) 1948 ஜனவரி 30ல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். பிப்ரவரி 4ல் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. அதற்கானை அரசின் அறிவிப்பு கூறியது: “நாட்டின் பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தீ வைப்பு, கொள்ளை, வழிப்பறி, கொலை போன்ற வன்முறைச் செயல்களிலும் கள்ளத்தனமாக ஆயுதங்களைச் சேகரிப்பதிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சங்கின் செயல்பாடுகளால் கிளப்பிவிடப்பட்ட, உத்வேகப்படுத்தப்பட்ட வன்முறை துதிக்கு பலரும் பலியானார்கள். அதில் கடைசியாக பலியான மிக அருமையான உயிர் காந்திஜியினுடையது”. அதற்கான வன்முறை துதியை கிளப்பிவிட்டது, சூழலை உருவாக்கியது சங்கின் செயல்பாடுகளே என்பது அரசின் முடிவு. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் சாட்சாத் படேல் என்பது நினைவுகூறத் தக்கது.

கொலை நடந்த இரண்டே நாளில், பிப்.1 அன்றே ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் ஆகஸ்டில் விடுவிக்கப்பட்டிருந்ததால் தனது அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு படேலுக்கு நிரப்பந்தம் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு செப். 11ல் எழுதிய கடிதத்தில் படேல் கூறினார்: “காந்திஜியின் மரணத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ்காரர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்ததாலும், இனிப்புகள் வழங்கியதாலும் மக்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் மீதான எதிர்ப்பு மேலும் தீவிரமானது”.நீதியரசர் ச. மோகன் “தியாக தீபம்” என்றொரு நூல் எழுதியிருக்கிறார். அவர் தியாக தீபம் என்று சொல்வது காந்தியையா அல்லது கோட்சேயையா என்று மயக்கம் வருகிறது. அந்த அளவுக்கு கோட்சே தரப்பு வாதங்களை அடுக்கியிருக்கிறார். அதில் தங்களுக்கான தூக்குத் தண்டனையை கோட்சேயும், ஆப்டேயும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது உள்ளது.

அது: “(15-11-1949 அன்று) உடலாலும் மனத்தாலும்  சுத்தமான நிலையில் அவர்கள் கீழே அமர்ந்து ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் அலுவலகப் பிரார்த்தனையில் உள்ள நான்கு வரிகளைப் படித்தனர். பிறகு பகவத் கீதையில் இரண்டு அத்தியாயங்களைப் படித்தனர். அவர்களில் வாழ்வில் எஞ்சியிருக்கும் குறுகிய நேரத்தில் தாய்நாட்டிற்கான சங்கக் கோட்பாடுகளையும், கீதையில் காணப்பட்ட வகையிலான தங்கள் கடமைகளையும் எண்ணிப் பார்த்தனர். கீதையைக் கையில் வைத்தவாறு தூக்குமேடை ஏறினார்கள்”. நாதுராம் கோட்சே தனது வாழ்வின் கடைசிக் கணம் வரை ஆர்எஸ்எஸ் நினைப்பாகவே இருந்திருக்கிறான். அப்படியெனில் கோபால் கோட்சே சொன்னது சரிதான்! நிற்க, கீதையைக் கொண்டாடுவோர் அது ஏன் இந்தக் கொலைகாரர்களுக்கு பிடித்திருந்தது என்பது பற்றி யோசிக்க வேண்டும்.

இந்த விபரங்கள் எல்லாம் ஒருபுறமிருக்க, காந்தியைப் படுபாவி கோட்சே கொன்றதற்கு சொந்தப் பகையோ, வாய்க்கால் வரப்பு தகராறோ காரணமில்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கொலைக்கு ஒரே காரணம் கொள்கைப் பகை. அன்று நிலவிய வகுப்பு வாதத் தீயை அணைக்க ஒற்றை மனிதராய் காந்தி பாடுபட்டுக் கொண்டிருந்தார். உண்ணாவிரதம் என்று தன்னைத்தானே வருத்திக்கொண்டு மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தார். அது பிடிக்கவில்லை கோட்சேக்கு. அவர் இருக்கும்வரை வகுப்புவாத விஷம் பரவாது என நினைத்தே அவரைத் தீர்த்துக் கட்டினான்.காந்தி மத நல்லிணக்கத்திற்காக நின்றார். கோட்சே மத வெறிக்காக நின்றான். காந்தி என்றால் இந்து மதம். கோட்சே என்றால் இந்துத்துவா வன்மம். இந்தத் தீராத முரண்தான் காந்தியைப் பலி வாங்கியது. இந்துத்துவா எனும் மனுவாத மதவெறி இருக்கும்வரை கோட்சேக்கள் அவதரித்துக் கொண்டேயிருப்பார்கள்.

(தொடரும்)
 

;