tamilnadu

img

செருப்புக்கேற்றார்போல் காலை வெட்டுவதா?

ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை மூட வேண்டுமென்று ஏற்கனவே மத்திய நிதி ஆயோக் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. இப்போது கஸ்தூரி ரங்கன் குழு முன்வைத்திருக்கும்  வரைவு புதிய கல்விக் கொள்கை இந்த திட்டத்தை அமலாக்குவதாக இருக்கிறது. 

அரைத்த மாவையே அரைப்பதற்கு பதிலாக புதிய சிந்தனையுடன் கல்விக் கொள்கையை உருவாக்கியிருப்பதாக கஸ்தூரி ரங்கன் ‘வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019’ முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அது புதிய சிந்தனை அல்ல மத்திய அரசு முன்னெடுக்கும் புதிய தாராளவாதக் கொள்கை என்பதை குறிப்பிடத்தான் இதனை சுட்டிக் காட்டுகிறேன்.கல்விக் கொள்கை பற்றி ஒருபுறம் கடுமையான விமர்சனம் எழுகிறது. மறுபுறம் கஸ்தூரி ரங்கனும், ஆளும் அமைச்சர்களும் வரைவு அறிக்கையை நியாயப்படுத்தி பேட்டியளித்துள்ளனர். இக்கட்டுரை அறிக்கையின் அனைத்து அம்சங்களைப் பற்றியதுமல்ல. அனைவருக்கும் கல்வி என்பதைப் பற்றித்தான்.‘2030 ஆம் ஆண்டிற்குள் 3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, இலவச, கட்டாய பள்ளிக்கல்வி அளிக்க வேண்டும்’ என அறிக்கை கூறுகிறது, இந்த  நோக்கம் உன்னதமானது. ஆனால் இதை நடைமுறைப்படுத்திட சரியான திட்டம் இந்த அறிக்கையில் இல்லை. 

தனியார்மயமாகும் கல்வி
சுதந்திர இந்தியாவில் தலைசிறந்த கல்வியாளரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி  ராதாகிருஷ்ணன் அளித்த அறிக்கையில் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியை 
பரிந்துரைத்தார். அதனை அமலாக்குவதென அப்போதைய அரசு ஏற்றுக்கொண்டது. இதுவரையில்  இந்த இலக்கு எட்டப்படவில்லை. அண்ணல் காந்தியடிகள், அன்னியர் ஆட்சியின்போதே மாநில கல்வி அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.  ஆந்திராவில் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்த தோழர் பி.சுந்தரய்யா தனது நிலத்தை எல்லாம் தலித் மக்களுக்கு பிரித்துக்  கொடுத்ததோடு கிராமத்தில் ஏழை குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தையும் துவக்கினார்.  தாகூரின் சாந்தி நிகேதன் கல்வி நிலையம் உள்ளிட்டு கொடையாளர்கள் பலர் நாடு முழுவதும் கல்வி  நிலையங்களை  சேவை நோக்கோடு தொடங்கினார்கள்.இன்று கல்வி வணிகப் பொருளாக மாறி பள்ளிக் கல்வி 50 விழுக்காட்டுக்கு மேல் தனியார் கைக்குச் சென்றுவிட்டது. இப்பள்ளிகள்  வணிக ரீதியில் லாப நோக்கோடு இயக்கப்படுகின்றன.  இதுதான் நிலைமை என்றால் வரைவு அறிக்கை சொல்லும் கட்டாய இலவசக் கல்வி எவ்வாறு அமலாக்க முடியும்? 

36 மாநிலங்களில் 676 மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஊராட்சிகளிலும் 6 ஆயிரம் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று கள ஆய்வு செய்ததாக குறிப்பிடுகிறது கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு. மாணவர்களின்
எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்ட பள்ளிகளையும் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் 2 மடங்கு 3 மடங்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பள்ளிகளை மூடாமல் இயக்குகின்ற நிலைமைகளையும் குழுவினர் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது.“ஓராசிரியர்  மட்டுமே கொண்ட 5 முதல் 8 வரையிலான எண்ணிக்கையில் மாணவர்களோடு இயங்கும் பள்ளிகள் உள்ளன. இதை வைத்துக் கொண்டு என்ன மாதிரியை நாம் கட்டமைக்க முடியும்” என்று ஒரு பேட்டியில் கேட்கிறார் கஸ்தூரி ரங்கன். இதற்கு தீர்வாக அறிக்கையில் அவர் முன்வைக்கும்போது  20க்கும் குறைவானகுழந்தைகள் படிக்கும் பள்ளிகளை ‘பொருளாதார சாத்தியம் இல்லாத’ பள்ளிகள் என வகைப்படுத்தி அவற்றை மூடிவிடலாம் என்றும் கூறுகிறார். 

காவு கொடுக்கப்படும் கல்வி உரிமை
மாற்றாக பல கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கல்வி வளாகம் ஏற்படுத்தி அங்கே குழந்தைகளைப் படிக்க வைக்கலாம் என ஆலோசனை கூறுகிறார். அருகமைப் பள்ளி (ஆரம்பப் பள்ளி என்றால் ஒரு கி.மீ தொலைவில், உயர்நிலைப்
பள்ளி என்றால் 3 கி.மீ. தொலைவுக்குள்) என்பதை வலியுறுத்தும் கல்வி உரிமைச் சட்டம் காவுகொடுக்கப்படுகிறது.மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வுக்குழு அறிக்கையின்படி நாட்டில் உள்ள 40 சதவீதம் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 30க்கும் குறைவாக உள்ளது. வரைவு அறிக்கையின் பரிந்துரையின்படி பார்த்தால்  லட்சத்திற்கும் அதிகமான அரசுப்பள்ளிகளை மூட வேண்டியிருக்கும். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 20க்கும் குறைவாக மாணவர்கள் படிக்கின்ற பள்ளிகள் 320 உள்ளன. இதனடிப்படையில் பார்த்தால் சராசரியாக மாநிலம் முழுவதும் 9 ஆயிரம் பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. அரசுப்பள்ளிகளில் பெரும்பான்மை தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள்தான் படிக்கின்றனர். இத்தகைய அரசுப் பள்ளிகளை மூடுவது கிராமப்புற, நகர்ப்புற ஏழைக்  குழந்தைகளின் கல்வியை கேள்விக்குறியாக்கி விடும். இம்முடிவு ஒரு பகுதி மாணவர்களை தனியார் பள்ளிகளை நோக்கித் தள்ளும். இன்னொரு பகுதி மாணவர்களின் கல்வி தடைபடும். அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு, இலவசக் கல்வியை எப்படி அளிக்க முடியும்?. எல்லாம் தனியார்மயம் என்ற நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு வடிவம்தான் இந்த கல்விக் கொள்கை.

கேரள அனுபவம்
கஸ்தூரிரங்கன் குழு தனது கள ஆய்வில் கேரளாவுக்கும் சென்றிருப்பார்கள். அந்த மாநிலத்தின் அனுபவத்தை ஏன் சுட்டிக்காட்ட மறந்துவிட்டார்கள்?. 2016-17 முதல் 2018-19 வரையிலான மூன்று கல்வியாண்டுகளில் ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் என 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளிகளை விட்டு வெளியேறிஅரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளது  கஸ்தூரி ரங்கன் குழுவின் கண்களில் படவில்லையா?. அரசுப்பள்ளிகளை மூடாமல்,  மேம்படுத்திக் காட்ட முடியும் என்பதே கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் அனுபவம்.தமிழகத்திலும், ஆசிரியர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் எடுத்த முயற்சியினால் பல மாவட்டங்களில் அரசு பள்ளிகள் மூடல் தடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் நடுநிலைப்பள்ளி, மதுரை ஒத்தக்கடை ஆரம்பப்பள்ளி,  புதுக்கோட்டை நகரம் காந்திபுரம் உயர்நிலைப்பள்ளி, நெடுவாசல் ஆரம்பப்பள்ளி, கோவை ராமம்பாளையம் ஆரம்பப்பள்ளி, கடலூர் பில்லாளித்தொட்டி ஆரம்பப்பள்ளி, கரூர் மாவட்டம் க.பரமத்தி ஆரம்பப்பள்ளி  போன்றவை நல்ல உதாரணங்கள்.

ஏற்கனவே, சென்னையில் மாநகராட்சி / அரசுப் பள்ளிகள் 50க்கும் மேல் மூடப்பட்டிருக்கின்றன.இத்தகைய சூழலிலும், புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளி யில் 2012-13 இல் மாணவர்கள் எண்ணிக்கை 48 ஆக இருந்தது, தற்போது  அதை 282 ஆக உயர்த்தியுள்ளனர். சென்னை புதுப்பேட்டை வரதராஜபுரம் நரியங்காட்டில் உள்ள தொடக்கப்பள்ளியை மூடப்போவதாக பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிர்வாகம் கூறியது.  ஆசிரியர்களும், பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் எடுத்த முயற்சியினால் 2010-2011ல் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 14 ஆகஇருந்தது தற்போது  100-ஐ  எட்டியுள்ளது. முயற்சியெடுத்தால் எதையும் மாற்ற முடியும். நடப்பிலுள்ள நிலைமைகளை மாற்றுவது பற்றி கவலையோடு பரிசீலிக்கும் எவரும் புதிய சிந்தனைகள் அவசியம் என்பதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால்  அந்தசிந்தனை நிதி ஆயோக் சொல்கிற, தனியார்மயத்தை ஊக்குவிக்கிற ஒன்றாக இருக்க முடியாது. அனைவருக்கும் அரசே  தரமான, இலவச, கட்டாயக் கல்வி வழங்குவதற்கு ஏற்ற கல்விக் கொள்கை தேவை. கல்வியை தனியார் மயமாக்கும் கொள்கை முடிவை எடுத்து விட்டு, (நிதி ஆயோக் 2016) அதற்கேற்றார்போல் அறிக்கை தயாரித்துக் கொடுப்பது செருப்புக்கேற்றார் போல் காலை வெட்டுவதாகி விடும்.

தமிழ் இந்து (23.7.2019) ஏட்டில் வெளியான கட்டுரையின் முழுப்பகுதி...

;