தமிழ்நாட்டில் சுமார் 3,50,000லாரிகள் இயங்கி வருகின்றன. 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பகுதியான லாரி உரிமையாளர்கள் சொந்தமாக லாரிகளை வைத்துதொழிலாளியாகவும், உரிமையாளராகவும், சுயதொழிலாகவும் செய்துவருகின்றனர். பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவே லாரி தொழிலாளர்கள் உள்ளனர்.
மோட்டார் தொழிலில் விபத்தால் அதிக மரணத்தை சந்திப்பவர்கள் லாரி ஓட்டுனர்கள். ஓய்வு, உறக்கமின்றி நாட்கணக்கில் பணிபுரிவதால் இவர்களது ஆயுட்காலம் தேச சராசரியைவிட குறைவு. இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் பணிபுரியும் லாரி ஓட்டுனர்களுக்கு எவ்வித சமூகப் பாதுகாப்பும் கிடையாது.ஒருபுறம் சமுகப்பாதுகாப்பற் நிலை. மறுபுறத்தில் அன்றாடம் சந்திக்கும் அவலத்திற்கு மத்தியில் இவர்கள் பிழைத்து வருகின்றனர். அதிலும் வெளிமாநிலம்செல்லும் லாரி தொழிலாளர் களுக்கு எப்போது எது நடக்கும் என்ற அச்சுறுத்தலிலேயே இவர் களது பயணம் தொடர்கிறது. வெளிமாநிலத்தில் விபத்தானால் மாதக்கணக்கில் சிறையில் இருப்பவர்களுக்கு குடும்பத்தால் கூட உதவ முடியாது. விபத்தால் மரணமடைந்து குடும்பத்தார் இறந்தஉடலைக்கூட பார்க்க முடியாது. மிகவும் பரிதாபமான தொழிலாளர்களாகவே லாரி தொழிலாளர்கள் உள்ளனர்.
ஒரே நாடு, ஒரே நாடு என டமாரம் அடிக்கும் மோடியும், பாஜகவும் சொல்வது வேறு; நடைமுறை வேறு என்பதை வெளி மாநில லாரி தொழிலாளர்களின் அன்றாட வாழ்நிலை தெளிவுபடுத்தும். லாரி ஓட்டுனர்களை ஒன்றிணைத்து நாடுதழுவிய அளவில்சாலை போக்குவரத்து சம்மேளனம் போராடி வருகிறது. அனைத்து மோட்டார் தொழிலாளர்களின் நலனுக்கான இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவோம்.
===எஸ்.கே.தியாகராஜன்===
மாநில உதவி தலைவர்