நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது பட்ஜெட் உரையில் 9 இடங்களில் காந்திஜியின் பெயரை உச்சரித்துள்ளார். காந்திஜியின் அரசியல் வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதே போல விமர்சனங்களும் உள்ளன. எனினும் மோடி பிரச்சாரகராக இருந்த அமைப்பும் மோடி அரசாங்கத்தை வழி நடத்தும் அமைப்புமான பாசிச ஆர்.எஸ்.எஸ்.க்கு காந்திஜி எப்பொழுதும் ஒரு வலுவான நெருடலாகவே இருந்து வருகிறார். இந்துத்துவா சக்திகள்தான் காந்திஜியை படுகொலை செய்தனர். அந்த தீராத களங்கம் இன்னும் அவர்களை துரத்துகிறது. காந்திஜியின் பிம்பத்தை சுவீகரிக்கும் அதே வேளையில் அவரது வாழ்நாள் செய்தியான இந்து- முஸ்லிம் ஒற்றுமையை சிதைக்க வேண்டும் என்பதே மோடி அரசாங்கத்தின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. மத ஒற்றுமையை வலியுறுத்தாமல் காந்திஜியை சுவீகரிக்கும் மோடியின் இத்தகைய அணுகுமுறையை பெரிதளவு ஆட்சேபிக்க வேண்டிய தேவையும் பாசிச ஆர்.எஸ்.எஸ். க்கு எழவில்லை. எனவேதான் “வைஷ்ணவ ஜனா டோ டேனே கஹியே” எனும் குஜராத்தி கீர்த்தனைதான் காந்திஜிக்கு பிடித்த மானது என வெளிநாடுகளில் மோடி அரசாங்கம் பிரபலப்படுத்து கிறது. அதே காந்திஜிக்கு மிகவும் பிடித்த மற்றொரு கீர்த்தனை “இரகுபதி ராகவ ராஜாராம்...” என்பதை மோடி அரசாங்கம் மறைத்துவிடுகிறது. ஏனெனில் தண்டி யாத்திரை யின் பொழுது காந்திஜி பாடிய இந்த கீர்த்தனையில் “ஈஸ்வர அல்லா தேரே நாம்” எனும் மத ஒற்றுமையை வலியுறுத்தும் புகழ் பெற்ற வரிகள் வருகின்றன. மோடி அரசாங்கத்திற்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ். க்கும் இந்த வரிகள் வேப்பங்காய் அல்லவா?
19ம் நூற்றாண்டில் நிலவிய மகத்தான இந்து - முஸ்லிம் ஒற்றுமை
மோடியின் “ஸ்வச் பாரத்” எனும் தூய்மை இந்தியா முழக்கமும் இதே அணுகுமுறையைதான் கொண்டுள் ளது. தூய்மை இந்தியா என்பது காந்திஜியின் செயல்முறை களில் ஒன்று. எனினும் அவரின் அடிப்படை வாழ்நாள் செய்திகள் அதைவிட பன்மடங்கு முக்கியத்துவம் வாய்ந்த பல உள்ளன. அதில் இந்து முஸ்லிம் ஒற்றுமை என்பது மிக முக்கியமான ஒன்று. இந்திய விடுதலைக்கு மிக முக்கிய தேவை இந்து - முஸ்லிம் ஒற்றுமை என்பதை ஆரம்ப கட்டத்திலேயே வலுவாக உணர்ந்தார் காந்திஜி. அதற்காக பல செயல்முறை திட்டங்களை வகுத்தார். ஏனெனில் ஒரு புறம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை அமைப்புகளும் மறுபுறம் முஸ்லிம் மதவாத அமைப்புகளும் தொடர்ந்து இந்த ஒற்றுமையை சீர்குலைக்க செயல்பட்டு வந்தன. இந்த முரண்பாடுகளை மிக சாமர்த்தியமாக பிரிட்டிஷ் காலனி யாதிக்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தது. இந்திய விடுதலைக்கு கட்டியம் கூறிய பல போராட் டங்கள் உருவெடுத்தன. அவற்றில் மிக முக்கியமானது தமிழகத்தில் நடந்த 1801 மருது சகோதரர்கள் போராட்டம்; 1806ல் திப்புவின் புதல்வர்கள் தலைமையில் நடந்த வேலூர் கலகம் மற்றும் கேரளாவில் நடந்த சில முக்கிய போராட்டங் கள் இதில் அடங்கும். பின்னர் நடந்த 1857 கிளர்ச்சி மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் இது வெறும் சிப்பாய் கலகம் மட்டுமல்ல; விவசாயிகளின் பல பிரிவினர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். “இது இந்தியாவின் தேசியக் கிளர்ச்சி” என முதன் முதலில் உலகுக்கு அறிவித்தார் காரல் மார்க்ஸ். 1801/1806/1857 ஆகிய அனைத்து கிளர்ச்சிகளி லும் வெளிப்பட்ட மிக முக்கியமான அம்சம் இந்து முஸ்லிம்களின் மகத்தான ஒற்றுமை ஆகும். 1857 போரில் பங்கேற்ற தாமஸ் லோவே எனும் இராணுவ அதிகாரி ஜான்சி ராணியை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றியவர். அவர் கூறுகிறார்: “சிசுக்கொலையில் ஈடுபடும் இராஜ புத்திரரும், சகிப்புத் தன்மையற்ற பிராமண ரும், சமய வெறி பிடித்த முஸல்மானும், ஆடம்பரத்தில் மிதக்கும் மராட்டியர்களும் ஆகிய அனைவரும் இந்த கலகத்தில் ஒன்று பட்டுள்ளனர். பசுவை கொல்பவனும் பசுவை சாப்பிடுபவனும், பன்றியை வெறுப்பவனும் பன்றியை சாப்பிடுபவனும், அல்லாதான் கடவுள் என்று குரல் எழுப்புபவனும் புரியாத மந்திரங்களை சொல்கின்ற பிராமணனும் இதில் ஒரே அணியில் நின்றுள்ளனர்.” -Lowe Thomas/Central India during the rebellion of 1857 and 1858. இத்தகைய மாபெரும் ஒற்றுமைதான் அன்று நிலவியது. 1857 கிளர்ச்சியை முறியடித்த பிரிட்டிஷ் காலனியாதிக்கம் ஒரு படிப்பினையை பெற்றது. தனது ஆட்சி தொடர வேண்டும் எனில் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதே அந்த ‘படிப்பினை’. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாறிமாறி சலுகைகள் அளித்து முரண்பாடுகளை அதிகரித்தனர். ஒரு புறத்தில் முஸ்லிம் லீக்கின் தேசப்பிரிவினை கோரிக்கையையும் மறுபுறத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை செயல்பாடுகளையும் ஊக்குவித்தனர். 1857ல் நிலவிய இந்து முஸ்லிம் ஒற்றுமையை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெருமளவு சீர்குலைப்பதில் பிரிட்டிஷார் வெற்றி அடைந்தனர் எனில் மிகை அல்ல!
இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு புத்துயிர் அளித்த காந்திஜி
இத்தகைய சூழலில்தான் காந்திஜி விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இந்து - முஸ்லிம் ஒற்றுமை இல்லாமல் விடுதலை சாத்தியமில்லை என்பதை தெளிவாக உணர்ந்தார். அந்த புரிதலை பிற தலைவர் களுக்கும் உருவாக்கினார். இந்த திசை வழியில் அவர் எடுத்த முதல் பெரும் நடவடிக்கைதான் கிலாபத் இயக்கம். கிறித்துவர்களுக்கு எப்படி போப் மற்றும் வாடிகன் அமைப்பு இருந்ததோ அது போல முஸ்லிம்களுக்கு காலிஃபின் வழிகாட்டுதல் மற்றும் கட்டளைகள் அமைந்தன. முதல் உலகப்போரின் பின்விளைவாகவும் துருக்கியில் கமால் அட்டாடர்க்கின் சீர்திருத்த கொள்கைகளின் ஒரு பகுதியாகவும் காலிஃப் அமைப்பு கலைக்கப்பட்டது. இதனை எதிர்த்துதான் கிலாபத் இயக்கம் உருவானது. கிலாபத் இயக்கத்தின் கோரிக்கை நியாயம்தானா எனும் கேள்வி விவாதத்திற்குரியது. காலிஃப் அமைப்பு அகற்றப்பட்டதை எதிர்த்து அரேபியாவில் கூட எதிர்ப்பு இயக்கம் உருவாகாத பொழுது இந்தியாவில் அது ஏன் உருவானது என்பதும் பொருள் பொதிந்த கேள்விதான்! எனினும் இந்த இயக்கத் த்தின் மகத்தான விளைவு என் பது 1857ல் சீர்குலைக்கப்பட்ட இந்து - முஸ்லிம் ஒற்றுமை மீண்டும் உயிர் பெற்றது ஆகும்! இந்த இயக்கத்தின் சிற்பிகள் அலி சகோதரர்களும் காந்திஜியும் ஆவர். இதன் பின்னர் காந்திஜி தொடர்ந்து இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார். இந்த அணுகுமுறைதான் மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஜாமியா மிலியா பல்கலைகழக நிறுவனர் முகம்மது அன்சாரி, பாகிஸ்தான் கோரிக்கைக்கு சவால் விட்ட மதானி, ஷேக் அப்துல்லா, எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான், பலுச்சி காந்தி சமத்கான் போன்ற பல முக்கிய முஸ்லிம் தலைவர்களை பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றுவதை உறுதிப்படுத்தியது. இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக எவ்வித தியாகத்திற்கும் காந்திஜி தயாராக இருந்தார். ஒரு கட்டத்தில் மதத்தின் அடிப்படையில் தேசப்பிரிவினையை தடுக்க ஜின்னாவை முதல் பிரதமராக கூட முன்மொழிந்தார்.
காந்திஜியின் உயிர் தியாகம்
தேசப்பிரிவினையை எதிர்த்த காந்திஜி, தேச விடுதலை நாளன்று சோகத்தில்தான் இருந்தார். விடுதலைக்குப் பின்பு நடந்த மதக்கலவரங்கள் அவரது வேதனையை பன்மடங்கு அதிகரித்தன. அதனால்தான் தன்னந்தனியாக நவகாளி வந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். முன்னர் போல அவரது உண்ணாவிரதம் உடனடியாக கலவரங்களை நிறுத்தவில்லை. எனினும் உண்ணாவிரதம் தொடர்ந்தார். இறுதியில் கலவரங்கள் நின்றன. தனது உண்ணாவிரதத்தை முடிக்கும் பொழுது அபுல் கலாம் ஆசாத் அவர்களின் கைகளால்தான் பழச்சாற்றை வாங்கி அருந்தினார். இந்தியாவை போல பாகிஸ்தானும் எனக்கு தாய் நாடுதான் எனவும் தைரியமாக காந்தி கூறினார். பாகிஸ்தானுக்கு செல்வதற்காக திட்டமிட்ட நேரத்தில்தான் நாதுராம் கோட்சே எனும் இந்துத்துவவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். தனது வாழ்வையும் உயிரையும் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பணயம் வைத்தவர் காந்திஜி. அவரது 150வது பிறந்த நாளை கொண்டாட வேண்டிய கட்டாயம் மோடி அரசாங்கத்திற்கு உருவாகியுள்ளது. அதற்காக “விக்கி பீடியா” பாணியில் “காந்தி பீடியா” எனும் இணைய தளத்தை உருவாக்குவதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் முன்மொழிந்துள்ளார்.
ஏன் காந்திஜி இன்று மோடிக்குத் தேவைப்படுகிறார்?
மோடி ஆட்சியில் இரண்டு கோட்பாடுகள் செயல்படு கின்றன. ஒன்று பாசிச ஆர்.எஸ்.எஸ்.ன் இந்துத்துவா! இன்னொன்று வளர்ச்சி எனும் பெயரில் கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள்! இந்தியா எனும் கருத்தாக்கத்தில் காந்திஜியின் பெயர் இன்னும் வலுவாக நீடிக்கிறது. இந்திய மக்களிடம் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும் இந்தியா எனில் முதலில் நிற்கும் பிம்பம் காந்திஜிதான்! எனவே வளர்ச்சி எனும் கோட்பாடை முன்னெடுத்து செல்லவும் வெளிநாடுகளின் முதலீடை பெறவும் இந்திய மக்களின் ஆதரவை பெறவும் காந்திஜி மோடி அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறார். காந்திஜியை மோடி அரசாங்கத்தால் தவிர்க்க இயலவில்லை. அதே சமயத்தில் பாசிச ஆர்.எஸ்.எஸ். விரும்பாத காந்திஜியின் மத ஒற்றுமை எனும் கருத்தியலை மூடி மறைக்க வேண்டிய தேவையும் மோடி அரசாங்கத்திற்கு உள்ளது. எனவே காந்திஜியின் முக்கிய கருத்தியலை பின்னுக்கு தள்ளிவிட்டு அவரது ஆன்மீகம் அல்லது முக்கியமற்ற கருத்துகளை முன்னெடுப்பது எனும் வஞ்சக அணுகுமுறையை மோடி அரசாங்கம் கைக் கொள்கிறது. காந்திஜியைப் பற்றி சில விமர்சனங்கள் இருந்தாலும் பாசிச ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு போராட்டத்திற்கு காந்திஜி மிகவும் தேவைப்படுகிறார். எனவே மோடி அரசாங்கம் காந்திஜியின் பிம்பத்தை அபகரிக்க எடுக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டிய தேவை மதச்சார்பின்மை சக்திகளுக்கு உள்ளது. மோடி அரசாங்கத்திற்கு தேவைப்படு வதைவிட மத ஒற்றுமை சக்திகளுக்கு காந்திஜி அதிகம் தேவைப்படுகிறார். எனவே காந்திஜியின் மத ஒற்றுமை செய்தியை அவரது 150வது பிறந்த ஆண்டில் வலுவாக முன்னேடுத்து செல்வது நமது கடமை எனில் மிகை அல்ல!