சென்னையில் பிஎஸ்என் எல் அலுவலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
மண்ணடியில் கிருஷ்ணன் கோவில் தெருவில் 5 மாடி கட்டிடத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த அலுவலகத்தின் தரை தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கேபிள்கள், ஆவணங்களில் தீ பற்றியதால் மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அந்த பகுதியே புகை மூட்டம் சூழ்ந்தது.
தகவலறிந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 மாடி கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாகின. மேலும், இந்த தீ விபத்து காரணமாக சென்னையின் பல பகுதிகளில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.