tamilnadu

img

வேளாண் நிலம் : மராட்டிய மாநில பெண் விவசாயிகளின் புதிய வேளாண் சாதனை முயற்சிகள்

கடந்த பல மாதங்களாக போதிய அளவில் மழை பெய்யாத காரணத்தால் மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படும் நிலை காணப்படுகிறது. பல நீர் நிலைகள் வறண்டும், விவசாயிகள் போதிய தண்ணீர் மற்றும் தீவனம் இல்லாத காரணத்தால் கால்நடைகளை கூட விற்க வேண்டிய நடைமுறை சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகளவு மழை பெய்தாலும், லத்தூர் மாவட்ட விவசாயிகள் மழை இல்லாமல் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இம்மாவட்ட கரும்பு ஆலைகள் வறட்சி காரணமாக கரும்பு அறைக்கும் பணியை நிறுத்திவிட்டன.இம்மாநிலத்தில் கட்டப்பட்ட “Manjra Dam” முதல்முறையாக வறண்டு போய்விட்டது. சுமார் 800 அடி வரை தோண்டியும் தண்ணீர் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதனால் பல லட்சம் விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள், பெரு நகரங்களை நோக்கி இடம்பெயர்வது (migralion) வாடிக்கை நிகழ்வாகிவிட்டது. இத்தகைய சூழலில் சமுதாய அடிப்படையில் நிலையான வளர்ச்சி என்ற செயல்திட்டத்தைக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான Swayam Srikishan Drayag (SSD) லத்தூர் மாவட்டத்தில் பூகாம்பத்திற்கு பின் செயல்படத் துவங்கியது. இந்த பாதிப்புகளை ஒரு வாய்ப்பாக உருமாற்றி பெண் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை நோக்கி ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வேளாண் சார்ந்த கோழி மற்றும் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு பல வழிகளில் வருமானம் பெறும் வகையில் பண்ணை சார்ந்த தொழில்களில் பெண் விவசாயிகளை ஈடுபடுத்தினர். மேலும் விதை மற்றும் இயற்கை உர தயாரிப்பிலும், பண்ணை கழிவுகளை பயன்படுத்தி நிலத்தின் வளத்தை பெருக்குவதிலும் ஈடுபட வைத்து அவர்களின் உற்பத்தி செலவுகளை வெகுவாக குறைத்தனர். 

சுமார் 72 ஆயிரம் பெண்களை உறுப்பினராகக் கொண்ட இக்கூட்டமைப்பு முயற்சியில் வேளாண்மையில் பெண்களே முடிவு எடுப்பவர்களாகவும், தங்களின் உடல் நலம், உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்த அக்கறையுடன் செயல்படுவதால் கடந்த 2017ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பெருமை மிகுந்த விருதான “Equator prize” பெற்றுள்ளனர். இப்பெண்கள் மிகவும் வறண்ட காலங்களில் கால்நடைகளை விற்பனை செய்யாமல் குறைந்த தண்ணீரில் வளரும் அசேலா தீவனத்தை சாகுபடி செய்து கால்நடைகளுக்கு நல்ல சத்துள்ள பாலை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். 

மேலும் கடன்கள் பெற்று குறைந்தளவு தண்ணீரை கொண்டு இயங்கும் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிநீர் பாசனம் அமைத்து சாகுபடி பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இப்பெண்கள் கூட்டமைப்பில் சில குழுக்கள் பண்ணை கருவிகளை வாடகைக்கு விட்டும் லாபம் சம்பாதித்து வருகின்றனர். மேலும் வருங்காலங்களில் கணவனை இழந்த பெண்களுக்கு பண்ணை கருவிகளை இயக்க பயிற்சி வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளனர். இது ஒரு புறம் இருக்க கடந்த 3 ஆண்டுகளாக நீர் மேலாண்மை கட்டமைப்பு பணிகளையும் செய்து வருகின்றனர். பல பெரிய நிறுவனங்கள் தங்களின் பெரு நிறுவன சமுதாய பொறுப்புணர்ச்சி நிதியில் இருந்து பண உதவி வழங்கி விவசாய பெருமக்களுக்கு உதவி வருகிறது. yahoo நிறுவனம் சுமார் 22 லட்சம் வழங்கியுள்ளது. மேலும் நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோரின் பானி தொண்டு நிறுவனமும், தண்ணீர் சேகரிப்பு விழிப்புணர்வு முயற்சியில் விவசாயிகளுக்கு பெரிதும் உதவி வருகிறது. 

கடந்த 2016 வருடம் வருடாந்திட  தண்ணீர் சேகரிப்பிற்கான சிறப்பு முயற்சிகளுக்கு பரிசும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. மறுபுறம் மரம் வளர்ப்பு திட்டங்களும் கிராமப்புறங்களில் செயல்பாட்டில் உள்ளது. தற்போது பெண் விவசாயிகளின் கிராமங்களில் விதை வங்கிகளை உருவாக்கி தங்களின் பாரம்பரிய விதை சேமிப்பு மற்றும் தங்களிடையே பரிமாறி தங்களின் வேளாண் இடுபொருள் மற்றும் உற்பத்தி செலவுகளை வெகுவாக குறைத்து வருகின்றனர். மேலும் நாட்டு கோழிகள் வளர்ப்பு, வேளாண் கழிவுகளை கொண்டு மண் புழு உரம் தயாரித்தல் பணிகளையும், அவற்றின் விற்பனை மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். தற்போது பெண் விவசாயிகள் இயற்கை சீற்றங்களை தாண்டி கடும் உழைப்பால் மேற்கொண்டுள்ள வேளாண் சார்ந்த முயற்சிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக கிராமப்புறங்களில் நிலவிய பல பிற்போக்கு தடைகளைத் தாண்டி முன்னேறி வருகின்றனர். தங்களின் குடும்பத்திற்கு தேவைப்படும் ஆரோக்கியமான உணவு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை பெற்று தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகின்றனர்.

முனைவர் தி.ராஜ்பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத் துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

;