tamilnadu

img

வேளாண்- தொழிலாளர் சட்டங்களை திரும்பப்பெறுக.... அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஜன.26 அன்று வாகன அணிவகுப்பு....

சென்னை:
வேளாண் சட்டங்களையும் தொழிலாளர் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி ஜனவரி 26 ஆம் தேதியன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இயக்கம் நடைபெறுகிறது. இதுகுறித்து  அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி இயக்கம் நடத்துவதற்காக, தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அனைத்து தொழிற்சங்க அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் ஜனவரி 10 அன்று  தொமுச பேரவை அலுவலகத்தில்  கி. நடராசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில், க.அ.ராஜா ஸ்ரீதர் (எச்எம்எஸ்), மா.பேச்சிமுத்து, எம்.சண்முகம் (தொமுச) ,ஜி.சுகுமாறன் (சிஐடியு), டி.எம்.மூர்த்தி, எம்.ராதாகிருஷ்ணன், மு.சம்பத், டி.இராஜேஸ்வரி (ஏஐடியுசி), பி.அன்பழகன் (ஐஎன்டியுசி),  எம்.திருநாவுக்கரசு (ஏஐசிசிடியு), எஸ்.சசிகுமார், இ.சடையாண்டி (ஏஐயுடியுசி), ஈ.சண்முகவேலு (எல்டியுசி) ,எஸ்.ரத்தினவேலு, எம்.கோவிந்தன் (உழைக்கும் மக்கள் மாமன்றம்) ,இரா.அந்திரிதாஸ் (எம்எல்எப்) ஆகியோர் பங்கேற்றனர்.   

யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூணை இடித்த இலங்கை அரசுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 23 ஆம் தேதியன்று சென்னையில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, கிண்டியில் சின்னமலை ராஜீவ்காந்தி சிலையிலிருந்து   ஆளுநர் மாளிகை நோக்கி நடத்தும் பேரணியில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பங்கேற்பது. அம்பத்தூர் முதல் திருவொற்றியூர், தாம்பரம் இடையிலான பரப்பை சார்ந்தவர்கள் இதில் பங்கேற்க வேண்டும்.  மற்ற மாவட்டங்களில், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தொழில் மையங்களில், 23 ஆம் தேதியன்று தர்ணா போராட்டம் நடத்த வேண்டும். இடம், நேரம் குறித்து அந்தந்த மாவட்ட கூட்டுக் குழுவில் பேசி முடிவு செய்ய வேண்டும். 

ஜனவரி 26 ஆம் தேதியன்று சென்னையில் அரசு சார்பில் நடத்தப்படும் குடியரசு தின   அணிவகுப்பு முடிந்த பின்பு, சென்னை மே தின பூங்கா அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துவது. இதில் மத்திய சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும்.இதர மாவட்டங்களில் குடியரசு தினத்தன்று காலை இருசக்கர வாகன அணிவகுப்பு நடத்தி தேசியக்கொடி ஏற்ற வேண்டும். தேசியக்கொடி ஏற்றும் இடம் மற்றும் அணிவகுப்பு புறப்படும் இடம் ஆகியவற்றை, அந்தந்த மாவட்டத்தின் தன்மைக்கேற்ப அங்கங்கு பேசி முடிவு செய்ய வேண்டும். குடியரசு தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அனைவரும் தேசியக்கொடி ஏந்தியிருக்க வேண்டும். சங்கக் கொடிகளைத் தவிர்க்க வேண்டும். சங்க பேட்ஜ்களை அணிந்துகொள்ளலாம். “வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்டங்களையும் திரும்பப் பெறுக!” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருக்க வேண்டும்.மேற்சொன்ன இயக்கங்கள் பற்றி அந்தந்தப் பகுதியில் உள்ள விவசாய சங்கங்களுக்கு, தகவல் கொடுத்து, விவசாயி தொழிலாளி ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்.பொங்கல் விழா வருவதால் அதற்கு முன்னதாகவே மாவட்டக்குழுக்கள் கூடி திட்டமிட்டு, அனைத்து இணைப்பு சங்கங்களும் ஒருங்கிணைந்து பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மாவட்ட முடிவுகள் குறித்தும், ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் அவரவர் சங்கத் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.