tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-4 : “ஃபாசிஸ்ட் ஜடாமுனி”யை சந்தித்தார் மூஞ்சே!

ஆர்எஸ்எஸ் துவக்க கூட்டத்தில் பங்கேற்ற ஐவரில் ஒருவர் பி.எஸ். மூஞ்சே என்பதைக் கண்டோம். இந்து மகாசபையின் தலைவர்களில் ஒருவராகிய அவர்தான் ஹெட்கேவாரின் வழிகாட்டி. இந்த மூஞ்சே ஃபாசிஸத்தின் பிதாமகன் முஸோலினியை நேரில் சந்தித்தார். இது பற்றிய உண்மைகளை ஆவண ஆதாரத்துடன் 2000 ஆம் ஆண்டில் வெளியிட்டார் இத்தாலிய ஆய்வாளர் மார்ஷியா கஸோலரி. அத்தகைய தரவுகளைக் கொண்டு “ஐரோப்பிய ஃபாசிஸ்டு களை நேசித்த ஆர்எஸ்எஸ்” எனும் அத்தியாயத்தை கட்டமைத்திருக்கிறார் நூரானி.

1931ல் லண்டனில் வட்டமேசை மாநாடு முடிந்ததும் மூஞ்சே ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் போனார். போனவருக்கு ஃபாசிஸம் மிகவும் பிடித்துப் போனது. முஸோலினி உருவாக்கியிருந்த பலில்லா எனும் இளைஞர் அமைப்பைப் பார்த்துப் பரவசப் பட்டார். அது பற்றி தனது நாட்குறிப்பில் எழுதினார்: “பலில்லா என்பது இத்தாலியில் ராணுவப் புத்துணர்ச்சியை உருவாக்குவதற்காக முஸோலினியால் உருவாக்கப்பட்டது. இந்தியர்களைப் போல இத்தாலியர்களும் எளிதான, ராணுவத் தன்மையற்ற வாழ்வை இயல்பாகக் கொண்டவர்கள். அவர்கள் அமைதி வாழ்வை விரும்பி போர்க்கலையைப் புறக்கணித்து விட்டார்கள். இதுவே தனது நாட்டின் பலவீனம் என்பதை உணர்ந்திட்ட முஸோலினி இந்த அமைப்பைத் தொடங்கினார்”.

சமாதான வாழ்வு கூடாது, மக்கள் யுத்த பீதியில் இருக்க வேண்டும் என்று முஸோலினி உருவாக்கிய இளைஞர் பட்டாளத்தை வியந்தோதினார் மூஞ்சே. அது ஆயுதம் ஏந்திய ஒரு ராணுவ பாணி அமைப்பு. முஸோலினியினுடைய ஃபாசிஸ கட்சியின் இளைஞர் பிரிவு. அந்தக் கட்சியை எதிர்த்தோர் எல்லாம் இந்த இளைஞர் பட்டாளத்தால் மிரட்டப்பட்டார்கள், விரட்டப்பட்டார்கள். இந்தியாவிலும் இத்தகைய படை தேவை என்று மூஞ்சே ஏங்கியதும் வெளிப்பட்டிருப்பதை நோக்குங்கள். 
1931 மார்ச் 19 அன்று முஸோலினியை சந்தித்தார் மூஞ்சே. அவரிடம் கூறினார்: “இதேபோன்ற  நோக்கங்களுக்காக நானும் ஓர் அமைப்பை ஏற்கெனவே துவக்கியிருக்கிறேன். உங்களது பலில்லா மற்றும்  ஃபாசிஸ அமைப்புகளைப் புகழ்ந்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பொதுமேடையில் பேசுவேன். அவை வெற்றிபெற எனது வாழ்த்துகள்”. 1925ல் துவக்கப்பட்ட ஆர்எஸ்எஸ்சைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரின் இந்த வார்த்தைகள் அதைப் போக்கிவிடுகின்றன: “இந்துக்களிடம் ராணுவப் புத்துணர்ச்சியை ஊட்ட இந்தியாவுக்கு, குறிப்பாக இந்து இந்தியாவிற்கு இது போன்ற அமைப்பு தேவை. சுயேச்சையான சிந்தனையில் பிறந்தது என்றாலும் டாக்டர் ஹெட்கேவார் தலைமையிலான நாக்பூரின் நமது ஆர்எஸ்எஸ் அமைப்பு இத்தகையது. மகாராஷ்டிராவிலும் இதர மாகாணங்களிலும் இந்த அமைப்பை வளர்ப்பதிலும் பரப்புவதிலும் எனது மீதி வாழ்நாளை செலவழிப்பேன்”. ஆக, ஆர்எஸ்எஸ்சானது முஸோலினியின் ஃபாசிஸத்திடமிருந்தும், அதன் அமைப்பிடமிருந்தும் 1930களில் உத்வேகம் பெற்றது என்பது உறுதியாகிறது.

இந்தியா திரும்பிய மூஞ்சே ஆர்எஸ்எஸ்சுடன் இணைக்கப்பட்ட ஒரு ராணுவப்பள்ளியைத் துவக்கினார் என்கிறார் நூரானி. 1934 மார்ச் 31 அன்று ஹெட்கேவாருடனான சந்திப்பில் தனது தாளாத ஆசையை இப்படியாக வெளிப்படுத்தினாராம்: “இந்தியா முழுக்க இந்து மதத்தை ஒரேமாதிரியாகத் தரப்படுத்த இந்து தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளேன்.இந்த திட்டத்தை நிறைவேற்ற முற்காலத்திய சிவாஜி அல்லது இக்காலத்திய இத்தாலி மற்றும் ஜெர்மனியில் உள்ள முஸோலினி அல்லது ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியான ஓர் இந்துவைக் கொண்ட ஸ்வராஜ் வேண்டும். ஆனால், அப்படியொரு சர்வாதிகாரி இந்தியாவில் எழும் வரை நாம் கையைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. அதற்கான விஞ்ஞானபூர்வ செயல்திட்டத்தை உருவாக்கி, அதைப் பரப்ப வேண்டும்”.

இந்த அநியாய ஆசையைப் பார்த்தீர்களா? இந்தியாவிலும் ஒரு முஸோலினி அல்லது ஹிட்லர் வர வேண்டும். ஒரே வித்தியாசம்தான், இவர் இந்து சர்வாதிகாரியாக இருக்க வேண்டும்! வந்து இந்து மதத்தை தரப்படுத்த வேண்டும். எப்படி? தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில்! அது மனுதர்ம சாஸ்திரமே என்று சொல்ல வேண்டியதில்லை. ஐரோப்பாவின் ஃபாசிஸத்தையும் இந்தியாவின் மனுவாதத்தையும் இணைக்கிற விநோதத்தை நோக்குங்கள். அவர் முன்மொழிந்தது மனு வாத ஃபாசிஸம்.
மனு அதர்மவாதம் பிறப்பின் அடிப்படையில் பேதம் விதிப்பது, சாதியாலும் பாலினத்தாலும் பாகுபாடு காட்டுவது என்பதை அறிவோம். ஃபாசிஸம் என்றால் என்ன? 1932ல் “ ஃபாசிஸத்தின் கோட்பாடு” எனும் நூல் எழுதினான் முஸோலினி. அதில் ஒரு பகுதி தத்துவஞானி ஜியோவன்னி ஜென்டைல் என்பவரால் எழுதப்பட்டது. ஆம், ஃபாசிஸத்திற்கும் தத்துவமுலாம் பூச ஒருவர் கிடைத்திருந்தார்! அவர்கள் கூறினார்கள்: “19ஆம் நூற்றாண்டு மார்க்சியம், தாராளவாதம், ஜனநாயகத்தின் நூற்றாண்டு என்றால் 20ஆம் நூற்றாண்டு அதிகாரத்தின், வலதுசாரித்தனத்தின், ஃபாசிஸத்தின் நூற்றாண்டாக இருக்கும். 19ஆம் நூற்றாண்டு தனிமனிதனின் நூற்றாண்டு என்றால் 20ஆம் நூற்றாண்டு அரசின் நூற்றாண்டாக இருக்கும்”.

இதன் அர்த்தம் தெளிவானது. தனிமனித உரிமைகளைப் பறித்து அரசு இயந்திரத்தின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் ஆட்சியமைப்பே ஃபாசிஸம் என்று கூச்சமின்றிச் சொன்னார்கள். ஆளும் வர்க்கங்களின் நிர்வாக சபையே அரசு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த நிர்வாகத்தை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலமாக நடத்துவதற்கும், அதுவும் இல்லாத பச்சை சர்வாதிகாரக் கட்டமைப்பாம்  ஃபாசிஸத்தின் மூலம் நடத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்னதில் பெயரளவுக்காகிலும் மக்களின் ஒப்புதல் பெற வேண்டியிருக்கும், அதற்கான உரிமைகள் தரப்பட வேண்டியிருக்கும். அவையும் இல்லாத காட்டு தர்பார் ஃபாசிச ஆட்சி. அங்கே உழைப்பாளர்கள் மட்டுமல்ல தாராளவாத முதலாளிகளும் ஒடுக்கப்படுவார்கள். உண்மையில் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் கடும் தாக்குதலுக்கு ஆளானார்கள்.அதனால்தான் ஜெர்மன் புராட்டஸ்டென்ட் பாதிரியார் மார்டின் நிமோல்லரின் அந்தக் கவித்துவமிக்க பாவமன்னிப்பு பிறந்தது: “அவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள். நான் எதிர்க்கவில்லை. காரணம் நான் கம்யூனிஸ்டு இல்லை/அடுத்து அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்.  நான் எதிர்க்கவில்லை. காரணம் நான் யூதன் இல்லை/ அடுத்து அவர்கள் தொழிற்சங்கவாதியைத் தேடி வந்தார்கள். நான் எதிர்க்கவில்லை. காரணம் நான் தொழிற்சங்கவாதி இல்லை/அடுத்து அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தார்கள். நான் எதிர்க்கவில்லை. காரணம் நான் கத்தோலிக்கன் அல்ல/அடுத்து அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள். அப்போது, எதிர்க்க ஆளே இல்லை”.

ஃபாசிஸ்டுகளின் கோர முகம் இரண்டாம் உலகப்போர் வெடித்த அந்த 1939க்குப் பிறகுதானே தெரிந்தது என்று சிலர் நினைக்கக்கூடும். அதன் உண்மை சொரூபத்தை அதற்கு முன்பே அம்பலப்படுத்தியது கம்யூனிஸ்டு அகிலம். 1935ல் அங்கே தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் ஆற்றிய உரைகள் ஃபாசிஸ பேராபத்தையும், அதற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம் திரள வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியது.ஜவஹர்லால் நேருவும் அதை அன்றே உணர்ந்திருந்தார். 1936 பிப்ரவரியில் ஸ்விட்சர்லாந்தில் நேருவின் இணையர் கமலா காலமானார். அதற்கு ஆறுதல் சொல்ல வருவதாக ஆள் அனுப்பினான் முஸோலினி. அந்தச் சந்திப்பைத் தவிர்த்து விட்டார் நேரு. சந்திப்பை அவர்கள் ஃபாசிஸ ஆதரவு பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவார்கள் என்பதே காரணம் என்று தனது “இந்திய தரிசனம்” நூலில் குறிப்பிட்டுள்ளார் நேரு.  ஃபாசிஸ்டுகளின் குணமறிந்து ஒதுங்கினார் அவர்.

ஆனால் மூஞ்சேயோ அந்தக் கேடுகெட்ட ஃபாசிஸ குணத்தின் மீது ஆசை கொண்டு அதைத் தழுவினார். முஸோலினியைச் சந்தித்தார். ஐரோப்பிய ஃபாசிஸ்டுகளுக்கும் இந்திய மனுவாதி களுக்கும் இடையே இப்படியாக அன்று ஓர் உறவு மலர்ந்தது. அந்த சித்தாந்தத் தொடர்பு இன்றளவும் வேலைபார்த்தபடியே உள்ளது.தமிழர்களாகிய நமக்கு சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் நினைவுக்கு வருகிறான். அன்றே அவன் “ஃபாசிஸ்ட் ஜடாமுனி” என்று முஸோலினியின் வாழ்வையும், “கப்சிப் தர்பார்” என்று ஹிட்லரின் வாழ்வையும் விமர்சித்து எழுதியவன். நூல்களின் தலைப்புகளே அவர்களைப் பற்றிய அவனின் மதிப்பீட்டை பறைசாற்றும். அவன் எங்கே? வெட்கமில்லாமல் முஸோலினியை சந்தித்து வாழ்த்துச் சொன்ன மூஞ்சே எங்கே? 
உலகைப் போரில் ஆழ்த்தி லட்சக்கணக்கான பேரின் சாவுக்கு காரணமான ஃபாசிஸத்தை முன்மொழிந்த முஸோலினிக்கு வரலாறு என்னவோ சரியான இடத்தைக் காட்டியது. இத்தாலியின் மக்கள் அவனுக்கு மரண தண்டனை தந்து, மிலான் நகரின் பொது இடத்தில் அவனது பிணத்தை தலைகீழாகத் தொங்கவிட்டார்கள். எங்கே தனக்கும் அத்தகைய தண்டனை கிடைக்குமோ எனப் பயந்தே ஹிட்லர் அடுத்த இரண்டு நாளில் தற்கொலை செய்து கொண்டான்.

(தொடரும்)

;