tamilnadu

img

ஒப்பந்தச்சாகுபடிச் சட்டமா? ஓட்டாண்டியாக்கும் சட்டமா?

“ஒப்பந்த சாகுபடி சட்டம்” என ஒன்றுக்கு அக்டோபர் 30 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து விட்டதாக கூறி, அரசு இதழில் “அரசாணை”யாகவே வெளியிட்டுவிட்டது எடப்பாடி அரசு.  இப்படியான ஒரு சட்ட முன்வடிவு எப்பொழுது தமிழ்நாடு சட்டமன்றத்தில், நிறைவேற்றப்பட்டது? அது மத்திய அரசின் ஒப்புதலுக்கு எப்போது அனுப்பி வைக்கப்பட்டது? இதை சட்டம் வடிவம் பெற எத்தனைமுறை மத்திய அரசிடம், மாநில அரசு படையெடுத்து, அல்லது காவடியெடுத்து சென்றது? எல்லாம் சிதம்பர ரகசியமாக இருக்கிறது. என்னே மின்னல் வேகப்பணி!

விவசாயிகள் உற்பத்தி செய்யும்  பொருட்களுக்கு இச்சட்டத்தால் அமைக்கப்படும் ஒருகுழு விலையை நிர்ணயம் செய்யும். அதன்படி ஒருபயிர் பயிரிடப்படும் முன்பே அதற்கான விலையை அக்குழு ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயம் செய்துவிடும். சாகுபடி முடிந்ததும் அவ்விலைக்கு அப்பொருள் எடுத்துக் கொள்ளப்படும். அடேயப்பா... என்ன அதிசயம்? அக்கறை? என்ன விநோதம்? எழுபது ஆண்டு இந்தியாவில் எங்குமே இல்லாத ஒன்று நமது தமிழ்நாட்டில். ஆம், பழம் நழுவி பாலில் விழுந்தாலோ, அல்லது பருத்தியே புடவையாக காய்த்தாலோ எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். அந்த ஆனந்தத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு ஆனந்தத்தை இந்த சட்டம் ஏற்படுத்திடப் போகிறது என வாதிடுவோர் ஒருபக்கம். 
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அரசு விலைநிர்ணயம் செய்த கரும்பு, நெல் போன்ற ஆதாரவிலை உள்ள பொருள்களுக்குக்கூட, முழுமையான கொள்முதல்விலை கிடைப்பதில்லை; குறிப்பாக கரும்புக்கு பாக்கிகள் கோடிக்கணக்கில் இருக்கிறது; அதைப் பெற அரசுக்கோ அல்லது சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ சட்டரீதியான வழிமுறையோ, அல்லது பாதுகாப்போ இல்லை; ஆனால், இந்த சட்டம் அந்த பாதுகாப்பை, வழிமுறையை அளிக்கிறது” எனக்கூறி, அரசுத் தரப்பை அவர்கள் வரவேற்கிறார்கள். 

ஆனால் உண்மை என்ன? இதில் என்ன பாதிப்பு? 
முதலில் பார்க்க வேண்டியது விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பில் இருந்து அரசு விலகிச் சென்று விடுகிறது. உதாரணமாக டீசல், பெட்ரோல் விலைபோல்தான். அடுத்து சிறு, குறு, நடுத்தர விவசாயம் அழிந்து கார்ப்பரேட் விவசாயமாக மாறிவிடும். ஆம், விளைபொருள் விலையை நிர்ணயம் செய்வது, அதோடு நாம் என்ன பொருளை விளைவிக்க வேண்டும் என்பது உள்ளிட்டு எல்லாவற்றிலும்- குறிப்பாக விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலையும், அதற்கான விதையும் கொடுக்கும் நபரோ, அல்லது நிறுவனமோதான் இவற்றை முடிவு செய்யும். குழு என்பதெல்லாம் வெறும் கண்துடைப்புத்தான். ஆம், இந்த பொருள் உற்பத்தி செய்தால் இந்த விலை என ஒரு மகசூல், அல்லது பல மகசூல் என சாகுபடி பணிக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அது சந்தையில் சீசன் ஏற்றத்தை தடுத்து, விவசாயிக்கு படுபாதகத்தைச் செய்துவிடுகிறது.உதாரணமாக தற்போதைய ஒரு ஒப்பந்த சாகுபடியைப் பார்ப்போம். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு கிராமத்தில் ஒரு காலிபிளவர் நர்சரி இருக்கிறது. அந்த நர்சரியில் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை பிரதான தலைமையகமாக கொண்டும், கர்நாடகா மாநிலம் பெங்களுரூவை துணை தலைமையகமாக கொண்டும் இயங்கும் ஒரு கம்பெனி. 

அந்த கம்பெனிக்கும் மேற்படி நர்சரிக்கும் ஒப்பந்தம். அந்த நர்சரிக்கும் விவசாயிக்கும், கம்பெனிக்கும் ஒப்பந்தம். காளிபிளவர் நாற்றை, அந்த நர்சரியில் பெற்று, விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். முதல் வருடம் ஒப்பந்தப்படி எல்லாம் ஓகே. இரண்டாம் வருடமும் ஓகே. மூன்றாம் வருடம் நர்சரியில் தந்த நாற்று நோய் தாக்கி பயிர் பட்டுப்போய்விட்டது. கடந்த இரு வருடங்களிலும் பருவம் பருவமாக மருந்தும் அடிக்கப்பட்டது. அதுவும் அக்கம்பெனி சிபாரிசு மருந்துதான். விவசாயம் செய்முறையும் கம்பெனி சொல்படித்தான். அதுபோல் மூன்றாம் வருடமும் மருந்து அடிக்கப்பட்டது. மொத்தமாக பட்டுப்போய்விட்டது. இப்போது யாருக்கு நட்டம்? விவசாயிக்கா? நர்சரிக்கா? கம்பெனிக்கா? நர்சரியும், கம்பெனியும் கையை விரித்துவிட்டன. அழிந்துபோன காலிபிளவர் நட்டத்தை- விவசாயத்தை யாராலும் மீட்க முடியவில்லையே! இந்த இடத்தில் இந்த சட்டம் விவசாயிக்கு என்ன செய்யும்? ஒன்றும் செய்யாது; கைகட்டி வேடிக்கைதான் பார்க்கும்.
இந்த ஒப்பந்த சாகுபடி விவசாயத்தால், என் நிலத்தில் என் ஊரைச் சுற்றி இருக்கும் பொதுமக்களுக்கு தேவையான பொருளை உற்பத்தி செய்து, உள்ளூர் சந்தையில் விற்கும் எனது பாரம்பரிய உரிமை பறிபோய்விட்டது. அதுமட்டுமல்லாமல், நான் எதை விவசாயம் செய்ய வேண்டும் என்பதை எங்கோ இருக்கும் ஒரு கம்பெனி தீர்மானிக்கிறது. இங்கேதான் அரசின் பொறுப்பும், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் சிபாரிசும் ஒரு கலங்கரை விளக்கமாக வருகிறது. இது ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல. இருந்தாலும் இன்றைய சூழலில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரை விவசாயிக்கு ஒரளவாவது பாதுகாப்பு அரணாக இருக்கிறது. 

ஆம், “உற்பத்திச் செலவில் 1½ மடங்கு விலையை நிர்ணயம் செய் என்கிறது” அப்பரிந்துரை. அதை நடைமுறைப்படுத்துகிற இந்தியாவிலேயே முதல் மாநிலமாக- விவசாயி மகனாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி முன் வந்திருந்தால் மனதாரப் பாராட்டலாம். ஆனால், இருக்கும் விவசாயத்திற்கே உலை வைக்கும் இந்த ஒப்பந்த சாகுபடி சட்டத்தை எப்படி வரவேற்பது முதல்வரே?இதோடு மட்டுமல்ல; ஆடு, மாடு, கோழி வளர்ப்பு பண்ணை, பால் உற்பத்தி பண்ணை போன்றவையும் இச்சட்டத்தின்கீழ் வந்துவிடுகிறது. இதனால் இவற்றின் சந்தைவிலையை தீர்மானிப்பது அரசும் அல்ல; விவசாயியும் அல்ல; மாறாக கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டும்தான்.இதிலே “இடைத்தரகர் கொள்ளை ஒழியும்” என வாதிடப்படுகிறது. அதுவும் ஒரு ஏமாற்று வித்தையே. இடைத்தரகர் இல்லாத எதுவுமே உலகில் இல்லை. உதாரணமாக மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் ஒரு விவசாயி... குச்சி நறுக்குவது, பாத்திக்கட்டுவது, குச்சி நடுவது, மருந்து அடிப்பது, பழுப்பு இலையை அரக்கி விடுவது, குச்சி (கிழங்கு) பறிப்பது, லாரியில் ஏற்றுவது, எடை போடுவது, கிழங்கு மில்லுக்கு அனுப்புவது போன்ற எல்லா வேலைகளையும் அவன் வாழும் ஊரில் இருக்கும் சிறு குறு விவசாயிகளை வைத்தோ,  விவசாயத் தொழிலாளிகளை வைத்தோ தனிப்பட்ட முறையில் கூலி கொடுத்தோ இன்று விவசாயம் செய்யவே முடியாது. இப்பணிகள் எல்லாம் ஒப்பந்தப்படி அல்லது குத்தகைப்படிதான் நடக்கிறது. 

இதெல்லாம் விவசாயி மகனான முதல்வருக்குத் தெரியாதா? 
இங்கே முக்கியமாக கவனப்படுத்தப்பட வேண்டிய ஒன்று...இவர் சார்பான யாரோ ஒருவர்தான் சேலம் தலைவாசல் பகுதியில் சுமார் ரூ1000 கோடி திட்டத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைப் பண்ணை ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் இன்னும் நிறைய தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்படலாம். இதற்காகவும் முதல்வரின் வெளிநாடு பயணம் அமைந்ததாக கூறப்பட்டது. இதற்கும், கார்ப்பரேட் விவசாய பண்ணை முறைக்கும் வேண்டுமானால் இந்த சட்டம் பயன்படுமே தவிர, ஒருபோதும் தமிழகத்தில் தற்போதுள்ள 93% ஏழை விவசாயிகளுக்கு இது உதவவே உதவாது என உறுதியாகக் கூறலாம். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளும், கூறுவதைப்போல், “அரசு தனது பொறுப்பைத் தட்டி கழித்துவிட்டு, வெறும் பார்வையாளராக இருக்கப் போகிறதா?” என்பதே நம்முன் எழும் மில்லியன் டாலர் கேள்வி. ஆகவே இச்சட்ட அமலாக்கத்தை உடனடியாக நிறுத்தி வைத்துவிட்டு, அனைத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் அழைத்து, அமர வைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து, உண்மையிலேயே விவசாயிகள் நலன்மீது அக்கறை உள்ள அரசாக இருந்தால், அதன்படி செயல்படுவதே சாலச்சிறந்த வழியாகும்.

===பி.தங்கவேலு===
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

;