tamilnadu

img

மின்துறையை பாதுகாக்க வேலை நிறுத்தத்தில் களமிறங்குவோம்... எஸ்.இராஜேந்திரன்

நாடு விடுதலை அடைந்ததும் மின்சார இலாக்காக்கள் (மின் வாரியமாக மாற்றப்பட்டது) மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென இந்தியாவின் முதல் மின்சாரத்துறை அமைச்சர் பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர் விரும்பி அமலாக்கினார். அப்பொழுதுதான் மாநில அரசுகள் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய உற்பத்திக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து தடையில்லாமல் வழங்க இயலும் எனக் கருதினார். இதனால் நாடு முழுவதும் ஐந்தாண்டு திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்து மின்உற்பத்தி நிலையங்கள் அமைத்து மின்சாரத்தைஉற்பத்தி செய்து, விநியோகித்ததின் விளைவுதொழில் வளர்ச்சியடைந்து இலவச மின்சாரம் மூலமாகவும் விவசாயம் ஓரளவு தன்னிறைவு அடைந்தது.

தாய்த் தொழில்
அனைத்துக்கும் தாய்த் தொழிலாக விளங்கிய மின்சாரத்தை நவீன தாராளமயக் கொள்கையினால் மின் உற்பத்தியை தனியாரிடம் விட்டதன் விளைவு இன்று இந்திய மக்கள் தனியார் முதலாளிகள் விநியோகிக்கும் மின்சாரத்தை வாங்குகின்ற நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கி விட்டனர். இந்திய நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 51 சதமானம்இன்றைக்கு தனியார் இடத்தில் உள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக அதானி உருவாகி விட்டார். அவர் முழுக்க முழுக்க மின்சாரம், நிலக்கரி போன்ற துறை களில் ஈடுபட்டு இந்திய பணக்காரர்கள் வரிசையில் 8ஆவது இடத்தை பிடித்து விட்டார். இவரிடத்தில் மின்சாரத்தை கொள்முதல் செய்த மாநிலமின் வாரியங்கள் இன்று கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு யாரோ ஒருவர் பெரும் முதலாளியாக ஆவதற்கு ஆட்சியாளர்கள் பல்லக்கு தூக்குகின்றனர்.

பெரும் முதலாளிகளை ஊக்குவிக்கும் பாஜக அரசு மின்துறையிலும் அவர்களை ஈடுபடுத்த மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் எவ்வித தடங்கலும் இல்லாமல் ஈடுபட புதிய உத்திகளையும் உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது.

51 சதவீதம் தனியாரிடம்
தமிழகத்தின் மின்தேவை தினமும் 16,000மெகாவாட் ஆகும். இதில் 7150 மெகாவாட் மட்டுமே தமிழக மின் வாரியத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. 5,600 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படுகிறது. 3,600 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த 3,600 மெகாவாட்மின்சாரத்திற்கான கட்டணம் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகின்றது. இதனால் மின்சார வாரியத்தின் வருவாயில் ஒரு பெரும் தொகை இதற்கு செலவிடப்படுகிறது.இன்றைக்கு மொத்த மின் உற்பத்தியில் 51 சதவீதம் தனியாரிடம் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 70 சதவீதமாக 80 சதவீதமாக மாறிஇறுதியில் 100 சதவீதம் மின் உற்பத்தியும், விநியோகமும் தனியாரிடத்தில் என்ற நிலை உருவாகும்.

உதய் திட்டத்தால் ஆபத்து
நலிவடைந்த மின் வாரியங்களை முன்னேற்றும் விதமாக ‘உதய்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதில் மின்சார வாரியத்தின் கடன்களில் 75 சதவீதத்தை மாநில அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். 25 சதவீதத்தை மாநில மின்வாரியம் எடுத்துக் கொள்ளவேண்டும். மாநில அரசு 10 முதல் 15 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட நிதிபத்திரங்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில், மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதா மாநில அரசின் உரிமைகள் பறிபோகும் என்று உறுதியாக நின்று உதய்திட்டத்தில் இணைய மறுத்தார். அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிய அன்றைய முதல்வர்ஓ. பன்னீர்செல்வம் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டு மின் வாரியத்தை கடன் நெருக்கடியில் தள்ளிவிட்டார்.
மத்திய அரசின் உதய்திட்டம் 1 தோல்விஅடைந்தது. எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை எனக் கருதி உதய் 2 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி மாநில மின்சார வாரியங்களை துண்டாட நடவடிக்கை எடுத்து வருகிறது.மின்சார வாரியம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் பொதுத்துறை நிறுவனமாக சேவைத்துறை நிறுவனமாக இருந்த காரணத்தால் தான்தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும், விவசாயத்தில் முன்னேற்றமும், வேலை வாய்ப்புகளும் கிடைத்தன.

மறுசீரமைப்பை மின்சாரத் துறையில் அரங்கேற்ற மின்சார சட்டம் 2003, மின்சார சட்டத்திருத்த மசோதா 2018, திறந்தவெளி மின் பரிமாற்றக் கொள்கை ஆகியவற்றை அமலாக்கிவருகிறது. மின் உற்பத்தியும், விநியோகமும்  மாநிலஅரசின் கட்டுப்பாட்டில் மின்வாரியங்கள்மூலம் நடக்க வேண்டும் என்பதை மாற்றி மின் உற்பத்தியையும், விநியோகத்தையும் யார் வேண்டுமானாலும் கையாளலாம் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் விநியோகம் இந்தியன் பவர் கார்ப்பரேசன் தூத்துக்குடி பிரைவேட் என்ற கம்பெனிக்கு 25 ஆண்டுகளுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மின்சார சட்டத்திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டால்....
1.மாநில மின்வாரியத்தின் மின்பாதை களை பயன்படுத்தி தனியார் மின் விநியோ கம் செய்து கொள்ளலாம்.

2. (அ) தனியார் மின் நிறுவனங்கள், அவர்களே மின் நுகர்வோர்களை தேர்வு செய்துகொள்ளலாம். (ஆ) தனியார் மின் உற்பத்தியாளர்கள் வருவாய் கிடைக்கும் நகர்ப்புறத்தை யும், வணிக மின் நுகர்வோர்களையும் தேர்வு செய்து கொள்வார்கள். இதனால் கிராமப்புற விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள் ஆகியோருக்கு மின்சாரம் கிடைப்பது கேள்விக்குறியாகும்.

3. மின்சாரம் என்பது சந்தைப் பொருளாக மாறும். வசதி உள்ளவர்களுக்கே மின்சாரம் என்ற நிலை வரும்.

4. வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் குடிசை களுக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கும் விவ சாயிகளுக்கும் வழங்கும் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்படும்.

5. மின் மசோதா நிறைவேற்றப்பட்டால் மின்துறையை மத்திய அரசே மேலாண்மை செய்யுமாம். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைக்கின்ற செயலாகும்.

6. மின்வாரியத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள் ஆகியோரின் பணித்தன்மையும், வேலையும் போராடிப் பெற்ற சலுகைகளும், சமூகப் பாதுகாப்பான பென்சன் உள்ளிட்டவையும் கேள்விக்குறியாக மாறும்.இந்த சூழ்நிலையில் தமிழக மின்வாரிய ஊழியர்கள் 53,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்தும் கூடுதல் பணிச்சுமையால் அனுதினமும் வேலை செய்து வந்தாலும் மின்துறையை பாதுகாக்கப் போராடி வருகிறோம்.

தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி
உலகமயமும், தாராளமயமும் தனியார்மயமும் ஆளும் அரசுகளால் இந்த தேசத்தில் அமலாக்கி உழைப்பாளி மக்களுடைய உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஒரு சவாலாக இருக்கின்ற நிலையை உருவாக்கி பொருளாதார நெருக்கடியையும் உருவாக்கி வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது.நெருக்கடியான நிலையில் உள்ள முதலாளித்துவ அரசுகள் புதிய பொருளாதாரக் கொள்கையினால் அதில் இருந்து மீள்வதற்கு தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பறிப்பதோடு, பென்சன் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புக் கொள்கைகளை வெட்டிச் சுருக்குகிறது.ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்று சொன்ன நரேந்திர மோடி அரசு ஆறு ஆண்டுகளில் 15 லட்சம் பேருக்கு வேலை கொடுத்து 3.75 லட்சம் தொழிலாளிகளையும் வீட்டுக்கும் அனுப்பியது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணி இடங்களை நிரப்பாமல் இருக்கின்ற தொழிலாளர்களை வைத்து வேலையைச் செய்ய நினைக்கிறது. தினக்கூலி, ஒப்பந்தக் கூலி,அவுட்சோர்சிங் என்ற வகையில் தொழிலாளர்களை நிரந்தரப் பணிகளில் ஈடுபடுத்துகிறது.

மேலும் கல்வி, சுகாதாரம் போன்ற சமூகநலத் திட்டங்களுக்கு நிதியை வெட்டிச் சுருக்குகிறது. அரசின் சேவைத்துறைகளான மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, ரயில்வே, பெட்ரோலியம் போன்றவற்றின் பங்குகளை விற்பதோடு தனியார் மயப்படுத்தவும் அரசு வெகு வேகமாக செயல்பட நினைக்கிறது.இந்திய பெரும் பணக்காரர்களான டாடா, பிர்லா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து கடன் வாங்கிய ரூ.35 ஆயிரம் கோடியை தள்ளுபடிசெய்யப் போவதாக பிரமாண வாக்கு மூலத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. ஆனால் ஏழை விவசாயிகளின் கடனை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கிறது.பொதுத்துறை பங்குகளை விற்பது, தனியார் மயப்படுத்துவது, தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது, சங்கம் அமைக்கும்உரிமையை பறிக்கின்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தொழிலக உறவுகள் சட்ட தொகுப்பு மசோதா 2019ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சம்பள சட்ட தொகுப்பு மசோதா ஆகஸ்ட் 2019ல் சட்டமாக்கப்பட்டது. இது ஏற்கெனவே இருந்தகுறைந்தபட்ச கூலி சட்டம், சம்பள பட்டுவாடா சட்டம், போனஸ் சட்டம், சமவேலைக்கு சம ஊதிய சட்டம் ஆகிய நான்கு சட்டங்களின் தொகுப்பு தான் இது. இதேபோல மின்துறையிலும் தனியார்மயத்தை அமல்படுத்த மின்சாரசட்டத்திருத்த மசோதா 2016ஐ நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

மின் ஊழியர் இன்று வேலைநிறுத்தம்
மின்சார வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். மக்கள் வாங்கும் விலையில் தரமான மின்சாரம், தடையில்லா மின்சாரம் என்ற நிலையை உருவாக்கிட மின் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது தான் சரியானது.எனவே மின்துறையை பாதுகாக்க அரசின் பொதுத்துறையில் உள்ள ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், தொழிற்சங்க உரிமை பாதுகாத்திடவும் மின் ஊழியர்கள் 2020ஆம் ஆண்டு ஜனவரி 8ல் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்போம்.மின் துறையை பாதுகாக்க வேலைநிறுத்தம் செய்வோம்! வரலாறு படைப்போம்!

எஸ்.இராஜேந்திரன்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு மின் ஊழியர் 
மத்திய அமைப்பு (சிஐடியு)

;