tamilnadu

img

இலங்கைக்கு தேவை துட்ட கமுன அல்ல! - பேராசிரியர் எஸ். இசட் ஜெயசிங்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ல் நடந்து முடிந்து  கோத்தபய ராஜபக்சே 52.25 சதவீத வாக்குகளைப் பெற்றதனால் வெற்றி பெற்ற வராக அறிவிக்கப்பட்டு நவம்பர் 18 அன்று இலங்கையின் 8வது ஜனாதிபதியாக பவுத்தர்களின் புனித பூமியாக நம்பப்படும் அனுராதாபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ருவான்வெலிசாய என்ற புத்தர் கோயில் வளாகத்தில் பவுத்த குருமார்களின் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

சிங்கள மக்களின் வாக்குகள்

இரண்டு கோடிக்கு மேல் மக்கள் தொகையைக்கொண்ட இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களும் சிறுபான்மை தமிழ் மொழி பேசும் மக்களும் கலந்து கொண்ட ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் சிறிலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் ஐக்கியதேசியக்கட்சி கூட்டணி வேட்பாளர் சஜித்பிரேமதாசவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் 13387951 பேர் அதாவது 83 சதவிகித வாக்காளர்கள் செலுத்திய வாக்களிப்பின் முடிவில்  கோத்தபய ராஜபக்சே 6924255 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற; 5564239 வாக்குகளைப்பெற்ற சஜித் பிரேமதாச தோல்வி அடைந்தார். கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோத்த பய  நிர்ணயிக்கப்பட்ட 50 சத வீதத்திற்கு மேல் 2.25 (52.25)சத வீதம் பெற்றிருந்தமையால் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விருப்ப வாக்குகளை எண்ண வேண்டிய தேவை ஏற்படாமல் போய்விட்டது.

மக்களின் வாக்களிப்பு முறையை ஆராய்ந்தால் இலங் கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் சிங்கள மக்கள் அதி பெரும் பான்மையினராக வசிக்கும் 16 தேர்தல் மாவட்டங்களில் 6471413 பேர் கோத்தபயவுக்கு ஆதரவாக வாக்களிக்க சிறு பான்மை தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வசிக்கும் யாழ்ப் பாணம், வன்னி, மட்டக்களப்பு, திக்மதுள்ள, திருகோணமலை, நுவரெலிய ஆகிய ஏனைய தேர்தல் மாவட்டங்களில் மிகவும் குறைந்த அளவான (6-12%) 452842 வாக்குகளை மட்டுமே கோத்தபயவால் பெற முடிந்தது. அதேநேரம் சஜித் இந்த ஆறு தேர்தல் மாவட்டங்களில் மிக அதிகப்படியாக 1430537 (58-83%) வாக்குகளைப் பெற்றுள் ளார். சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 16 தேர்தல் மாவட்டங்களில் சஜித் பெற்ற வாக்குகள் 4133702 ஆகும். இது கோத்தபய அப்பகுதியில் பெற்ற வாக்குகளை விட 2337711 வாக்குகள் குறைவாகும்.

கவலையளிக்கிறது

இவ்வாறு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மக்களின் வாக்களிப்பு முறையை சற்று நுணுக்கமாக ஆராய்ந்தால் கடந்த காலங்களில் நாடாளுமன்றம் உட்பட ஜனாதிபதி தேர்வில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த சிறுபான்மையி னரின் எதிர்பார்ப்பு பொதுஜன பெரமுனவின்(பொது ஜன முன் னணி) நீண்டகால திட்டமிடலால்,கிராமங்கள்,பவுத்த கோயில் கள் ஊடாக  நடந்துள்ள அணி திரட்டல் போன்ற அடிமட்ட யுக்திகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது. இவ்வாறு 22 தேர்தல் மாவட்ட சிங்கள,தமிழ் மக்களின் வாக்களிப்பு முறையை கூர்ந்து கவனித்தால் இலங்கை நுவரெலிய நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்  அறிக்கை யொன்றில் குறிப்பிட்டதைப்போன்று சிறுபான்மை இனத்தின் பெரும்பகுதியினர் இலங்கையில் இனவாதிகள் யார் என அடையாளம் காட்டியுள்ளனர்.அதேபோன்று பெரும் பான்மை இனத்தின் பெரும்பகுதியினர் தாங்கள் யார் என்ப தையும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதே நேரம் சிறுபான்மை சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்லும் பெரும்பான்மை மக்களும் இலங்கை நாட்டில் உள்ளனர் என்ற உண்மையை நிரூபிக்கும் வகையில் சஜித்துக்கு வாக்களித்த சிங்கள பெரும்பான்மை மக்களையும் நாம் நன்றியுடன் நினைவு கூர மறந்து விடக் கூடாது.

வெவ்வேறு எதிர்பார்க்கைகள்

இவ்வாறு பெரும்பான்மையினரும் சிறுபான்மையி னரும் வெவ்வேறு எதிர்பார்க்கைகளின் அடிப்படையில் வாக்க ளித்தமைக்கு பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன. சிறுபான்மை மக்களைப்பொறுத்த வரையில் கோத்தபய ராஜபக்சேவின் கடந்த கால செயல்பாடுகளின் மீது பெரும் அச்சமும் அதிருப்தியும் மேலோங்கி இருந்தது.இவர் 2005 முதல் 2015 வரை  பாதுகாப்புத்துறை செயலராக இருந்த போது இவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரும் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலும் அதன் வடுக்கள் இன்று வரையும் ஆறாப் புண்ணாக தமிழர்கள் இடையே இருப்பதும் அந்த அச்சம் காரணமாகவே அவருக்கு வாக்களிப்பதை தமிழ்மக்கள் தவிர்த்தனர்.மறு புறம் கோத்தபயவும் அவரது சகோதரர் ராஜ பக்சேவும் தங்களது தேர்தல் பரப்புரைகளில் தெரிவித்த தேசபாது காப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் என்ற மோடி பாணி முழக்கம் பெரும்பான்மை சிங்கள மக்களை பெரிதும் கவரலாயிற்று.

ஏப்ரல் 21- குண்டு வெடிப்பு

தன்னால் மட்டுமே நாடு துண்டாடப்படாமல் பாதுகாக்க முடியும் என்று நம்பச்செய்தார்.அதற்கு அவருக்கு பெரும் வாய்ப்பாக இருந்தது ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பு கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்தே றிய பயங்கர குண்டு வெடிப்பும் அதனால் ஏற்பட்ட பல உயிர்ப் பலியுமாகும். ஐஎஸ் தீவிரவாதம் இலங்கையில் நுழைந்து விட்டதோ என மக்கள் பயந்தனர்.மீண்டும் ஒரு உள்நாட்டுப் போர் சூழல் ஏற்படுவதையோ நாடு பிளவுபடுவதையோ மக்கள் விரும்பவில்லை.  சிறிசேன,ரணில் கூட்டரசு மக்களை பாதுகாக்க தவறிவிட்டதாக விமர்சனம் எழுந்தது. தேச பாது காப்பு என திரும்பத்திரும்ப கூறப்பட்டமையால் பெரும்பான்மை சிங்கள மக்களும்   அதனை நம்பி கடந்தகால ராஜபக்சேவின் தவறுகளை மறந்து அவரது தம்பி கோத்தபயவை ஆதரிப்ப தென்ற முடிவுக்கு வரலாயினர்.மேலும் இதுவரை காலம் காலமாக ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரித்துவந்த கிறிஸ்தவர்களும் குண்டு வெடிப்புக்கு பின் பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் முடிவுக்கு வந்தனர்.

2015 ல் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைவர்  மைத்திரி பால சிறிசேன இலங்கை ஜனாதிபதியாகவும் பின்பு  ரணில் விக்ரம சிங்க பிரதமராகவும் தேர்வாகி நடைபெற்ற கடந்த கால ஆட்சி மக்களின் எதிர்பார்க்கைகளை எந்த வகையிலும் நிறை வேற்றாததால் மக்களிடையே அதிருப்தியும் அவ நம்பிக்கை யும் மேலோங்கலாயிற்று. பொருளாதார வளர்ச்சி,இராணு வம்,நாட்டின் உள்நாட்டுப்பாதுகாப்பு,அகதிகள் மறுசீரமைப்பு, விலைவாசி உயர்வு என எல்லா துறைகளிலும் பின்னடைவு காணப்பட்டது.தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவர்களுக்கு அளித்த உறுதி மொழிகள் வெறும் வார்த்தைகளுடன் நின்று விட்டன. இஸ்லாமிய மக்களும் பெரும்பான்மை சமூக இன வாதம் தலை தூக்கும் என அச்சப்பட்டனர்.ஜனாதிபதி சிறிசேனாவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கும் சுமூக உறவு இல்லாது பனிப்போர் நிலை இருந்தமையால் அரசின் செயல்பாட்டில் தேக்க நிலையும் உருவாகி மக்களை அதிருப்தியடையச் செய்தது.  இவ்வாறு சாமானியர்களுக்கு அரசின் மீதான நம்பிக்கை மிகவும் குறைந்து விட அனைத்து காரணிகளும் தேர்தல் வாக் களிப்பில் பிரதிபலிக்கத் தொடங்கின. இதனால் கோத்தபய ராஜபக்சே எதிர்பார்த்த வெற்றியை திட்டமிட்டபடி பெற முடிந்தது.

பீதி அரசியல்

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரால் தோற்று விக்கப்பட்ட ஒருவித “ பீதி அரசியல்’ சூழ்நிலைக்கிடையே இருபெரும் வலது சாரி கட்சிகளுக்கு மாற்றாக மாற்று அரசிய லை முன் வைத்து இனவாதமல்லாத பொருளாதார சமூக  மேம்பாட்டுத்திட்டங்களை எடுத்துரைத்து நாகரீக அரசியலை முன்னிறுத்தி போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன-ஜேவிபி) தலைவர் அநுர திஸநாயக்கா 3.16% வாக்குகள் மட்டுமே பெற்றமை துரதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.வெறுப்பு அரசியல் பிரச்சாரங்களுக்கிடையே ஆக்கப்பூர்வமான ஆரோக்கிய அரசியலை நாகரீகமாக எடுத்துச்சென்ற இவரை மக்கள் ஆதரிக்கத் தவறி விட்டனர். மேலும் தன்னை இலங்கை தமிழர் பிரதிநிதியென அடையாளப்படுத்திக்கொண்டு போட்டியிட்ட முன்னாள் டெலோ இயக்க தலைவர் சிவாஜிலிங்கம் 0.09% வாக்குகளை யும் இஸ்லாமியரான முன்னாள் கவர்னர் ஹிஸ்புல்லா 0.29% வாக்குகளையும் பெற்று அவர்கள் சார்ந்த மக்களால் மிக மோசமாக புறக்கணிக்கப்பட்டதை அறியலாம்.

பாடம் கற்பார்களா?

இவ்வாறு முரண்பட்ட அரசியல் வேட்பாளர்களுக்கிடையே அணி திரட்டல் ஊடாக சிங்கள மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாகியுள்ள கோத்தபயவும் பிரதமராக அறி விக்கப்பட்டுள்ள  மகிந்த ராஜபக்சேவும் தங்களின் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்று புதிய இலங்கையை கட்டி எழுப்ப முன்வர வேண்டும்.

தமிழ்,முஸ்லிம் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற அதிருப்தியை புதிய ஜனாதிபதி கோத்தபய தனது பதவி ஏற்பு விழாவில் குறிப்பிட்டுள்ளார்.தமிழர்களும் இஸ்லாமி யர்களும் சிறுபான்மையினர் என்பதையும் தாண்டி அவர்க ளும் இலங்கை நாட்டின் உரிமையுள்ள தேசிய இனம் என்பதை புதிய ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று பட்ட இலங்கையில் பெரும்பான்மையும் சிறுபான்மையும் இணக்கமான நிலைப்பாட்டை எடுப்பதன் ஊடாகவே அமைதி யான வளமான இலங்கையை உருவாக்க முடியும் என்பதை புதிய ஜனாதிபதி உணர வேண்டும்.தேச பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினரை தீவிரவாதிகளாக சித்தரிப்பதையும் தவிர்க்க வேண்டும். 1983ம் ஆண்டு கொடூரமான இனக்கலவரம், 2009 ம் ஆண்டு  உள்நாட்டுப்போர் என்பவற்றால் சிறு பான்மை மக்கள் மிகப்பெரும் சீரழிவுக்கும் இழப்பீட்டுக்கும் உள்ளாக்கப்பட்ட னர்.இவை சீர் செய்யப்பட வேண்டுமானால் இரு சமூகங்க ளுக்கிடையே அமைதியான சூழ்நிலையையும் பரஸ்பரம் புரித லையும் உருவாக்க வேண்டும்.நாட்டின் நலன் கருதி இந்த இனவாதப் போக்கு என்பது முற்றிலும் களையப்பட வேண்டும்.

அனுராதாபுரத்தில் பதவியேற்றதன் நோக்கம் என்ன?

கோத்தபய தனது பதவி பிரமாண வைபவத்தை இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக கொழும்பு நகருக்கு வெளியில் அனுராதாபுரத்தில் நடத்தியதை தற்செயலானதாக கடந்து போய் விட முடியாது.ராஜராஜ சோழனின் வழிவந்த எல்லாளன் என்ற தமிழ் அரசனை சிங்கள மன்னனான துட்ட கமுன தோற்கடித்து அனுராதாபுரத்தை மீட்டெடுத்து ரஜரட்ட என்ற அரசை நிறுவிய வரலாற்றை நினைவுகூரும் எண்ணத்துடன் இந்த விழா அனுராதாபுரத்தில் நடத்தியதன் மூலம் தன்னை அந்த அரசனுடன் ஒப்பிட முயற்சிக்கும் போக்கு அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப உதவாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

உலக நாடுகள் புதிய ஜனாதிபதி என்ன செய்யப்போகிறார் என்பதை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அண்டை நாடும் நட்பு நாடுமான இந்தியாவும் இலங்கை விஷயத்தில் மிக சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டியது பிராந்திய அமைதிக்கு மிக அவசியமாகும்.அதே நேரம் இலங்கை மீதான தமிழகத்தின் பார்வையும் வரம்பு மீறுவதாக இருந்து விடக்கூடாது.குறிப்பாக தமிழர் என்ற பெயரில் இங்கி ருந்து உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதன் வாயிலாக இலங்கையில் பெரும்பான்மை இனத்தினரிடையே கொந்தளிப்பான நிலையை உருவாக்கிவிடக்கூடாது. தமிழ் தேசியத்தலைவர்களின் பேச்சு அறிக்கை சிங்கள பெரும்பான்மை மக்களிடையே கசப்பையும் வெறுப்புணர்வையும் உண்டாக்கி அதன் விளைவாக இலங்கை தமிழ் மக்களை பெரும் இன்னல் களுக்கு ஆளாக்கிவிடக்கூடாது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த நிலையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தம் உரிமைகளையும் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள தயாராக இருக்கும் சிறுபான்மை மக்க ளையும் தேசிய இனமாகக் கருதி அவர்களுக்கும் அவர்தான் ஜனாதிபதி என்பதை மனதில் இருத்தி அவர்களையும் அரவணைத்துக் கொண்டு வீழ்ந்து கிடக்கும் இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுத்து வளமான அமைதியான இலங்கையை புதிய ஜனாதிபதி உருவாக்க வேண்டும்.  இலங்கைக்கு இன்று தேவைப்படுவது ஒரு லீ குவான் அன்றி துட்ட கமுன அல்ல.

கட்டுரையாளர் : முன்னாள் அரசியல் துறை உதவி விரிவுரையாளர்.இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகம். 
தொடர்புக்கு: jeyasinghsz@hotmail.com






 

;